Friday, 7 August 2009

தமிழும், தமிழரும் – தந்தை பெரியார்

(தந்தை பெரியாரால் எழுதப்பட்ட இச்சிறு நூல் இங்கே மூன்று பகுதிகளாக வலையேற்றம் செய்யப்படுகிறது)

தமிழ் காட்டு மிராண்டி மொழி – ஏன்? எப்படி?


தமிழ் மொழியை நான் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சுமார் 40 ஆண்டுகளாகக் கூறி வருகின்றேன். இடையில் இந்தியை நாட்டுமொழியாகவும், அரசியல் மொழியாகவும் பார்ப்பனரும், பார்ப்பன ஆதிக்க ஆட்சியும் முயற்சிக்கின்ற சந்தர்ப்பங்களில் அதன் எதிர்ப்புக்கு பயன்படுத்திக் கொள்ள தமிழுக்கு சிறிது இடம் கொடுத்து வந்தேன்.


ஆங்கிலத்துக்கு ஆதரவு

ஆயினும் ஆங்கிலமும் தமிழின் இடத்தில் இருக்கத் தகுந்த மொழியாகும் என்று பேசியும், எழுதியும் முயற்சித்தும் வந்திருக்கிறேன்.

அக்காலத்தில் எல்லாம் நம் நாட்டில் ஆங்கிலம் அறிந்த மக்கள் மிக மிகச் சிலரேயாவர். தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த மக்கள் 100க்கு சுமார் 5 முதல் 10பேருக்கும் உட்பட்ட எண்ணிக்கை உடையவர்களாகவே இருந்தாலும் நூற்றுக்கு 75 பேர்கள் போல் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களாகவே இருந்து வருகிறார்கள். ஆனதால் அவர்களிலும் 100க்கு 90 பேர்கள் போல் பகுத்தறிவற்ற மக்களாக இருந்து வந்ததால் அவர்களுக்கு மதப்பற்று, கடவுள் பற்று, பழைய பழக்க வழக்க பற்று, குறிபற்று எப்படி முரட்டுத்தனமான பற்றாக இருந்து வந்ததோ – வருகிறதோ அது போன்றே தமிழ் மொழிப் பற்றும் முரட்டுத்தனமாக இருந்து வந்தது, வருகிறது.


தமிழ்ப்புலவர்கள் நிலை

அதிலும் தமிழ் படித்த தமிழில் புலவர்களான வித்துவான்கள் பெரிதும் 100க்கு 99 பேருக்கு ஆங்கில வாசனையே இல்லாது வெறும் தமிழ் வித்துவான்களாக… தமிழ்ப்புலவராகவே வெகு காலம் இருக்க நேர்ந்து விட்டதால், அவர்களுக்கும், பகுத்தறிவுக்கும் வெகுதூரம் ஏற்பட்டதோடு அவர்கள் உலகம் அறியாத பாமரர்களாகவே இருக்க வேண்டியவர்கள் ஆகிவிட்டார்கள்.


புலவர்களின் மூட நம்பிக்கையும், பிடிவாதமும்

மற்றும் புலவர், வித்துவான் என்ற பெயரால் யார் வாழ்ந்தவராக, வாழ்பவராக இருந்தாலும் அவர்கள் பெரிய மதப் பற்றுள்ளவர்களாகவும், மதவாதிகளாகவும் இருந்து வருவது ஒரு சம்பிரதாயமாகவே ஆகிவிட்டதால் புலவர், வித்துவான் என்றால் மேலும் மூடநம்பிக்கைக் காரர்களாகவும், பிடிவாதக் காரர்களாகவுமே இருக்க வேண்டியவர்களாக ஆகிவிட்டார்கள்.


பகுத்தறியும் தத்துவ விசாரணை அறவே இல்லாதவர்கள்

அதிலும் கொஞ்ச காலத்திற்கு முன்வரையில் புலவர்கள், வித்துவான்கள் என்றால் 100க்கு 90 பிச்சை எடுத்தே அதாவது இச்சகம் பேசி பிச்சை வாங்கும் தொழில் உடையவர் என்று ஆகிவிட்டதால் பொய்யோ, புளுகோ, கற்பனையோ, ஏதேதோ பேசி பணம் பெறுவதிலேயே கவலையுள்ளவர்களாகவே வாழ்ந்ததால் தத்துவ விசாரணை என்பது அவர்களுக்கு வெகுதூரமாகவே இருக்க வேண்டியதாகி விட்டது.

ஆகவே தான் புலவர்கள், வித்துவான்கள் என்பவர்கள் 100க்கு 90 பேர் வரை இன்றைக்கும் அவர்களது வயிறு வளர்ப்பதற்காக அல்லாமல், மற்றெதற்கும் பயன்படுவதற்கு இல்லாதவர்களாகவே ஆகிவிட்டார்கள்.


ஆசிரியர், மாணவர் நிலையும் பகுத்தறிவைத் தரவில்லை

புலவர்களை நீக்கிவிட்டால் மற்ற ஆசிரியர்கள் 100க்கு 90 பேர்கள் பார்ப்பனர்களாகவே சமீப காலம் வரை அமர்ந்திருக்கும்படியாக நம் நாடு இருந்து வந்ததால், அவர்களிடம் பயின்ற எந்த மாணவனுக்கும் பகுத்தறிவு என்றால் எத்தனை படி? என்று கேட்கும் நிலை தான் மாணவர்களது நிலையாக ஆகிவிட்டது.

விஞ்ஞானம் பயிற்றுவிக்கும் ஆசிரியனும், விஞ்ஞானம் பயிலும் மாணவனும் அதில் முதல் வகுப்பாக பாஸ் பெற்ற மாணவனும் கூட நெற்றியில் முக்கோடு சாம்பல் பட்டை அணிந்தவனாக இருந்து கொண்டுதான் பயிலுவான். என்னய்யா அக்கிரமம் நீ சயின்சு படிக்கிறாய்; தத்துவ சாஸ்திரம் படிக்கின்றாய்; நெற்றியில் சாம்பல் பட்டை போட்டிருக்கிறாயே என்றால் சிறிதும் வெட்கமில்லாமல் இதற்கும், அதற்கும் என்னய்யா சம்பந்தம்? நீ என்ன நாத்திகனா? என்று கேட்பான்.

இந்த நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், குறிப்பாக புலவர் வித்துவான்களுக்கும் இவருடன் உழல்வோருக்கும் தமிழை, தமிழ் மொழியைப் பற்றிய அறிவு எவ்வளவு இருக்க முடியும்?


மக்கள் சிந்தனைக்கு முட்டுக்கட்டை

“அயோக்கியர்களுடைய வயிற்றுப் பிழைப்புக்கு கடைசி மார்க்கம் அரசியல் துறை” என்பது ஆக ஒரு மேல்நாட்டு அறிஞர் சொன்னதுபோல் அரசியலில் பிரவேசிக்க நேர்ந்த பல அரசியல்வாதிகள் மக்களின் மடமையை நிறுத்தி அறிந்ததன் காரணமாய் அவர்களில் பலரும் தமிழை தங்கள் பிழைப்பிற்கு ஆதாரமாகக் கொண்டு தாய்மொழிப்பற்று வேஷம் போட்டுக்கொண்டு வேட்டை ஆடுவதன் மூலம் மக்களது சிந்தித்துப் பார்க்கும் தன்மையையே பாழாக்கி விடுகிறார்கள்.


சிந்திக்காத எதிர்ப்புப் பேச்சுக்கள்

இந்த தமிழ் மொழியானது காட்டுமிராண்டி மொழி என்று நான் ஏன் சொல்கிறேன்? எதனால் சொல்லுகிறேன்? என்று இன்று கோபித்துக் கொள்ளும் யோக்கியர்கள் ஒருவர் கூட சிந்தித்துப் பேசுவதில்லை. “வாய் இருக்கிறது எதையாவது பேசி வயிறு வளர்ப்போம்” என்பதைத் தவிர அறிவையோ, மானத்தையோ, ஒழுக்கத்தையோ பற்றி சிறிது கூட சிந்திக்காமலேயே பேசிவருகிறார்கள்.

இப்படிப்பட்ட இவர்கள் போக்குப்படியே சிந்தித்தாலும் “தமிழ்மொழி 3000 – 4000 ஆண்டுகளுக்கு முந்தி ஏற்பட்ட மொழி” என்பதை தமிழின் பெருமைக்கு ஒரு சாதனமாகக் கொண்டு பேசுகிறார்கள்.

நானும் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பதற்கு அதைத்தானே முக்கிய காரணமாய் சொல்லுகிறேன்.

அன்று இருந்த மக்களின் நிலை என்ன? அவன் சிவனாகட்டும், அகஸ்தியனாகட்டும், பாணினியாகட்டும் மற்றும் எவன் தானாகட்டும் இவன்களைப் பற்றி தெரிந்து கொள்ள உனக்கு புத்தியில்லாவிட்டால் நீ தமிழைப் பற்றி பேசும் தகுதி உடையவனா?

பிரிமிட்டிவ் (Primitive) என்றால் அதன் தத்துவமென்ன? பார்பேரியன் (Barbarian), பார்பரிசம் (Barbarism) என்றால் அதன் பொருள் என்ன?

3000 – 4000 ஆண்டுகளுக்கு முன் என்பதற்கு பிரிமிட்டிவ், பார்பேரியன், பார்பரிசம் என்பதற்கும் அக்கால மக்கள் அறிவு, அக்கால மக்கள் நிலை முதலியவை என்பவற்றிற்கும் என்ன பேதம் கற்பிக்க முடியும்?

(தொடரும்) *Download As PDF*

No comments: