Monday 31 August 2009

17. பெரியார் வரலாறு- கடந்து வந்த பாதையை கொஞ்சம் திரும்பிப்பார்ப்போம்..

17. நீதிக் கட்சிக்கு ஆதரவு அளித்த ஈ.வெ.ரா!

காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியே வந்த சமயம் தான் ஈ.வெ.ரா.வின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான காலமாகும். பதினாறு அத்தியாயங்களை கடந்து விட்ட நாம் இனி கொஞ்சம் வேகமாக பயணிக்கப் போகிறோம். அதனால் நாம் கடந்து வந்த அத்தியாயங்களை கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.

***
ஈரோட்டில் பெரிய செல்வந்தரான வெங்கட்டர்நாயக்கருக்கும், தாயார் சின்னத்தாயம்மையாருக்கும் இரண்டாவது மகனாக 1879ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் நாளில் பிறந்தார் ராமசாமி. சிறுவயது முதலே அதிகம் சுட்டிச் சிறுவனாக இருந்ததால் பாட்டியின் வீட்டில் வளர்ந்தார். துடுக்குத்தனம் குறையாததால் தொடர்ந்து படிக்க வைக்காமல் தனது மண்டியிலேயே மூட்டைகளுக்கு பெயர் எழுதும், வேலையை கொடுத்தார் வெங்கட்டர்.

***
கடைக்கு வரத்தொடங்கிய பின்னும் துடுக்குத்தனம் குறையவில்லை. கேள்விகள் கேட்பதில் வல்லவன் என்ற பட்டமே கொடுக்கும் அளவுக்கு ராமசாமியிடம் கேள்விகள் இருந்தது. வலிப வயது. எல்லா செல்வந்தர்களைப் போலவே ராமசாமியும் மைனராக சுற்றினார். பையனின் போக்கில் மாற்றம் வரவேண்டும் எனில் மணம் முடித்து வைப்பது தான் ஒரே வழி என்ற முடிவுக்கு ராமசாமியின் பெற்றோர்கள் வந்தார்கள்.

***

நாகம்மையைத் தான் மணப்பேன் என்று ராமசாமி சொன்னதும் அதிர்ச்சியாக இருந்தது பெற்றோருக்கு. உறவுக்காரப்பெண் தான் என்றாலும் நாகம்மையின் குடும்பம் மிகவும் வறுமையானது. இவர்களோ செல்வச்செழிப்பு மிக்கவர்கள். ராமசாமியின் தாயார் சின்னத்தாயம்மையார் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார். ராமசாமி பிடிவாதமாக சொல்லி விட்டார். கட்டினால் நாகம்மை. இல்லையெனில் கல்யாணமே வேண்டாம்.வேறு வழி இல்லாமல் சம்மதித்தனர். மணம் முடிந்தது.

***

ஆனாலும் ராமசாமியின் போக்கில் பெரியதாக மாற்றம் தெரியவில்லை. ஏதேதோ செய்து.. தமது கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கதமாதிரி நாகம்மையை தயார் செய்து விட்டார் ராமசாமி. கொஞ்ச நாள் கழித்து கருவுற்றார் நாகம்மை. அழகான பெண்குழந்தை பிறந்த்து. அதுவும் ஆறு மாதங்களிலேயே என்ன நோய் என்று புலப்படாத நோய்க்கு பலியாகிப்போனது. அதன் பிறகு அவர்கள் குழந்தயே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர்.

***

மாறாமல் கேள்விகளுடனே சுற்றி வந்துகொண்டிருந்த ராமசாமிக்கும், அவரது தந்தை வெங்கட்டருக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டது. ஈரோட்டில் இருந்து கிளம்பி காசிக்கு போய்ச்சேர்ந்தார் ராமசாமி. பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு சேறு போட எந்த சந்திரமும் இல்லை அங்கு! குப்பைத்தொட்டியில் விழும் எச்சில் இலைகளில் இருந்து பசியாறினார். மொட்டை போட்டு சாமியாராக சிலகாலம் சாப்பட்டிற்கு வழி இன்றி நாட்களை கடத்தினார். பிறகு காசியைவிட்டு பயணமாகி தெற்கு நோக்கி வந்து சேர்ந்தார். எல்லுரில் இருக்கும் ஒரு நண்பரிடம் வந்து சேர்ந்த செய்தியறிந்து தேடியலைந்து கொண்டிருந்த தந்தை வெங்கட்டரே நேரில் வந்து அழைத்துச்சென்றார்.

***

ஈரோட்டுக்கு அழைந்து வந்தபின் ’வெங்கட்டநாயக்கர் மண்டி’என்றிருந்த கடையின் பெயரை ’ஈ.வெ.ராமசாமி மண்டி’என்று பெயர் மாற்றி கடையை ராமசாமி வசமே ஒப்படைத்தார். வியாபாரம் சூடுபிடிக்கத்தொடங்கியது. இந்த சமயத்தில் தேவஸ்தான கமிட்டியில் சேர்க்கப்பட்டார் ராமசாமி. நம்பிக்கை இல்லாவிட்டாலும் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்தார். 1919ல் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கப்பட்டபோது தான் வகித்த சேர்மன் பதவி உட்பட அனைத்து பதவிகளையும் தூக்கி எறிந்து, கதர் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.

***

ராமசாமியின் தங்கை கண்ணம்மாவும், இல்லாள் நாகம்மையாரின் உதவியோடும் கள்ளுக்கடை மறியல், கதர் விற்பனை என்று வாழ்க்கை பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. சாதிய அடக்குமுறையை எதிர்த்தும் போரிட்டார். கேரளாவில் உள்ள வைக்கத்தில் தெருவுக்குள் கீழ்சாதிக்காரர்களை விட மறுத்த ஆதிக்க சாதிகளுக்கு எதிராக, மக்களை திரட்டி தெருவுக்குள் நுழைந்தார். அதனாலேயே வைக்கம் வீரர் என்றும் அழைக்கப்பட்டார்.

***

இடையிலேயே பத்திரிக்கை ஒன்றையும் தொடங்கி, காங்கிரஸ்கட்சிக்கு ஆதரவாக எழுதி வந்தார். காங்கிரஸ் கட்சி தலைமைப் பதவியும் தேடி வந்தது. காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிப் பார்த்தார். ஒன்றும் செய்ய முடியாது என்ற முடிவுக்கு வந்த போது வெளியே வந்தார் ஈ.வெ.ரா.

***
இனி...

காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறிய பின், அதன் போலி முகத்திரையை தொடர்ந்து கிழித்துவந்தார். குடியரசு பத்திரிக்கையின் கட்டுரைகளும், தலையங்கங்களும் காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. ஈ.வெ.ராமசாமியின் கட்டுரைக்கு போகுமிடமெல்லாம் விளக்கம் சொல்லிச் சொல்லியே ஓய்ந்து போனார்கள் கதர்சட்டைக்காரர்கள்.

பார்ப்பனர் அல்லாத இளைஞர்கள் பலரிடம் ஈ.வெ.ரா. வின் எழுத்துக்கள் மாற்றங்களைக் கொண்டு வரத்தொடங்கியது. ஈ.வெ.ராமசாமியின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் பலர் காங்கிரஸ் கட்சியை விட்டு ஈ.வெ.ரா.வின் பக்கம் வரத்தொடங்கினார்கள்.

தமிழகத்தில் ஈ.வெ.ராமசாமியினால் பரவலாக்கப்பட்ட கதர் இயக்கம் பார்பணர்களின் கையில் போய்ச் சேர்ந்தது. பொங்களூருக்கு 1927ல் காந்தியடிகள் வந்திருந்தார். அவரை சந்தித்து பேசினால் தமிழக காங்கிரஸ் கட்சியில் ஏதாவது மாற்றம் நடக்கும் என்று நம்பிய ஈ.வெ.ரா. பெங்களூருக்கு கிளம்பிப் போனார்.

காந்தியடிகளுடன் இருந்த தேவதாஸ் காந்தியும், ராஜாஜியும் மகிழ்ச்சியுடன் ஈ.வெ.ரா.வை வரவேற்று காந்தியடிகளிடம் அழைத்துப் போனார்கள். நாயக்கருக்கு காங்கிரஸ் மீது என்ன கோபம்? என்று கேட்டார் காந்தியடிகள். நாடு சுதந்திரம் பெற வேண்டுமானால் முதலில் காங்கிரஸ் கட்சியை ஒழிக்கவேண்டும், அடுத்ததாக சாதியை ஒழிக்க இந்துமதத்தை ஒழிக்கவேண்டும், மூன்றாவதாக பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்கவேண்டும் என்று பேசினார் ஈ.வெ.ரா.

நீங்கள் மிகவும் கோபத்தில் இருப்பதாக தெரிகிறது, எதற்கும் இன்னும் இரண்டொரு முறை நாம் சந்தித்து பேசுவோம். அப்புறம் முடிவு செய்யலாம் அதுவரை காங்கிரஸ் கட்சியிலேயே இருந்தங்கள் என்று கேட்டுக்கொண்டார் காந்தியடிகள்.

சரி இனி இவரிடம் பேசிப் பயனில்லை என்றுணர்ந்த ஈ.வெ.ரா, இது ஒத்துவராது என்று தெரிவித்து விட்டு திரும்பி தமிழகத்திற்கு வந்தார். வாசலில் இருந்த ராஜாஜியிடமும் நடந்த உரையாடலின் சாராம்சத்தை சொல்லி விட்டு வந்திருந்தார். அதன் பின்னர் காந்தியடிகளின் நிர்மாணத்திட்டங்களை கடுமையாக எதிர்க்க ஆரம்பித்தார். பல்வேறு கட்டுரைகளை குடியரசு பத்திரிக்கையில் எழுதத்தொடங்கினார். பார்ப்பனர் அல்லாத நீதிகட்சிக்கு தனது தார்மீக ஆதரவை அளித்து வந்தார் ஈ.வெ.ரா.

(தொடரும்) *Download As PDF*

No comments: