Friday 14 January 2011

பொங்கல் விழா கொண்டாடவேண்டும் ஏன்?

’பொங்கல்’ என்பது தமிழனுக்கு, பார்ப்பனரல்லாதாருக்கு உள்ள ஒரு பண்டிகை.
இந்தப் பண்டிகையின் பொருள் என்னவென்றால், விவசாயிகள் தாங்கள் செய்த
விவசாயத்தில் உற்பத்தியான பொருளை, அவ்வாண்டு முதல் தடவையாகச் சமைப்பது மூலம் பயன்படுத்திக் கொள்ளும் நிகழ்ச்சி என்பதாகும். இது தமிழனுக்கே உரியதாகும்.

நமது மற்ற பண்டிகைகள் என்பவை எல்லாம் ஆரிய மத சம்பந்தமான கதைகளை அடிப் படையாகக் கொண்டு, பார்ப்பனரால் கற்பனை செய்தவைகளேயாகும். இது
விவசாயிகளுக்கு உரிய பண்டிகை ஆனதினால் தான், முதல் நாள் தானியம்
சமைக்கும் பண்டிகையும், அடுத்த நாள் விவசாயிகளுக்கு முக்கியமான
இன்றியமையாததான கால்நடை ஜீவன்களைப் பாராட்டும் மாட்டுப் பொங்கல் என்கின்ற நிகழ்ச்சியையும் ஒரு பண்டிகையாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
அதனால்தான் இந்த நிகழ்ச்சிகளுக்குப் பொங்கல் பண்டிகை, மாட்டுப் பொங்கல்
பண்டிகை என்று பெயர் வழங்கப்பட்டு வருகிறது.

இதைப் பார்ப்பனர்கள், தங்கள் ஜாதி நலத்துக்கு ஏற்ற வண்ணம் திருத்தி
கற்பனை செய்து இதை ‘சங்கராந்திப் பண்டிகை’ என்று ஆக்கி இதில் பல
மூடநம்பிக்கைகளைப் புகுத்திவிட்டார்கள்.

இந்தப் பொங்கல் நாளைக் கெட்ட நாளாக ஆக்க, அந்த நாளில் ‘துஷ்ட தேவதை’யின் மூதேவி மக்களைப் பற்றுவதாகவும், அதற்குப் பரிகாரம் செய்வதுதான் பொங்கல் முதலிய காரியங்கள் என்றும், அன்று மூதேவி நமது வீட்டிற்குள் புகாமல் இருப்பதற்கு நமது வீட்டுக் கூரைகளில் ஆவாரம்பூ, பூளைப்பூ, வேப்பிலை ஆகிய மூன்றையும் சொருகி வைத்தால், மூதேவி வராது, உள்ளே நுழையாது என்றும் மற்றும் பல முட்டாள்தனமான கருத்துக்களைக் கற்பனை செய்து மக்களை அறிவிலிகளாக ஆக்கிவிட்டார்கள்.

மற்றும் இப்பண்டிகைக்குப் போகிப் பண்டிகை என்று சொல்லப்படுகின்றது. இந்த
‘போகி’ என்னும் சொல்லுக்குப் போகப் போக்கியங்களை அனுபவித்தல் என்பது
பொருள் இதற்கும் விளைந்த பண்டங்களை அனுபவித்தல் என்பதுதான் தத்துவம்.
இந்தக் கருத்துக் கொண்டே போகிப் பண்டிகை என்பதையும் பார்ப்பனர் தங்கள்
ஜாதி நலனுக்கு ஏற்பக் கற்பனைக் கதைகளை உண்டாக்கி இந்திரனுக்கும்,
கிருஷ்ணனுக்கும் ஏற்பட்ட பொறாமை விரோத சம்பவம் ஒன்று செய்து, அதற்குப்
பரிகாரமாகக் கொண்டாடுவது என்றும் ஆக்கி விட்டார்கள்.

இவையெல்லாம் மகா மகாப் புரட்டுகளாகும். எப்படியெனில், கிருஷ்ணனையும், இந்திரனையும் இவர்கள் யார், எப்போது இருந்தார்கள், இவர்களுக்கு ஏன் சண்டை வந்தது, இவர்கள் எவ்வளவு அற்பர்கள் என்றெல்லாம் பகுத்தறிவுப் பார்வையில் பார்த்தால், இதன் புரட்டு வெளியாகும், எனவே, பொங்கல் என்பது தமிழர்க்கே
உரியதல்லாமல், பார்ப்பனர்க்கு இதில் ஏதும் சம்பந்தமில்லை.

இந்தப் பொங்கல் பண்டிகை என்பதற்குச் சரியான பொருள் அறுவடைப் பண்டிகை என்பதாகும். இவற்றில் கன்னிப் பொங்கல் என்ற ஒரு நிகழ்ச்சியும்
பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது, யாவரும் அறிந்ததே. இந்தக் கன்னிப்
பொங்கல் என்பது, சிறு பெண் அதாவது பூப்படையாத, கல்யாணமில்லாத, கலவி
அறியாத பெண் என்பவர்கள் சமையல் செய்து பழகுவதற்கு ஆக அவர்களையே கொண்டு சமையல் செய்யப்படுவதாகும். இதில் பெரிய பெண்கள், அந்தச் சிறு பெண்களுக்கு சமையல் முறையை சொல்லிக் கொடுப்பார்கள்.

ஆகவே இந்த நிகழ்ச்சிகளுக்குத்தான் பொங்கல், மாட்டுப் பொங்கல், கன்னிப்
பொங்கல் விழா என்பதாகும். இது முழுக்க முழுக்க தமிழர்களுக்கே உரிய
தமிழ(பார்ப்பனரல்லாதார் பண்டிகையாகும். எப்படியெனில், பார்ப்பான்
கலப்பையைத் தொட்டால் பாவம் என்பது அவனது தர்மம். நமது பார்ப்பனர்களுக்கு எந்தக் காரியம் எப்படியிருந்தாலும், யார் எக்கேடு கெட்டாலும், தாங்கள் மனித சமுதாயத்தில் உயர்ந்த பிறவி மக்களாகவும், உடலுழைப்பு இல்லாமல் வாழும் சுக ஜீவிகளாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக மனித சமுதாயம் முழுவதுமே அறிவைப் பயன்படுத்தாத ஆராய்சியைப் பற்றியே சிந்திக்காத முட்டாள்களாகவும், காட்டுமிராண்டிகளாகவும் இருக்கச் செய்ய வேண்டும் என்பதே அவர்களுடைய பிறவி புத்தியானதால் அதற்கேற்ப உலக நட்பைத் திருப்பிப்பாதுகாத்து வைக்கிறார்கள்.

பார்ப்பனர்களின் இம்மாதிரியான அட்டூழிய அக்கிரம காரியங்களில் இருந்து
விடுபட்டு, மனிதர்களாக நாம் வாழ வேண்டுமானால், பொங்கல் பண்டிகை என்பதை முதல் நாள் அன்று மட்டும் நல்ல உயர்வான உணவு அருந்துவதையும், மனைவி
மக்கள் முதியவர்களுடன் இன்பமாகக் காலம் கழிப்பதையும் கொண்டு நம்மால்
கூடிய அளவு மற்றவர்களுக்கு உதவி, அவர்களுடன் குலாவுவதான காரியங்களையும் செய்வதன் மூலம் விழாக் கொண்டாடுவது அவசியமாகும்.

மற்றபடியாக, மதச் சார்பாக உண்டாக்கப்பட்டிருக்கும் பண்டிகைகள் அனைத்தும்,
பெரிதும் நம் இழிவிற்கும், பார்ப்பனர் உயர்விற்கும், நம் மடமைக்கும்,
காட்டுமிராண்டித் தன்மைக்கும் பயன்படத்தக்கதாகவே இருந்து வருவதால்,
பயனளித்து வருவதால், அறிவுள்ள, மானமுள்ள மக்கள் மத சம்பந்தமான எந்தப்
பண்டிகையையும் கொண்டாடாமலிருந்து தங்களை மானமும், அறிவுமுள்ள மக்களாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

மானமும் அறிவுமே மனிதர்க்கழகு!
---------------------------------
தந்தைபெரியார்- "விடுதலை" - 14-1-1972 *Download As PDF*

Tuesday 2 March 2010

21. ரஷ்யா மற்றும் மேலை நாட்டுப் பயணம்


1931ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் தேதியன்று சென்னையிலிருந்து பாண்டிச்சேரி வழியாக செல்லும் பிரெஞ்சுக் கப்பலில் நண்பர் ராமநாதன், ஈரோட்டு ராமு ஆகியோருடன் வசதி குறைந்த நான்காம் வகுப்பில் ரஷ்யாவுக்கு புறப்பட்டார் ஈ.வெ.ரா. பாண்டிச்சேரியில் பாரதிதாசன் வந்து பார்த்து அன்னியச் செலவாணி நாணயங்களை மாற்றித் தந்தார். டிசம்பர் 24ந்தேதி கப்பல் தென்னாப்பிரிக்காவை அடைந்தது. அங்கேயே ஒரு வாரம் தங்கி சுற்றிப் பார்த்துவிட்டு சூயஸ் கால்வாய் வழியாக எகிப்து சென்று அங்கே பத்து நாட்கள் தங்கினார்கள். அதன் பின்னர் கிரீஸ், துருக்கி ஆகிய நாடுகளில் சில வாரங்கள். கடைசியாக சோவியத் ரஷ்யாவை 1932 பிப்ரவரி 13 அன்று அடைந்தனர். அங்கு ஈ.வெ.ரா குழுவினருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. இளைஞர் சங்கங்கள், தொழிலாளர் சங்கங்கள், நாத்திகர் சங்கங்கள் ஆகியவை அவரை வரவேற்றன. மற்ற நாடுகளில் வேட்டி சட்டையுடன் வலம் வந்த ஈ.வெ.ரா ரஷ்யாவின் குளிர் பொறுக்காமல் கோட் போன்ற ஆடைகளுக்கு மாறிக் கொண்டார்.

அரசு விருந்தினராக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஈ.வெ.ராவுக்கு மொழிபெயர்ப்பாளர்கள் துணைக்கு ஏற்பாடு செய்யப் பட்டனர். அவர்களின் துணை கொண்டு பல்வேறு நகரங்களில் உள்ள இடங்களையும் சுற்றிப் பார்த்து, விரிவாக விளக்கம் பெற்றார் ஈ.வெ.ரா. மிகப் பெரிய தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள், நூலகங்கள், நாடக அரங்குகள், வேளாண்மைப் பண்ணைகள், அரசு பொது உணவு விடுதிகள், லெனின் அருங்காட்சியகம், லெனின் உடல் பாதுகாக்கப்பட்ட இடம் ஆகிய எல்லா இடங்களையும் நன்கு சுற்றிப் பார்த்து குறிப்பெடுத்துக் கொண்டார். சில இடங்களில் ஈ.வெ.ராவுக்குப் பேசவும் வாய்ப்புக் கிடைத்தது. தன் கரகர குரலில் கூட்டத்தினரை மயக்கி கைதட்டலையும் பெற்றார்.


இப்படியே சுமார் மூன்று மாதங்கள் ஓடியது. மே 1ந்தேதி மே தின அணிவகுப்பினையும் பார்வையிட்டார். அணிவகுப்பு மரியாதையைப் பார்வையிட வந்த அப்போதைய ரஷ்யத் தலைவர் ஸ்டாலினுக்கு இந்தியாவிலிருந்து வந்திருக்கக் கூடிய நாத்திகத் தலைவரென ஈ.வெ.ரா அறிமுகம் செய்து வைக்கப் பட்டார். எட்ட நின்றே இருவரும் வணக்கங்களைப் பரிமாறிக் கொண்டனர்.

அம்மாதம் 29ந்தேதி ஸ்டாலினுடன் கலந்துரையாடுவதற்கான நேரம் ஒதுக்கப் பட்டிருந்தது. கம்யூனிசத்தின் வளர்ச்சி, அந்த நாட்டிலிருந்த கட்டுக் கோப்பு ஆகியவற்றைக் கண்டு வியந்த ஈ.வெ.ராமசாமி மற்றும் குழுவினரும் கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினராகச் சேர்ந்து கொள்ள விண்ணப்பம் செய்தனர். ராமநாதனுடைய நடவடிக்கைகளில் ஸ்டாலின் அரசாங்கம் திருப்தியடையவில்லை(ஸ்டாலினுக்கு எதிராக இயங்கி வந்த ட்ராட்ஸ்கி போன்றோரை ராமநாதன் சந்தித்துவிட்டு வந்தது அரசுக்குத் தெரிய வந்தது). அதனால் மே 19ந்தேதியே ரஷ்யாவை விட்டுப் புறப்பட்டுச் செல்ல வேண்டும் என ரஷ்ய அரசு உத்தரவிட்டது. ஸ்டாலினுடைய சந்திப்பு நிகழாமலேயே ஈ.வெ.ரா அங்கிருந்து கிளம்பினார்.

அங்கிருந்து இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், போர்ச்சுக்கல், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்குப் பயணமானார். இங்கிலாந்தில் பல தொழிலாளர் தலைவர்களைச் சந்தித்து உரையாடினார். அங்கும் பல கூட்டங்களில் உரையாற்றினார் ஈ.வெ.ரா. இந்திய சுரங்கங்களில் பத்து மணி நேரத்துக்கும் குறையாமல் வேலை பார்த்து வரும் தொழிலாளர்களுக்கு ஆணாக இருந்தால் எட்டணாவும், பெண்ணாக இருந்தால் ஐந்தணாவும் கூலியாக வழங்கப்பட்டு வருவதை எடுத்துரைத்தார். உலகம் முழுவதிலும் இருக்கக் கூடிய தொழிலாளர்களும், தொழிலாளர் கட்சிகளும் ஒன்றிணைந்து வேலை நேரத்தை மாற்றியமைக்கவும், ஒரே மாதிரியான உழைப்புக்கேற்ற ஊதியத்தை வழங்கக் கோரியும் போராட்டங்கள் நடத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். அப்படி நிகழும் பட்சத்தில், தாம் எங்கிருந்தாலும் தொழிலாளர்களுக்காய் குரல் கொடுத்துப் போராடத் தயாராய் இருப்பதாய் பிரகடனப் படுத்தினார்.

அக்டோபர் மாதம் வரை மேற்கண்ட நாடுகளில் சுற்றி வந்த ஈ.வெ.ரா குழு, அம்மாதத்தின் நடுவில் அங்கிருந்து கிளம்பியது. ராமநாதன் சில நாட்கள் கழித்து வருவதாகக் கூறித் தனியே ஜெனிவாவுக்குச் சென்று விட்டார். 1932 அக்டோபர் 17ந் தேதி இலங்கை வந்தடைந்த ஈ.வெ.ரா நவம்பர் 6ந்தேதி வரை சுமார் 18 இடங்களில் பொதுக் கூட்டங்களில் பேசினார். கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், ஹட்டன், பருத்தித்துறை போன்ற இடங்களில் நிறையக் கூட்டமும், உற்சாகமான வரவேற்பும் அவருக்கு அளிக்கப் பட்டது.

தொழிலாளர் முன்னேற்றம், பொருளாதார சமத்துவம் போன்றவற்றைப் பற்றித் தான் மேலை நாடுகளில் கண்டவற்றைப் பற்றியும் இணைத்து தனது கோட்பாடுகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். இலங்கைத் தமிழரிடையே சுயமரியாதை இயக்கம் பற்றிய விழிப்புணர்வு பரவியது. 1932 நவம்பர் 11ந்தேதி தூத்துக்குடி வழியே ஈரோடு வந்து சேர்ந்தார் ஈ.வெ.ரா. சுமார் 12 மாதங்கள் உலகம் முழுவதையும் சுற்றி வந்த ஈ.வெ.ரா தான் கற்றறிந்த விஷயங்களையும், கண்டுணர்ந்த செய்திகளையும் கட்டுரைகளாக எழுதத் தொடங்கினார். இலங்கைச் சொற்பொழிவுகள் என்று அவர் எழுதிய இந்த நூல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. தொடர்ந்து குடிஅரசு இதழ்களில் கேள்வி பதில் வடிவிலும் மக்களின் ஐயம் போக்கி தெளிவுரைகளை எழுதி வந்தார்.

குடிஅரசு இதழில் கட்டம் கட்டி ஓர் அறிவிப்பை ஈ.வெ.ரா வெளியிடுகிறார். பெயருக்கு முன்னால் சேர்க்கப் படும் மரியாதை வார்த்தைகளான் ஸ்ரீலஸ்ரீ, மகாலஸ்ரீ, திரு, திருவாளர், தலைவர், திருமதி போன்ற வார்த்தைகளைச் சேர்த்துப் பேசவோ, எழுதவோ வேண்டாம் எனவும், எல்லோரையும் தோழர் என்ற வார்த்தையை மட்டும் வைத்து அழைத்தாலே போதும் எனவும் அந்தச் செய்திக் குறிப்பில் கேட்டுக் கொண்டார். இந்த அறிவிப்பு வெளியான ஒரு வார காலத்திற்குள் குடிஅரசில் அனைத்துப் பெயர்களுக்கும் முன்னால் தோழர் சேர்க்கப்பட்டது. தோழர் காந்தி, தோழர் ராஜகோபாலாச்சாரி, தோழர் ஈ.வெ.ரா, தோழர் நீலாம்பிகையார் என்றே எழுதப் பட்டது. இந்த சமயத்தில்தான் மிகச்சிறந்த ஒரு இளைஞர் ஒருவர் ஈ.வெ.ராவுக்குக் கிடைத்தார் - அவர்தான் ப. ஜீவானந்தம்.

மிகத் தீவிரமான காங்கிரஸ் ஊழியரான அவர் ஆங்கில அரசை எதிர்த்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தவர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கடுங்காவல் தண்டனை பெற்றார். ஜீவானந்தம் திருச்சி சிறையில் அடைக்கப் பட்டிருந்த சமயத்தில் வேறு மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட புரட்சியாளர்கள் மூலம் கம்யூனிசத் தத்துவம் குறித்து அறிந்து கொண்டார்.


சிறைச்சாலைக்குள்ளேயே கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை போன்ற மார்க்ஸிய நூல்களைப் படித்துமிருந்தார். ஜீவானந்தம் விடுதலையாகி வெளியே வந்தவுடன் ரஷ்யா குறித்தும், சோஷலிசம் குறித்தும் ஈ.வெ.ரா நிகழ்த்தி வந்த உரைகளாலும், எழுத்துக்களாலும் ஈர்க்கப்பட்டார். இயல்பிலேயே சுயமரியாதைச் சிந்தனை மேலோங்கியிருந்த ஜீவானந்தத்திற்கு பெரியாரின் மீது மிகுந்த மரியாதை ஏற்பட்டது. காங்கிரஸ்காரராக இருந்த போதும், சுயமரியாதை இயக்க வீரராகவும் விளங்க ஆரம்பித்தார். குடிஅரசு பத்திரிக்கையில் தொடர்ந்து கட்டுரைகளையும், கவிதைகளையும் எழுதலனார்.

மே தினத்தை இங்கே சமதர்மக் கொள்கை நாளாக கொண்டாட வேண்டுமென்றும், பேரணிகள் நடத்த வேண்டும் என்றும், ஈ.வெ.ரா அறிக்கை விடுத்தார். கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையை குடிஅரசில் தொடராக வெளியிட்டார் ஈ.வெ.ரா. அதோடு நில்லாமல் மதத்தைக் குறித்து லெனின் எழுதிய கட்டுரைகள், கம்யூனிசக் கோட்பாடுகள், ஒவ்வொரு தொழிலாளியும் பொதுவுடமைக் கட்சியில் ஏன் சேர வேண்டும் என்பது போன்ற தீவிர கம்யூனிசக் கருத்துக்களை குடியரசில் பரப்பலானார். ஈ.வெ.ராவின் சோஷலிசப் பிரச்சாரத்திற்கு மார்க்ஸிய சிந்தனையாளர் மா. சிங்காரவேலர் எழுதி வந்த கட்டுரைகள் பெரிதும் உதவின. தோழர் சிங்காரவேலரிடம் பேசி பல பொதுவுடமைக் கட்டுரைகளை குடிஅரசிலும் எழுதச் செய்தார்.

இப்படியாக பரபரப்பாக ஈ.வெ.ரா இயங்கிக் கொண்டிருந்த சமயத்தில், 1933 ஏப்ரல் மாதம் நாகம்மையார் நோய்வாய்ப்பட்டு வீழ்ந்தார். அப்போதும் நாகம்மையாருக்காக வருந்து முடங்கிப்போய், உடனிருந்து கவனித்துக்கொண்டிருக்கவில்லை ஈ.வெ.ரா.


பல ஊர்களுக்கு சுற்றுப்பயணம் போவதையும், பொதுக்கூட்டங்கள் பேசுவதையும் நிறுத்தினாரில்லை. சுயமரியாதையை ஒவ்வொரு மனிதனும் உணரவேண்டும் என்ற வேட்கையால் தன் பொதுக்கூட்டங்களுக்கு தடைபோடாமல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணங்களிலேயே இருந்தார். சமயம் கிடைக்கும் போது ஈரோட்டுக்கு வந்து நாகம்மையாரைப் பார்த்து, சில மணி நேரங்கள் உடனிருந்து விட்டு, அடுத்த கூட்டம் நடக்கும் ஊர் நோக்கி பயணமானார். திருப்பத்தூரில் பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும் போது அந்த தகவல் வந்து சேர்ந்தது.

அது என்ன தகவல்?


(தொடரும்)

*Download As PDF*

Tuesday 23 February 2010

20. பெரியார் தாடி வளர்த்த கதை

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாட்டிலும் கூட ஈ.வெ.ராமசாமியின் புகழ் பரவியிருந்தது. சுயமரியாதையை விரும்பிய தமிழர்கள் சிலர் மலேசியாவுக்கு ஈ.வெ.ராவை பலமுறை அழைத்தார்கள். வெளிநாட்டு வாழ் தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து பயணம் மேற்கொள்ளுவதென முடிவெடுத்தார் ஈ.வெ.ரா.

அதன்படி 1929ஆம் ஆண்டு, டிசம்பர் 15ஆம் தேதி ஈ.வெ.ரா, அவரது துணைவியார் நாகம்மையார், மற்றும் சாமி சிதம்பரனார், எஸ். ராமநாதன், பொன்னம்பலனார் போன்றோருடன் நாகப்பட்டிணம் துறைமுகத்திலிருந்து கப்பலேறினார். அந்தக் கப்பல் ஐந்து நாட்கள் கழித்து இருபதாந்தேதி பினாங்கில் போய் நின்றது. மலேசியா வாழ் தமிழர்கள் லட்சக் கணக்கில் திரண்டிருந்தார்கள். கூடியிருந்த மக்களின் உற்சாகம் கண்டு ஈ.வெ.ரா திகைத்துப் போனார். பல இந்தியத் தலைவர்கள் இதற்கு முன்பு பினாங்கிற்கு வந்திருந்த போதும் எவருக்கும் கிடைக்காத வரவேற்பு ஈ.வெ.ராவிற்கு வழங்கப் பட்டது. அவருக்கு குவிந்த மாலைகளும், பொன்னாடைகளும் கணக்கிலடங்கா. மலேயப் பத்திரிக்கைகள் கூடியிருந்த கூட்டத்தினரைப் பற்றியும், ஈ.வெ.ராவைப் பற்றியும் பிரமாதமாக செய்தி வெளியிட்டன.

டிசம்பர் 23ந்தேதி ஈப்போவில் தமிழர் சீர்திருத்த மாநாட்டை ஈ.வெ.ரா துவக்கி வைத்தார். தமிழ்நாட்டுத் தமிழர் மாத்திரமன்றி யாழ்ப்பாணத் தமிழர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள் என மொழி பேதமற்று மக்கள் கூடியிருந்தனர். 26ந்தேதி சிங்கப்பூர் சென்று மலேய-இந்திய சங்க மாநாட்டில் விரிவுரையாற்றினார்.

குழுமியிருந்த கூட்டத்தினரில் பலர் கல்வியறிவு குறைந்தவர்கள். எல்லோரும் கூடுகிறார்கள் என வேடிக்கை பார்க்க வந்தவர்கள். ஈ.வெ.ராவை பெரிய மகானாக நினைத்து அவர் காலில் விழுந்து ஆசி வாங்குவதற்கு பெரிய போட்டா போட்டியே நடந்தது. எந்த மனிதர்களுக்கு சுயமரியாதை வேண்டுமென கற்பிக்க விரும்பினாரோ, அந்த மனிதர்களே காலில் விழுவது கண்டு மனம் வருந்தினார். தொடர்ச்சியான சுயமரியாதை இயக்க பிரச்சாரம் மூலம் மட்டுமே இம்மக்களை அடிமைத் தனத்திலிருந்து விடுவிக்க முடியுமென்று முடிவு செய்தார்.

போகுமிடமெல்லாம் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் சலிக்காது பதில் சொல்லியபடியே இருந்தார். பெரியாரின் நேரடியான பதிலுரைகள் சிலரை பின்னங்கால் பிடறியில் பட ஓட வைத்தது. பலரை அவர்பால் ஈர்த்தது. பினாங்கு, ஈப்போ, கோலாலம்பூர், கோலாப்பிறை, மலாக்கா, தம்பின், பத்துபகாட், கம்மார், தெலுக்கான்சன், சுங்கை பட்டாணி, சுங்கை குரூட், தஞ்சைமாலிம், கோலாக்ங்சார், தைப்பிங்க், மூவார்,கோலக்குபு ஜோகூர்பாரு உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் சொற்பொழிவாற்றினார்.

மீண்டும் 1930, ஜனவரி 11ந்தேதி பினாங்கில் கப்பலேறி 16ந்தேதி நாகப்பட்டிணம் துறைமுகம் வந்திறங்கினார். இந்த இருபது நாள் பயணத்தில் ஓய்வின்றி தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ஈ.வெ.ராவிற்கு சவரம் செய்யக் கூட நேரம் வாய்க்கவில்லை. பெரிய மீசையோடு கப்பலேறிய ஈ.வெ.ரா தாடியோடு வந்திறங்கினார். தற்செயலாக நேரிட்ட இந்தக் கோலத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டார். சவரம் செய்ய செலவழிக்கும் நேரத்தில் தலையங்கம் எழுதவோ, தொண்டர்களிடம் பேசவோ நேரத்தை செலவிடலாமென முடிவுக்கு வந்தார். பொது வாழ்கையில் ஈடுபடுவோர் குளிக்கவோ, சவரம் செய்து கொள்ளவோ, சலவை உடுக்கவோ, தலை சீவவோ, அலங்காரம் மேற்கொள்ளவோ செலவழிக்கும் நேரத்தில் மக்களுக்கு ஏதேனும் பயன்படும் காரியங்களில் ஈடுபடலாம் என்றும் புதிய அர்த்தம் கற்பித்தார்.

ஈ.வெ.ரா நாட்டிலில்லாத சமயத்தில் சென்னைக்கு மாற்றப் பட்டிருந்த குடியரசு, ரிவோல்ட் பத்திரிக்கைகள் மீண்டும் ஈரோட்டிற்கே கொண்டு வரப்பட்டன. 1930ஆம் ஆண்டோடு ரிவோல்ட் ஆங்கில இதழுக்கு மூடுவிழா நடத்தி விட்டு குடியரசில் முன்னிலும் தீவிரமாய் ஈடுபடத் துவங்கினார். அதே வருடத்தில் இந்தியாவிலிருந்து வெள்ளையனை வெளியேற்றுவதற்கு காந்தியார் உப்பு சத்தியாகிரகம் என்னும் புதிய போராட்டத்தை துவங்கியிருந்தார். தேசம் முழுவதிலும் பெரிய அலையாய், உப்பு சத்தியாகிரகப் பிரச்சாரம் நடைபெற்று வந்தது. தென்னாட்டில் அவ்வியக்கத்தை நடத்த ராஜாஜியும், சர்தார் வேதரத்தினம் பிள்ளையும் காந்தியாரால் தேர்ந்தெடுக்கப் பட்டனர். சாதாரண அப்பாவி மக்கள் பலரும் இப்போராட்டத்தால் அடிமைத் தளையிலிருந்து விடுதலை கிடைத்துவிடுமென நம்பினர்.

இதனை மிகக் கடுமையாக எதிர்த்து ஈ.வெ.ரா முழக்கமிட்டார். மேடையில் மாத்திரமல்லாது, குடியரசிலும் தொடர்ந்து எழுதினார். இந்தக் கொள்கையிலும், இதனை நடத்துகின்ற தலைவர்களின் நாணயத்திலும் தனக்கு நம்பிக்கையில்லை என்று பகிரங்கமாக அறிவித்தார். இந்தியாவில் மத ஆதிக்கம், சாதீய இழிவு, குருட்டு நம்பிக்கை, தீண்டாமை, பெண்ணடிமை, பார்ப்பான மேலாதிக்கம் இவையாவும் அடியோடு ஒழிக்கப் பட்டால்தான் பூரண சுயராஜ்ஜியம் என்பது கிடைக்கும்; கிடைத்தாலும் நீடித்து நிற்கும் என்று தமது எண்ண ஓட்டத்தை எவருக்கும் அஞ்சாது பதிவு செய்தார்.

ஈ.வெ.ராவின் இதுபோன்ற வாதத்தை கடுமையாக எதிர்த்தார்கள் காங்கிரசார். ஒரு தேசிய எழுச்சியை வேண்டுமென்றே அவமானப் படுத்துகிறார் என்று திட்டித் தீர்த்தார்கள். மேடைகளில் பகிரங்கமாக கேவலமாகப் பேசினார்கள். மொட்டைக் கடிதங்களை குடியரசிற்கு அனுப்பி, தமது கோபத்தைத் தீர்த்துக் கொண்டார்கள். வெள்ளைக்காரனின் பாதந்தாங்கி எனப் பட்டம் சூட்டினார்கள். காங்கிரசாரின் இது மாதிரியான தொடர் மிரட்டல்களுக்கு கொஞ்சமும் அஞ்சவில்லை வெண்தாடி வேந்தர். உயிரிருக்கும் வரை எம்மக்களின் சுயமரியாதைக்கும், சுகமான வாழ்விற்காகவும் தொடர்ந்து உழைத்துக் கொண்டுதானிருப்பேன் என்றும், பேசிக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருப்பேன் என்றும் அறிவித்தார் ஈ.வெ.ரா.

1931ஆம் ஆண்டு மே பத்து, பதினொன்று ஆகிய தேதிகளில் இரண்டாவது மாகாண சுயமரியாதை மாநாட்டினை ஈரோட்டில் நடத்தினார். இதில் டாக்டர். முத்துலெட்சுமி ரெட்டி போன்றோரும் கலந்து கொண்டனர். மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர், தாழ்த்தப் பட்டோர் எல்லோரும் ஒன்றாக கலந்து கொண்டனர். மாநாட்டில் கலந்து கொண்ட ஆயிரக் கணக்கானோருக்கு உணவு சமைத்து பரிமாறியது, பல்லாயிரம் ஆண்டு காலமாக அடிமையாய், தீண்டத் தகாதவர்களாய், புறவாசல் வழியே வந்து செல்பவராய் இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள்தான். இந்த நிகழ்சியைக் கண்டு மாநாட்டில் கலந்து கொள்ள வடமாநிலத்திலிருந்து வந்திருந்த எம்.ஆர்.ஜெயக்கர் என்பவர் ஈ.வெ.ராவை பெரிதும் பாராட்டினார். சட்டமன்றம் செல்லவோ, அரசு பதவி பெறவோ விரும்பாமல் மக்களிடையே இது மாதிரியான விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டுத் தொண்டாற்றி வரும் ஈ.வெ.ராமசாமியைக் கண்டு தான் பெரிதும் வியப்பதாய் மாநாட்டு மேடையிலேயே கூறினார்.

அதே ஆண்டு, ஆகஸ்டு மாதம் மூன்றாவது மாகாண சுயமரியாதை மாநாடு விருதுநகரில் நடத்தப் பட்டது. ஈரோட்டில் போடப்பட்ட தீர்மானங்கள், அத்துணையையும் ஏற்றுக் கொள்வதோடு, கதர், கைத்தொழில் திட்டங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றவை அல்ல; எனவே இயந்திர சாதனங்களே தொழில் வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் உகந்தவை என்பதாக ஒரு தீர்மானம் இம்மாநாட்டில் இயற்றப் பட்டது குறிப்பிடத் தக்கது.

பொதுவுடைமை இயக்கத்தின் மூலவர்களான காரல் மார்க்ஸையும், லெனினையும் ஈ.வெ.ராமசாமி தனியாகப் படித்ததில்லை என்றபோதிலும், இருபத்தோராம் வயதில் தந்தையின் தொழிலை தான் கையிலெடுத்த போதிலிருந்தே தொழிலாளர்களுக்கு உகந்த, உற்ற தோழனாய் விளங்கி வந்திருக்கிறார். தொடர்ச்சியான தேடுதலின் பயனாய் பொதுவுடைமை சமதர்ம திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப் படுத்திய சோசலிச சோவியத் ரஷ்யாவை நேரில் கண்டுவர விரும்பினார். ஆனால், அவரின் உடல்நலம் அதற்கு ஒத்துழைக்கவில்லை. ஈ.வெ.ராவின் உடல்நலத்தினை கருத்தில் கொண்டு, அவரை எந்த நிகழ்சிக்கும் அழைக்க வேண்டாமென நாகம்மையார் அறிக்கை ஒன்றினை விடுத்தார். முழுமையான ஓய்வு ஈ.வெ.ராவை பழைய நிலைக்கு திரும்ப வைக்க உதவுமென திட்டமிட்டார்.

சூரியனை சும்மா இருக்கச் சொல்ல முடியுமா? பூமி சுழல்வதால் களைப்பாய் இருக்கிறதென ஓய்வெடுக்கச் சொல்ல முடியுமா? இதெல்லாம் முடியாத போது ஈ.வெ.ராமசாமி மட்டும் எப்படி முடங்கிக் கிடப்பார்? நாகம்மையாரின் எல்லா வேண்டுகோளையும் பொருட்படுத்தாமல் நண்பர் ராமநாதன், ஈரோட்டு ராமுவுடன் கப்பலில் வசதி குறைந்த நான்காம் வகுப்பில் புறப்பட்டார்.

(தொடரும்) *Download As PDF*

Tuesday 16 February 2010

19. சுயமரியாதை இயக்கத்தின் வளர்ச்சி

காங்கிரஸ் கட்சியின் மக்கள் விரோதப்போக்கை பறைசாற்றும் வேலையை ஈ.வெ.ராமசாமி திறம்படச்செய்து வந்தார். தனது குடியரசு பத்திரிக்கையில் தொடர்ந்து எழுதினார். வர்ணங்களை ஆதரிப்போரையும், அதை கடைபிடிக்கும் காங்கிரஸ் கட்சியையும் விமர்சனம் செய்து கட்டுரைகளும், தலையங்கமும் தொடர்ந்து எழுதப்பட்டு வந்தன.

1928ம் ஆண்டு தொடக்கத்தில் தமிழகத்தில் தென்னிந்திய ரயில்வே ஊழியர்களின் போராட்டம் வெடித்தது. நாகபட்டினம், போத்தனூர் பகுதிகளில் இருந்த ரயில்வே பணிமனைகளை இழுத்து மூடி, திருச்சி, பொன்மலையில் இருந்த ரயில்வே பணிமனையை விரிவு படுத்த திட்டமிட்டது ரயில்வே நிர்வாகம். இதனை எதிர்த்து ஆயிரக்கணக்கான ரயில்வே ஊழியர்கள் போராட்டங்களில் குதித்தானர்.

இதன் தொடக்க காலத்தில் இப்போராட்டம் தேவையற்றது என்பது போன்று எழுதினார் ஈ.வெ.ரா. சென்னையில் ஆட்சி நடத்தி வரும் நீதிகட்சிக்கு பார்ப்பனர்கள் தரும் தொல்லையாக இருக்குமோ என்று முதலில் கருதினார் ராமசாமி. அதனால் போராட்டத்தில் ஈடுபட வேண்டாமென்று அறிக்கை விடுத்தார். ஆனால் நாகபட்டினம் பணிமனையில் ஈ.வெ.ரா வின் சுயமரியாதை இயக்கத்தைச்சேர்ந்த பலர் இருந்தனர். அவர்களில் சிலர் ஈ.வெ.ராவை சந்தித்து, தங்களது போராட்டத்தின் காரணங்களை விளக்கிச்சொன்னவுடன் அதில் இருக்கும் உண்மையான சூழ்ச்சியை உணர்ந்து கொண்டார் ஈ.வெ.ராமசாமி.

உண்மைகளை உணர்ந்துகொண்ட பின் ரயில்வே தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக எழுதத்தொடங்கினார். பிரச்சாரங்களும் செய்யத்தொடங்கினார். அதே ஆண்டு ஜூலை 27ல் ரயில்வே தொழிலாளர்களின் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடு பட்டார்கள். அவர்களை ஆதரித்து, அரசாங்கம் விதித்த தடையை மீறி, நாகபட்டினம் சென்று தொழிலாளர்களுக்கு ஆதரவாக பேசினார். பொதுமக்கள் இப்போராட்டத்திற்கு நிதி உதவி அளித்து ஆதரவு தரவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார் ஈ.வெ.ரா.

ஈரோட்டிலும் ரயில்வே தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு ஆதரவாக கூட்டங்கள் நடத்தினார். நிதி வசூலித்து போராட்டக்காரர்களுக்கு கொடுத்துதவினார். இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகள் உண்மையில் சிக்கன நடவடிக்கையோ, போதுமான லாபம் இல்லாததால் ஏற்படுவதோ, பொது மக்களுக்கு கட்டணக் குறைப்பு போன்ற சலுகைகளைத் தருவதற்கானதோ நிச்சயம் இல்லை என்பதை தன் பிரச்சாரத்தில் விளக்கிச் சொன்னார் ராமசாமி. சிக்கனம் என்ற பெயரில் இந்தியர்களை ஆட்குறைப்புச் செய்து, வெள்ளையர்களுக்கு வேலை கொடுப்பது என்பதுதான் தென்னிந்திய ரயில்வேயின் உண்மையான நோக்கம் என்பதை பொதுமக்களுக்குப் புரிய வைத்தார்.

ஈ.வெ.ராவின் பிரச்சாரத்தை தாங்கிக் கொள்ள முடியாத அரசு அவரையும், போராட்டத்தில் முன்னணியிலிருந்த அவரது நண்பர்கள் சிலரையும் கைது செய்து வழக்குத் தொடுத்தது. ஒரு மாத காலம் சிறையிலிருந்த பின் ஜாமீனில் வெளிவந்தார் ராம்சாமி. பின்னர் விசாரணையின் போது எதிர் வழக்காடுவதில்லை என முடிவு செய்து அறிவித்தார். திடீரென அரசாங்கம் அவரது மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்ததால் அதிலிருந்து விடுதலையானார் ஈ.வெ.ராமசாமி.

அதே நேரத்தில் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மற்ற முக்கியத்தலைவர்களான மா.சிங்காரவேலர், முகுந்தலால் போன்றோருக்கு பத்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப் பட்டது. மேல் முறையீட்டின் பேரில் பின்னர் அது இரண்டு ஆண்டுகளாக் குறைக்கப் பட்டது. பெருமாள் என்பவருக்கு மட்டும் ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டது.

இதன் பின் தன்னுடைய குடியரசு பத்திரிக்கையை சுயமரியாதைப் பிரச்சாரத்திற்கு முழுமூச்சுடன் பயன் படுத்த ஆரம்பித்தார். விழிப்புணர்வூட்டும் பெட்டிச் செய்திகளை வெளியிடுவது, பார்ப்பன முறைகளை விடுத்து நடக்கும் திதி, புதுமனை புகுவிழா போன்றவற்றை பற்றிய செய்திகளை முக்கியத்துவம் தந்து வெளியிடுவது என பத்திரிக்கையின் எல்லா சாத்தியங்களையும் தனது பிரச்சாரத்திற்கு பயன்படுத்தினார்.

இத்தகைய செய்திகளின் விளைவாக மக்களுக்கு பார்ப்பன புரோகிதர்களின் தலையீடில்லாமலே விசேஷங்களை நடத்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை வளர்ந்தது. சுயமரியாதைக் கூட்டங்களில் மாலை மாற்றித் திருமணம் செய்து கொள்வது, தலைவர்களின் தலைமையில் திருமணம் செய்து கொள்வது என சுயமரியாதைத் திருமணம் என்கிற முறை மெல்ல மெல்ல உருவானது.

விழிப்புணர்வு பிரச்சாரத்தில் சொந்தப் பத்திரிக்கையின் பயன் பாட்டை உணர்ந்த ஈ.வெ.ரா, அடுத்த கட்டமாக கலகம் அல்லது கிளர்ச்சி என்று பொருள் படும் ரிவோல்ட்(Revolt) என்ற பெயரில் ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையொன்றையும் துவக்கினார்.

”ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரி போன்றவர்களுக்கும், மற்றும் சில சுயநலக்காரர்களும், கூலிகளும் நமது பிரச்சாரத்திற்கு விரோதமாக ஆங்கிலப் பத்திரிக்கைகள் மூலமாகவும், வியாசங்கள் மூலமாகவும் பிரச்சாரம் செய்கிறபடியாலும், நமது பிரச்சாரமும் பத்திரிக்கையும் தமிழிலேயே இருப்பதாலும், அது தமிழ்நாட்டை விட்டு வெளியே போக மார்க்கமில்லாதிருப்பதாலும் ஆங்கிலத்தில் ஒரு பத்திரிக்கையை குடி அரசுக் கொள்கையை ஆதாரமாகக் கொண்டு ஆரம்பிக்க வேண்டுமென்பதற்காக ஒரு யோசனை தோன்றியிருக்கிறது. அப்பத்திரிக்கைக்கு ரிவோல்ட் என்பதாக பேர் கொடுக்கத் தீர்மானித்திருக்கிறோம். ” என்று ப்பத்திரிக்கை தோன்றியதின் காரணங்களை ஈ.வெ.ரா. விளக்கமாக எழுதினார்.

சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாடு 1929ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17, 18 தேதிகளில் செங்கல்பட்டில் நடத்தப் பட்டது. டபிள்யூ.பி.ஏ. சௌந்தரபாண்டியன் தலைமையில் பி.டி ராஜன் கொடியேற்றித் துவக்கி வைத்த அந்த மாநாட்டில் பின்வரும் கருத்துக்களைக் கொண்ட 34 தீர்மானங்கள் இயற்றப்பட்டது.

  1. இந்தியாவுக்கு வரும் சைமன் குழுவை புறக்கணிப்பது நியாயம் இல்லை.அக்குழுவின் முன் சாட்சி சொல்ல மறுப்பது பொருத்தமற்றது.
  2. நால்வருண முறையை ஏற்றுக் கொள்ளக் கூடாது. மக்களிடையே பிறப்பால் ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் வேதம், சாஸ்திரம், புராணங்கள் போன்றவற்றை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
  3. தீண்டாமை ஒழிக்கப் பட்டு சாலைகள், குளங்கள், கிணறுகள், பள்ளிகள், சத்திரங்கள், தண்ணீர்ப் பந்தல்கள் முதலியவற்றில் சகலருக்கும் சம உரிமைகள் தரப்பட வேண்டும், இதை வலியுறுத்தி அரசு சட்டம் இயற்ற வேண்டும்.
  4. மக்கள் ஜாதிப் பட்டத்தையும், வகுப்புப் பட்டத்தையும், அடையாளக் குறிகளையும் பயன்படுத்தாது ஒழிக்க வேண்டும்.
  5. பெண்களுக்கு 16 வயதுக்கு மேல்தான் திருமணம் செய்யப்பட வேண்டும்.
  6. விவாகரத்து உரிமை, விதவைகள் மறுமணம், சொற்ப செலவில் திருமணம், ஒரு நாள் திருமணம் போன்றவை அமுலுக்கு வர வேண்டும்.
  7. கல்வி நிலையங்களில் தாய்மொழியிலேயே கல்வி தரப்பட வேண்டும். பிறமொழிப் பாடங்களுக்குப் பொதுப் பணத்தை உபயோகிக்கக் கூடாது.
  8. பள்ளிக்குச் செல்லத்தக்க சிறுமிகளுக்கு ஆரம்பக் கட்டாயக் கல்வி தரப் படவேண்டும்.
  9. தாழ்த்தப்பட்ட குடும்பத்துப் பிள்ளைகளுக்கு பள்ளியில் புத்தகம், உணவு, உடை போன்றவை இலவசமாக அளிக்கப் பட வேண்டும்.
  10. பெண்களுக்குச் சம சொத்துரிமை, வாரிசு பாத்யதை, ஆண்களைப் போலவே தொழில் நடத்த சம உரிமை, ஆசிரியர் பதவியில் அதிக இடம் முதலியவை வழங்கப்பட வேண்டும். ஆரம்பப் பள்ளி ஆசிரியர் பதவி முழுதும் பெண்களுக்கே வழங்கப்பட வேண்டும்.
  11. பள்ளிகளில் மூடநம்பிக்கையுள்ள புத்தகங்களைப் பாடமாக வைக்கக் கூடாது.
  12. ஜாதி வேறுபாடு காண்பிக்கும் ஹோட்டல்களுக்கு உரிமை தரக்கூடாது.

என்பவை தொடரும் பட்டியலில் மிகவும் முக்கியமானவை.தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் நடுநிலை வகிக்காத அரசை கண்டித்தும், அதனால் துன்பப்பட்ட தொழிலாளர்களுக்கு அனுதாபம் தெரிவித்தும் மேலும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

இத்தீர்மானங்களில் இருந்து சுயமரியாதை இயக்கம் அரசியலில் ஆங்கில அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதாக இருந்தாலும் சமூக சீர்திருத்தங்களைக் கோருவதில் சமரசமற்ற முறையில் இயங்குவதாக இருந்தது தெளிவாகத் தெரிகிறது.

1930ஆம் ஆண்டு இரண்டாவது சுயமரியாதை இயக்க மாநாடு ஈரோட்டிலும், 1931ஆம் ஆண்டு மூன்றாவது மாநாடு விருதுநகரிலும் நடைபெற்றது. இந்த இரண்டு மாநாட்டிலும் சுயமரியாதைப் பெண்கள் மாநாடு, சுயமரியாதை வாலிபர்கள் மாநாடு ஆகியவை தனியாக நடைபெற்றன. இவற்றில் முக்கியமான பல சீர்திருத்த கருத்துக்கள் தீர்மானங்களில் முன் மொழியப் பட்டன.

குழந்தைத் திருமணம், தேவதாசி முறை முதலியவற்றை இப்பெண்கள் மாநாடுகள் வன்மையாகக் கண்டித்த அதே நேரம் பெண்களின் திருமண வயதை முறைப்படுத்திய சாரதா சட்டத்தை மகிழ்வுடன் வரவேற்றன.

சொத்தில் சம உரிமை, கார்டியனாக இருப்பது, தத்து எடுத்துக் கொள்வது போன்றவற்றில் சம உரிமை, சட்டமன்றம் மற்றும் நகர்மன்றங்களுக்குப் பெண்கள் தேர்ந்தெடுக்கப் பட ஏற்பாடு செய்வது, பெண் கல்வியை 11 வயதோடு நிறுத்தாமல் 30 வயது வரை படிக்க வைத்தல், பெண்களை காவல் துறை மற்றும் ராணுவத்தில் சேர்த்தல், அனாதை விடுதிகள் திறப்பு, ரயில் நிலையங்களில் பெண்கள் தங்குவதற்கென்று தனியறை, பெண் ஊழியர்கள் நியமனம், கள்ளுக்கடை ஒழிப்பு போன்றவை குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றம் குறித்த அக்கறையுடன், அவர்களுக்கென தனி மாநாடு ஏற்படுத்தித் தந்த முதல் அமைப்பு சுயமரியாதை இயக்கமே ஆகும்.

(தொடரும்) *Download As PDF*

Wednesday 23 September 2009

18. பட்டம் துறந்த கதை

ஈ.வெ.ரா.வுக்கும், காந்திஜிக்குமிடையே நடைபெற்ற உரையாடல் சுவையானதாகும். அதன் ஒரு பகுதியை இங்கே காணலாம்.

ஈ.வெ.ரா.: இந்து மதம் மறைய வேண்டும்.

காந்தி: ஏன்?

ஈ.வெ.ரா.: இந்து மதம் என்று எதுவும் கிடையாது.

காந்தி: இருக்கிறது.

ஈ.வெ.ரா.: அது பிராமணர்கள் உருவாக்கிய பிரமை.

காந்தி: அனைத்து மதங்களும் அதைப் போன்றதுதான்.

ஈ.வெ.ரா.: இல்லை. இதர மதங்களுக்கு வரலாறு, லட்சியங்கள், கோட்பாடுகள் உள்ளன. மக்கள் அவைகளை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

காந்தி: இந்து மதத்தில் அத்தகையது எதுவும் இல்லையா?

ஈ.வெ.ரா.: சொல்வதற்கு என்ன இருக்கிறது? பிராமணன், சூத்திரன், வைசியன் போன்ற சாதீய உட்கூறுகள் தவிர அதில் வேறெந்த விதியோ, சான்றோ கிடையாது.

காந்தி: அது குறைந்தபட்சம் இந்தக் கோட்பாட்டைக் கொண்டுள்ளது.

ஈ.வெ.ரா.: இருந்தும் என்ன பயன்? அதன்படி பிராமணர்கள் உயர்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள். நீங்களும், நானும் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள்.

காந்தி: நீங்கள் சொல்வது தவறு. வர்ணாசிரம தர்மத்தில் தாழ்ந்த சாதி என்றும், உயர்ந்த சாதி என்றும் எவ்வித தாரதம்மியமும் கிடையாது.

ஈ.வெ.ரா.: நீங்கள் இதைச் சொல்லலாம். ஆனால் நடைமுறையில் அது வேறுவிதமாக இருக்க முடியாது.

காந்தி: இல்லை. சமத்துவம் இருக்கிறது.

ஈ.வெ.ரா.: இந்துமதம் இருக்கும் வரை இதை யாரும் பெற முடியாது.

காந்தி: இந்துமதத்தின் மூலமாக எவரும் இதைப் பெற முடியும்.

ஈ.வெ.ரா.: அப்படியானால் பிராமணர்- சூத்திரர் வேறுபாட்டை நிரூபிக்கும் மதச்சான்றுகள் குறித்து என்ன சொல்வது?

காந்தி: இந்து மதம் இருக்கிறது என்பதை நிரூபிப்பதற்கு சான்றுகள் இல்லை என்றுதானே நீங்கள் வாதாடுகிறீர்கள்?

ஈ.வெ.ரா.: மதம் என்று எதுவும் கிடையாது. எனவே அதை நிரூபிக்கச் சான்றுகளும் கிடையாது என்றுதான் நான் சொல்லி வருகிறேன். மதம் இருக்கிறது என்று ஏற்றுக் கொண்டால், அதை நிரூபிக்கும் சாட்சியங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

காந்தி: நாம் மதத்தை ஏற்றுக் கொண்டு சான்றுகளை உருவாகிக்கொள்ளலாம்.

ஈ.வெ.ரா.: அது சாத்தியமற்றது. மதம் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டால் நாம் எதையும் மாற்ற முடியாது அல்லது மாற்றியமைக்கவும் முடியாது.

காந்தி: இதர மதங்களைப் பொறுத்தவரை நீங்கள் சொல்வது சரிதான். ஆனால், இந்து மதத்தைப் பொறுத்தவரை சரியல்ல. அதை ஏற்றுக் கொண்டபின் அதன் பெயரால் நீங்கள் எதையும் செய்ய முடியும். அதை யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள்.

ஈ.வெ.ரா.: நீங்கள் இதை எப்படிச் சொல்ல முடியும்? யார் அதை ஏற்றுக் கொள்வார்கள்? அதில் நீங்கள் முன்னோடிப் பங்கை ஆற்ற முடியுமா?

காந்தி: நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். இந்து மதம் என்று எதுவுமில்லையென்று நான் ஏற்றுக் கொள்கிறேன். அதற்கென்று திட்டவட்டமான விதி இல்லையென்பதையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். அதனால்தான் இந்துக்கள் என்று நம்மை நாம் கூறிக்கொள்வதின் மூலம் நாம் விரும்பும் முறையில் அதற்காக பொதுவான லட்சியங்களை நாம் உருவாக்கிக் கொள்ள முடியும். இந்து மதம் மட்டுமே மக்களை நல்ல வழிகளுக்குக் கொண்டு செல்ல முடியும் என்பதை நான் உறுதியாகக் கூற முடியும்; ஏனென்றால் இதர மதங்களுக்கென்று கோட்பாடு, வரலாறு மற்றும் இதர சான்றுகள் உள்ளன; அதை யாராவது மாற்றினால் ஒழிக்கப்பட்டே விடுவார்கள்; கிறிஸ்துவர்கள் ஏசுநாதர் கூறியபடி நடந்து கொள்ள வேண்டும். அதேபோன்று முஸ்லீம்கள், முகம்மது நபியும், குரானும் சொல்வது போல வாழ வேண்டும். அதை மாற்றுவதற்கு ஏதேனும் முயற்சி செய்யப்படுமேயானால் அது மதத்தின் கட்டளைகளுக்கு மாறானதாகும். அவ்வாறு இல்லை என்று கூறுபவர்கள் மதத்துக்கு வெளியே வந்து பிரகடனம் செய்யலாம்; ஆனால் உள்ளிருந்து கொண்டே, அதை மறுக்க முடியாது. இதர மதங்களின் உண்மையான நிலமை இதுதான். ஆனால், அவர்களைப் போல் அல்லாது இந்து கோட்பாட்டில் எவர் ஒருவரும் முன்னால் வந்து தயக்கமின்றி எதையும் போதிக்க முடியும். இந்து மதத்திலிருந்து பல மகத்தான மனிதர்கள் தோன்றி, பல விஷயங்களைக் கூறியுள்ளனர். எனவே இந்து மதத்தில் இருக்கும்பொழுதே, நாம் அதை மாற்ற முடியும். மனிதகுலத்தின் நன்மைக்காக பல விஷயங்களைச் செய்ய முடியும்.

ஈ.வெ.ரா.: மன்னிக்கவும். அதைச் செய்ய முடியாது.

காந்தி: ஏன்?

ஈ.வெ.ரா.: இந்து மதத்திலுள்ள சுயநலக் கும்பல் அவ்வாறு செய்ய உங்களை அனுமதிக்காது.

காந்தி: நீங்கள் ஏன் இவ்வாறு கருத வேண்டும்? இந்து கோட்பாட்டில் தீண்டாமை இல்லையென்ற அம்சத்தை இந்துக்கள் ஏற்றுக் கொள்வார்களா?

ஈ.வெ.ரா.: கொள்கையை ஏற்றுக் கொள்வதிலும், அதை நடைமுறைக்குக் கொண்டுவருவதிலும் வித்யாசம் உண்டு. எனவே அதை கடைபிடிப்பது சிரமமானதாகும்.

காந்தி: நான் அதைச் செய்கிறேன். கடந்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதை நீங்கள் கண்டீர்களா?

ஈ.வெ.ரா.: நான் புரிந்து கொள்கிறேன். ஆனால், அடிப்படையில் எந்த மாற்றமும் இல்லை. அதெல்லாம் உங்கள் செல்வாக்கினாலும், அவர்களுக்கு நீங்கள் தலைமை தாங்க வேண்டிய அவசியத்தினாலும் ஏற்பட்டது என்பதுடன் சுயநலத்தின் காரணமாக நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்வது போல் நடிக்கிறார்கள். அதற்குப் பதிலாக நீங்கள் அவர்களை நம்புகிறீர்கள்.

காந்தி: (சிரித்துக் கொண்டே) யார் அவர்கள்?

ஈ.வெ.ரா.: பிராமணர்கள் அனைவரும்.

காந்தி: உண்மையிலேயா?

ஈ.வெ.ரா: ஆம்.

காந்தி: உண்மையாகவா?

ஈ.வெ.ரா.: ஆம். அந்த விஷயத்தில் உங்களோடு கூட வரும் பிராமணர்கள் அனைவரும்.

காந்தி: அப்படியானால் எந்த பிராமணரையும் நீங்கள் நம்புவதில்லையா?

ஈ.வெ.ரா.: என்னை ஈர்ப்பதில் அவர்கள் தோல்வி அடைந்துவிட்டனர்.

காந்தி: ராஜகோபாலாச்சாரியைக் கூட நீங்கள் நம்புவதில்லையா?

ஈ.வெ.ரா.: அவர் நல்லவர், நேர்மையானவர், தியாகம் செய்யும் மனிதர். ஆனால் இந்த நற்குணங்கள் அனைத்தும் அவர் சமூகத்திற்கு சேவை செய்ய அவருக்கு உதவுகிறது. அவர் சுயநலம் அற்றவர். ஆனால் நான் என் சமூகத்தின் நலனை அவருடைய நலன்களுக்கு அடகு வைக்க முடியாது.

காந்தி: இதைக் கேட்க வியப்பாக இருக்கிறது. பிரச்சனை அதுதான் என்றால், உலகில் ஒரு நேர்மையான பிராமணனை தேடிக் கண்டுபிடிப்பது என்பது மிகுந்த சிரமமானது என்பதுதான் உங்கள் கருத்தா?

ஈ.வெ.ரா.: இருக்கலாம், அல்லது இல்லாமலிருக்கலாம். நான் யாரையும் பார்க்கவில்லை.

காந்தி: அவ்வாறு சொல்லாதீர்கள். நான் ஒரு பிராமணனை பார்த்தேன். அவர் ஒரு சிறந்த பிராமணர் என்றே இன்றும் கருதுகிறேன். அவர்தான் கிருஷ்ண கோகலே.

ஈ.வெ.ரா.: ஓ ! உங்களைப் போன்ற மகாத்மாவுக்கு இந்த உலகத்தில் ஒரே ஒரு நல்ல பிராமணரைக் கண்டுபிடிப்பது சாத்தியமாகியிருக்கலாம். ஆனால் என்னைப் போன்ற சாதாரணமான பாவிகளுக்கு ஒரு நல்ல பிராமணரைக் கண்டுபிடிப்பது எவ்வாறு சாத்தியமாகும்?

காந்தி: (சிரித்துக் கொண்டே) உலகமானது எப்பொழுதும் அறிவுஜீவிகளின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. பிராமணர்கள் படித்த மக்கள். அவர்கள் என்றென்றும் இதரர்கள் மீது கட்டுப்பாட்டைச் செலுத்துவார்கள். எனவே, அவர்களை விமர்சிப்பதால் எவ்வித பயனுள்ள காரியமும் ஏற்படப் போவதில்லை. இதரர்களும் அந்த மட்டத்தை அடைய வேண்டும்.

ஈ.வெ.ரா.: இதர மதங்களில் இத்தகைய மனிதர்களை நாம் காண முடிவதில்லை. இங்கே இந்த மதத்தில் மட்டுமே பிராமணர்கள் அறிவுஜீவிப் பகுதியை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள். மீதமுள்ள 90 சதவீதத்தினர் கல்வியறிவு அற்றவர்களாகவோ அல்லது அப்பாவிகளாகவோ இருக்கிறார்கள். அனவே ஒரு சமூகத்தில் ஒரு பகுதி மக்கள் மட்டுமே அறிவு ஜீவிகளாகவும், படித்த குழுவாகவும் இருப்பது அந்த சமூகத்திலுள்ள இதர பகுதி மக்களின் நல்வாழ்வுக்கு ஊறு விளைவிக்கக்கூடியது இல்லையா? எனவேதான், இந்த நிலமைக்கு பிரதான காரணமாக உள்ள மதம் என்பது தொலைந்து போக வேண்டும் என நான் தொடர்ச்சியாகக் கூறி வருகிறேன்.

காந்தி: உங்கள் நிலைப்பாடு என்ன? இந்து மதத்தையும் அதைப்போன்ற சமூகத்திலிருந்து பிராமணர்களையும் ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதற்காக நீங்கள் நிற்கிறீர்கள் என்று நான் கருதலாமா?

ஈ.வெ.ரா.: போலித்தனமான இந்து மதம் ஒழிந்தால், பிராமணர் எவரும் இருக்கமாட்டார். நாம் சூத்திரர் வருணத்தைச் சேர்ந்தவர்கள் அனைத்துமே பிராமணர் பிடியில்தான் உள்ளன.

காந்தி: அது சரியல்ல. அவர்கள் இப்போது நான் கூறுவதை கேட்க மாட்டார்களா? இந்தக் கோட்பாட்டின் கீழ் ஒன்று பட்டுள்ள நாம் அதனுடைய எதிர்மறையான அம்சங்களை இப்பொழுதும் அகற்ற முடியும்.

ஈ.வெ.ரா.: இதை நீங்கள் சாதிக்க முடியாது என்பதே என்னுடைய தாழ்மையான கருத்து. அப்படி நீங்கள் சாதிக்க முடிந்தாலும், எதிர் காலத்தில் உங்களைப் போன்ற சில மகத்தான மனிதர்கள் தோன்றி நீங்கள் செய்த வேலையை மாற்றிவிடுவார்கள்.

காந்தி: அது எவ்வாறு சாத்தியம்?

ஈ.வெ.ரா.: நீங்கள் முன்பு கூறியது போல, இந்து மதத்தின் பெயரால் எவர் ஒருவரும் தன்னுடைய சிந்தனை வழிக்கேற்ப மக்களைக் கொண்டுவர முடியும். அதே வழியில் நாளை தோன்றக் கூடிய ஒரு மகத்தான மனிதன் இந்துக் கோட்பாட்டின் பெயரால் எதையும் செய்ய முடியும்.

காந்தி: எதிர்காலத்தில் எவரொருவரும் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும் முயற்சி நடைமுறைச் சாத்தியமற்றது இல்லையா?

ஈ.வெ.ரா.: இ தைக் கூறுவதற்கு என்னை மன்னிக்கவேண்டும். இந்து மதத்தின் உதவியோடு ஸ்தூலமாக எதையும் செய்வது உங்களுக்குச் சாத்தியமற்றது. மாற்றத்தைச் செய்ய பிராமணர்கள் உங்களை விட மாட்டார்கள். அவர்களுடைய நலன்களுக்கு எதிராக நீங்கள் வேலை செய்வதாக அவர்களுக்குத் தெரிந்தால், உங்களை எதிர்த்துப் போராடத் துவங்கி விடுவார்கள். அத்தகையதொரு மாற்றத்தைச் செய்ய இதுவரை எந்த மகத்தான மனிதரும் முயற்சிக்கவில்லை. யாராவது அதற்காக முயற்சித்தால் பிராமணர்கள் அவரைச் சும்மா விட மாட்டார்கள்.

காந்தி: நீங்கள் பிராமணர்களுக்கெதிராக வெறுப்பைக் கொண்டுள்ளீர்கள். அதுதான் உங்கள் சிந்தனையில் பிரதானமாக நிற்கிறது. நம்முடைய விவாதம் மூலம் நாம் இதுவரை எவ்வித உடன்பாட்டுக்கும் வரவில்லை. எனினும் எதிர்காலத்தில் இரண்டு அல்லது மூன்று முறை நாம் சந்தித்துப் பேசுவோம். நமது நிலை குறித்து தீர்மானிப்போம். (நன்றி- ஈ.வெ.ரா.பெரியார் வாழ்வும் பணியும்)

காந்தியை பார்த்து விட்டு திரும்பிய பின் முதல் வேலையாக ராமசாமி செய்த காரியம் என்ன தெரியுமா? நாடே தலையில் தூக்கி வைத்து வைத்துக்கொண்ட்டாடிக்கொண்டிருந்த மகாத்மா காந்தியை தன் பத்திரிக்கைகளில் ‘ஸ்ரீமான் காந்தி' என்றே குறிப்பிடலானார். அதோடு பத்திரிக்கையின் முகப்பில் இருந்த ராமசாமி நாயக்கர் என்ற பெயரில் இருந்த நாயக்கரையும் எடுத்து விட்டு, ஈ.வெ.ராமசாமி என்று போடத்தொடங்கினார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய பின்னர் தனது குடியரசு நாளிதழில் பிராமணர்களின் உயர்வு வேசம் பொய் என்று எழுதத்தொடங்கினார் ஈ.வெ.ரா. ஒருவன் தன்னைத் தான் உயர்ந்தவன் என்று சொல்லிக்கொள்ளுவதையும், மற்றவர்களை தாழ்வானவர்கள் என்று பிரகடனப்படுத்துவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக பேசியும், எழுதியும் வரலானார் ஈ.வெ.ரா. தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை விமர்சித்து வருவதோடு, பிராமனர் அல்லாதோர் இயக்கத்திற்கு ஆதரவாகவும் எழுதிவந்தார்.

ஈ.வெ.ரா காங்கிரஸ் கட்சியைவிட்டு வெளியே வந்துவிட்டாலும், அக்கட்சியில் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யாமலிருந்தார். அதனால் ராமசாமியை கண்காணித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு காங்கிரஸ் கட்சி ஒரு குழுவை நியமித்தது. அக்குழு தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஈ.வெ.ராமசாமி பேசிவருவதை கண்டது. பின்னர் தலைமையிடத்தில் அறிக்கையை சமர்ப்பித்தது. காங்கிரஸ் விரோத போக்கை கொண்டிருப்பதாகக்கூறி, ஈ.வெ.ராமசாமியின் அடிப்படை உறுப்பினர் பதவியையும் பறித்துக்கொண்டது காங்கிரஸ்.

இதன் பிறகு ஈ.வெ.ரா இன்னும் சுதந்திரமாக உணர்ந்தார். இனி காந்தி மாதிரியான எந்த தலைவருக்கும் பதில் சொல்லவேண்டிய கட்டாயம் இருக்காது. தொடர்ந்து மக்களிடையே சொற்பொழிவு செய்வது, மனிதப் பிறப்பில் தான் உயர்ந்தவன் என்று சொல்லுவதையும் கண்டித்து எழுதிவந்தார். நீதிக்கட்சியின் கூட்டங்களில் தொடர்ந்து இடம்பெற்றார் ஈ.வெ.ரா.

சில மாதங்களில் சென்னை சட்டமன்றத்திற்கு பொதுத்தேர்தல் வந்தது. அப்போது எந்த கட்சியிலும் தன்னை இணைத்துக்கொள்ளாத ராமசாமி தனியாக ஒரு கட்சிக்கு ஆதரவு என்ற நிலைஎடுக்காமல் இருந்தார். ’நல்ல திறமை உடையவர்கள், பார்ப்பனர் அல்லாதவர்கள், மற்ற மனிதனை தாழ்வாக எண்ணாதவர்கள், தன்னலம் காணாது மற்றவர்களுக்கு உழைக்கக்கூடியவர்கள். இவர்களே சட்டசமைக்கு போக தகுதியானவர்கள். இது போன்றோரை மக்கள் தேர்வு செய்தல் வேண்டும்’ என்று தமது பத்திரிக்கையில் எழுதியதோடு ஒதுங்கி நின்று விட்டார் ஈ.வெ.ரா.

தேர்தலில் நீதிகட்சி பெரும் தோல்வியை சந்தித்தது. முதலமைச்சராக இருந்த பனகல் அரசர் கூட மிகுந்த சிரமங்களுக்கிடையிலேயே வெற்றி பெற முடிந்தது. காங்கிரஸ் கட்சியில் பிரிவான சுயராஜ்ய கட்சி பெற்றி பெற்றது. ஆனால் அமைச்சரவை அமைக்கமாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருந்ததால்.. சுயேட்சை உறுப்பினராக வெற்றி பெற்றிருந்த டாக்டர். சுப்பராயன் அமைச்சரவையை அமைத்தார். இவருக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்தது.(இச்சமயத்தில் கூட்டு முதல்-மந்திரிகளே தமிழகத்தில் இருந்தனர்) நீதிகட்சி எதிர்கட்சி வரிசையில் அமர்ந்தது.

தேர்தலில் தோல்வி நீதிகட்சியில் பலருக்கும் அதிர்ச்சியை தந்திருந்தது. அதனால் பல தலைவர்கள் மீண்டும் காங்கிரஸ் பக்கமே போகலாமெ முடிவு செய்திருந்தார்கள். இந்த சமயத்தில் தான் மதுரையில் நடந்த பிராமணர் அல்லதோர் மாநாடு நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்டு ஈ.வெ.ராமசாமி பேசினார். அவரின் அனல் பறக்கும் பேச்சு பலருக்கும் நம்பிக்கையைக் கொடுத்தது. நீதிக்கட்சியில் தலைவர்களும் தொண்டர்களும் மிகுந்த உற்சாகமடைந்தார்கள். மதுரையைத்தொடர்ந்து திருநெல்வேலி, கோயம்பத்தூர் போன்ற பல இடங்களிலும் பிராமணர் அல்லதோர் மாநாடுகள் நடத்தப்பட்டன. அக்கூட்டங்களுக்கும் சென்று தமது சுமயரியாதைக்கொள்கைகளை பறைசாற்றும் மேடையாக அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டார் ஈ.வெ.ரா.

(தொடரும்) *Download As PDF*