Saturday 1 August 2009

14. ஈ.வெ.ராவுக்கு வந்த மர்மக்கடிதம்..

கள்ளுக்கடை மறியலுக்கு நாள் குறிக்கப்பட்டது. ஆங்கில அரசை எதிர்த்து நடக்கும் போராட்டம். அதுவும் விடுதலை வேண்டி அல்ல. அவர்களின் ஆட்சி முறையில் இருக்கும் கோளாறுகளை குறைசொல்லி நடக்கும் போராட்டம். காங்கிரஸ் ஆதரவு அளித்து விட்டாலும் முழுப் பொறுப்பு ஈ.வெ.ராவின் வசம் ஒப்படைக்கப்பட்டது. போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. வழக்கமாக நடைபெறும் சுதந்திரப்போராட்டம் என்றால் பிரிட்டிஷ் அரசு அனுமதி கொடுத்திருக்கும். இது கள்ளுக்கடை மறியல். அவர்களைப் பொருத்தமட்டில் புதுவடிவத்தில் சுதந்திரப் போராட்டத்தை நடத்தப் போகிறார்கள் என்பதாக கருதி இருக்கலாம். அதனாலேயே 144 தடை உத்தரவை போட்டு, போராட்டத்தை தடுத்து நிறுத்திட நினைத்தது ஆங்கில அரசு. ஆனால்.. எதற்கும் அஞ்சாத ஈ.வெ.ரா தொண்டர்களை அணி திரட்டி போராட்டத்தை நடத்தினார். தடையை மீறி மறியல் நடத்தியதற்காக ஈ.வெ.ரா உட்பட பல்லாயிரக்கணக்காணோரை ஆங்கில அரசு கைது செய்து சிறையில் அடைத்தது.

ஊருக்கு மட்டும் உபதேசம் செய்து வாழ்ந்தவர் அல்ல ஈ.வெ.ரா. தம் கொண்ட கொள்கையின்பால் தமது வீட்டினரையும் தயார் செய்து வைத்திருந்தார். பெரியாரின் இல்வாழ்க்கைத்துணை நாகம்மையாரும், பெரியாரின் தங்கை கண்ணம்மாளும் போராட்டத்திற்கு தலைமை ஏற்றனர். நாடு முழுவதும் பெண்களை ஒன்று திரட்டினர்.

பெண்கள் செய்யும் போராட்டம் தானே.. பெரிதாக என்ன செய்து விடப்போகிறார்கள் என்று அலட்சியம் காட்டிய பிரிட்டிஷ் அரசுக்கு அப்போது தெரியாது. மகளிர்சக்தி என்ன என்பது. மறியல் போரில் கலந்து கொள்ளும் பெண்களை கைது செய்ய போலீசார் காத்திருந்தனர். தெரு வாசலில் காத்துக்கிடந்த போலீசாரின் கண்ணில் மண்னைத் தூவி விட்டு பெண்கள் அனைவரும் தனித்தனியாக திரண்டனர். ஊருக்கு வெளியே இருக்கும் கள்ளுக்கடை அருகில் போய் ஒன்று சேர்ந்துகொண்டு கள்ளுக்கடைக்கு எதிரான கோஷங்களை போட்டபடி ஊர்வலம் போகத்தொடங்கினர்.

போலீசாருக்கு செய்தி பறந்தது. அவர்கள் கிளம்பி வருமுன் கள்ளுக்கடையை அடைந்துவிட்ட பெண்கள் கூட்டம் அக்கடையை அழிக்கும் பணியில் ஈடு பட்டது. கள்ளுப் பானைகள் விழுந்து நொறுங்கின. பெயர் பலகையும் அடித்து உடைக்கப்பட்டது. குடிசை பிரித்து எறியப்பட்டது. விற்பனை செய்துகொண்டிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். சுனாமியாய் புறப்பட்ட பெண்கள் படைக்கு ஆவேசம் அடங்க வில்லை. அப்படியே அடுத்த கிராமங்களில் இருக்கும் கள்ளுக்கடையை நோக்கி நகர்ந்தனர். நாகம்மை, கண்ணம்மாள் உட்பட அத்தனை பெண்களிடத்தும் தனியாத கோபம் எரிந்துகொண்டிருந்தது. மேலும் சில கடைகளை அழித்த பிறகு, போலீசார் வந்து சேர்ந்தனர்.

நாகம்மையாரும், கண்ணம்மாளும் கைது செய்யப்பட்டனர். அவர்களுடம் ஆயிரக்கணக்கான பெண்களும் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் பத்திரிக்கை செய்தியாகியது. காங்கிரஸ் வரலாற்றில் முதலில் சமூகப் பிரச்சனைக்கான போராடி சிறை சென்றவர்கள் பெரியாரும், அவர்தம் குடும்பத்தினரும் தான் என்பதை வரலாறு பதிவு கொண்டது.

கள்ளுக்கடை மறியலால் பெண்களை பிரிட்டிஷ் அரசு கைது செய்துவிட்டது என்ற செய்தி காட்டுத்தீபோல வேகமாக பரவியது. நாடெங்கிலும் போராட்டங்கள் வெடித்தன. ஆண்கள், பெண்கள் என்று தனித்தனியாக போராட்டங்களில் மூழ்கினர் மக்கள். ஆங்கில அரசு பயந்து போனது. ஈரோட்டில் போடப்பட்டிருந்த 144 தடை உத்தரவை நீக்கியது. மும்பையில்(பம்பாய்) ஒத்துழையாமை இயக்க செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ளுமாறு காந்தியடிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது அரசு.

அதன் முதல் கோரிக்கையே என்ன தெரியுமா? கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை வாபஸ் வாங்கிக்கொள்ளுங்கள் என்பதாகவே இருந்தது. இதற்கென பண்டித மாள்விய, சங்கரன் நாயர் போன்றவர்களின் முயற்சியால் ஒரு தனி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. மாநாட்டில் காந்தியடிகளிடம் இந்த மறியல் போராட்டத்தை நீங்கள் நிறுத்தச்சொல்லுங்கள் என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில்.. இது தான், “மறியலை நிறுத்துவது என்பது என்கையில் இல்லை. அது ஈரோட்டில் இருக்கும் இரு பெண்கள் கையில் இருக்கிறது. நாகம்மை, கண்ணம்மாள் என்கிற அப்பெண்களைக் கண்டு உங்கள் கோரிக்கைகளை வையுங்கள்”

காந்தியடிகளின் இவ்வார்த்தை இந்திய நாடெங்கும் பரவியது. காந்தியடிகளே கைவிரித்து விட்ட காரியம், யாரோ இரு தமிழ்நாட்டுப்பெண்கள் கையில் தான் இருக்கிறதாம். அவர்களை நேரில் சந்திக்க தலைவர்கள் போகிறார்கள் என்ற செய்தி வேகமாக பரவியது. சில தலைவர்கள் ஈரோட்டுக்கு வந்து இறங்கினர். இவர்கள் வருவதற்கு முன்னமே சிறையில் இருந்த ஈ.வெ.ரா போன்றவர்கள் வெளியே விட்டு விட்டது அரசு. காங்கிரஸின் தலைவர்கள் நேரில் வந்து கேட்டதினால் போராட்டத்தை கைவிடுவதாக ஒப்புக்கொண்டார்கள்.. மகளிர்சக்தி கண்டு பித்துபிடித்து போய் இருந்தது ஆங்கிலேயே அரசு.

1922ம் வருடம் ஈரோட்டில் வந்த பண்டித மோதிலால் நேரு, வித்தல்பாய் படேல், டாக்டர் அன்சாரி போன்ற பெருந்தலைவர்கள் ரயில் நிலையத்தின் அருகில் இருக்கும் தம் இல்லத்தில் தங்கியதின் நினைவாக அவ்வில்லத்தை இந்தி கற்பிக்கும் பாடசாலை ஒன்றை திறந்தார் ஈ.வெ.ரா. முப்பது மாணவர்கள் படிக்கும் வசதி கொண்ட அப்பள்ளியில் பதினைந்து மாணவர்களுக்கான தங்கும், செலவு, உணவு, உடை மற்றும் கல்வி ஆகிய எல்லா செலவுகளையும் தாமே ஏற்றுக்கொண்டார். ஏனோ அப்பள்ளி இரண்டு ஆண்டுகள் மட்டுமே நடந்தது.

நாட்டில் நிலவும் தீண்டாமையை ஒழிப்பு பிரச்சாரத்திலும் போராட்டத்திலும் காங்கிரசாரை இறங்கச்சொன்னார் காந்தியடிகள். காந்தியடிகளின் உத்தரவை ஏற்று முழுமூச்சாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார் ராமசாமி. போராட்டத்தில் ஒரு கட்டமாக தாழ்த்தப்பட்டோர் என்று ஒதுக்கப்பட்ட மக்களுடன் கோவிலுகுள் நுழையும் ஆலயப்பிரவேசம் என்ற போராட்டம் அது. இந்த ஆலயப்பிரவேசம் என்ற போராட்டத்திலும் முதல் வெற்றியை பெற்றவர் ஈ.வெ.ரா தான்.

குளித்தலையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டு, அங்கிருந்தவாரே மதுரை மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளில் தீட்டாமை ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார் ராமசாமி. அந்த பயணம் அதிக நாள் நீடிக்க வில்லை. தீராத வயிற்று நோய் (அல்சர்) அவரை பாடாகப் படுத்தியது. சுற்றுப்பயணத்தை பாதியிலேயே விட்டு விட்டு, எங்கெல்லாம் போய் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற விபரங்களை மற்றவர்களிடம் சொல்லி பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு ஈரோட்டுக்கு திரும்பினார்.

சாப்பாடு நேரம் தவறி சாபிடுவதும், அதிக காரமான உணவும் தான் இப்படியான நோய்கள் வரக்காரணம் என்று சொல்லப்பட்டதால் கண்டிப்புடன் ராமசாமியை கட்டாய ஓய்வில் இருக்கச்சொல்லி விட்டார்கள். படுக்கையிலேயே நாட்கள் கழிந்தன.. அப்போது வீட்டில் யாரும் தெரியாமல் ஒரு ரகசியக் கடிதம் ஈ.வெ.ராவின் கைகளின் கிடைக்கும் வண்ணம் அனுப்பப்பட்டு வந்து சேர்ந்தது.

அந்த கடிதத்தை படித்த ராமசாமி தமக்கு குணமாகி விட்டதாகவும், தாம் ஒரு வேலையாக வெளியூர் செல்லவேண்டும் என்றும் பொய் சொல்லி, பெட்டியில் துணிமணிகளை அடுக்கி வைத்துக்கொண்டு, வயிற்று நோயுடனே கிளம்பிப் போனார். கணவர் செல்வதை வாசலில் இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் நாகம்மை.

அந்த மர்மக்கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது? அதைப் படித்ததும் அவசரம் அவசரமாக எங்கே கிளம்பிப் போகிறார்.. ஈ.வெ.ராமசாமி....?

(தொடரும்) *Download As PDF*

No comments: