Sunday 9 August 2009

தமிழும், தமிழரும் – தந்தை பெரியார் - பாகம்-3

(தொடர்ச்சி..3)


கம்பனுக்கு சிலை வைத்தது மானம் கெடுவதா?

உலகில் ஒரு மாபெரும் மானம் கெட்ட சமுதாயம் என்றால் அது கம்பனுக்கு சிலை வைக்க வேண்டும் என்று கூறும் கூட்டமேயாகும்.

இன்று நம் நாட்டில் சமதர்மம் என்பது ஜாதியில், செல்வத்தில், பொருளில் என்பது மாத்திரம் அல்லாமல் குணத்திலும் சமதர்மம் என்பதாக கருதப்படுகிறது.

பார்ப்பானும், பறையனும் சமம்; முதலாளியும், பிச்சைக்காரனும் சமம் என்பதோடு யோக்கியனும், அயோக்கியனும் சமம். தமிழர் சமுதாயத்திற்கு நன்மை செய்தவனும், கேடு செய்து கூலிவாங்கி பிழைப்பவனும் சமம், சாணியும், சவ்வாதமும் சமம் என்ற அளவுக்கு இன்று நம் நாட்டில் சமதர்மம் தாண்டவமாடுகிறது.


மக்களிடம் சமத்துவம் ஏற்படுவதற்கு முட்டுக்கட்டை போடுவதா?

இது ஒருபுறம் இருந்தாலும் பல்லாயிரம் ஆண்டுகளாக கீழ்மைப்படுத்தப்பட்டு இழிநிலையில் இறுத்தப்பட்ட தமிழன் விடுதலை பெற்ற மனிதத் தன்மை அடைந்த மற்ற உலக மக்களுடன் சரிசமமாய் வாழவேண்டுமென்று உயிரைக் கொடுத்து சிலர் பாடுபடுகிற போது இந்த தமிழ்ப் புலவர் கூட்டமும், அவர்களால் முட்டாள்களாகப்பட்ட தமிழர் கூட்டமும், தமிழ், தமிழ் மொழி, தமிழர் சமுதாயம் என்னும் பேரால் முட்டுக்கட்டை போடுவது என்றால் இந்தக் கூட்டத்திற்கு என்றைக்குத் தான் தன்மான உணர்ச்சி வந்து மனிதத்தன்மை ஏற்படப் போகிறது?


பார்ப்பான் உன் தமிழை ஏற்கிறானா? ஏன்?

அட முட்டாள்களா! உங்கள் தமிழை பார்ப்பான் நீசமொழி என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சாஸ்திரங்களில் எழுதிவைத்து, சாமிகள் இருக்குமிடத்தில் புகாமல் விரட்டி அடித்ததோடு மாத்திரமில்லாமல் உன்னையும் உள்ளே புகவிடாமல் தீண்டத்தகாதவான வைத்திருக்கிறானே?

இதற்கு நீ என்றாவது வெட்கப்பட்டாயா? உங்களப்பன் வெட்கப்பட்டாரா? அவனை விட்டு விட்டு என்னிடம் வந்து மோதிக்கொள்கிறாயே? இதற்கு அறிவில்லை என்று பெயரா? மானமில்லை என்று பெயரா? “நீ யாருக்கு பிறந்தவன்?” என்று என்னைக் கேட்கிறாய்; நான் கேட்கிறேன், உன் தமிழையும், உன்னையும் உள்ளே விடாமல் இரண்டையும் வெளியில் நிறுத்தி கும்பிடு போடும்படி பார்ப்பான் செய்கிறான். நீயும் அதற்கேற்ப அடங்கி ஒடுங்கி நின்று குனிந்து கும்பிடுகிறாயே? மடையா! மானங்கெட்டவனே! நீ யாருக்குப் பிறந்தவன் என்று கேட்கிறேன்.


தமிழ்ப்படித்தான் பலன் இதுதான்!

புலவனே! நீ கெடுவதோடு தமிழ் மக்களை ஒவ்வொருவனையும் பார்த்து “நீ யாருக்கு பிறந்தவன்?” என்று கேட்கும்படி செய்கிறாயே? இதுதானே உன் தமிழின், தமிழ் சமுதாயத்தின் பெருமை?

தமிழ் உயர்மொழி எனில் தமிழன் கீழ்மகனானது எப்படி?

தமிழ் உயர்மொழியானால், தமிழன் கலப்படமற்ற சுத்தப் பிறவியானால், தமிழ் பேசுகிறவன் தமிழன் என்கிற காரணத்திற்கு ஆக உன்னை சூத்திரன், பார்ப்பானின் வைப்பாட்டி மகன் என்று கடவுள் சொன்னதாக சாஸ்திரம் எழுதிவைத்து, “கீதை” வெங்காயம் சொல்லுகிறது என்று சொல்லி உன்னை தீண்டாத ஜாதியாக பார்ப்பானும், அவன் பொண்டாட்டி, பிள்ளை, ஆத்தாள், அக்காளும் நடத்துகிறார்களே? நீ நாக்கைப் பிடுங்கிக் கொண்டாயா? நீ யாருக்கு பிறந்தாய் என்பது பற்றி சிறிதவது சிந்தித்து இருந்தால், என்னை நீ யாருக்குப் பிறந்தாய் என்று கேட்டு இருக்க மாட்டாய்.

எனக்கு நான் யாருக்குப் பிறந்தேன் என்பது பற்றி கவலை இல்லை. அது என் அம்மா சிந்திக்க வேண்டிய காரியம். நான் யாருக்குப் பிறந்தேன் என்று என்னாலும் சொல்ல முடியாது – தம்பீ! உன்னாலும், அதாவது நீ யாருக்கு பிறந்தாய் என்று (உன்னாலும்) சொல்ல முடியாது; அந்தப் பிரச்சினையே முட்டாளுக்கும், அயோக்கியனுக்கும் தான் தேவை.
மனிதனுக்கு மானம் தேவை!

யாருக்குப் பிறந்தாலும் மனிதனுக்கு மானம் தேவை; அது உன்னிடம் இருக்கிறதா? என்னிடம் இருக்கிறதா? என்பது தான் இப்போது சிந்திக்க வேண்டிய தேவை.

அதையும் விட தமிழ் மொழியிலும், தமிழ்ச் சமுதாயத்திலும் இருக்கிறதா? இருப்பதற்கு தமிழ் உதவியதா? உதவுகிறதா? என்பதுதான் முக்கியமான, முதலாவது கேள்வி.

ஈனசாதியாக்கிய முட்டாளை வணங்குவது ஈனமல்லவா?

தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பதால் உனக்கு பொத்துக் கொண்டது. ஆனால் தமிழன் ஈனஜாதிப்பயன் என்று கூறி உன்னை ஈனஜாதியாக நடத்துவது பற்றி உனக்கு எங்கும் பொத்துக் கொள்ளவில்லை! அது மாத்திரமல்ல; முட்டாள் பசங்கள் உன்னை ஈனஜாதியாய் நடத்துகின்றவர்கள் காலில் விழுகிறீர்கள். அவனை சாமி என்று கூறுகிறீர்கள், பிராமணர்கள் என்று ஒப்புக் கொள்ளுகிறீர்கள்.


சிந்தித்துப் பார்! நீ யார், நீங்கள் யாரென்று?

“வாழ்க்கை இன்ப துன்பங்களிலும் போக போக்கியங்களிலும் இருவருக்கும் சம உரிமை உண்டு என்றும் குறிப்பிட சமத்துவ சுபாவம் மிளிரும் மாறுதல் அவசியமா இல்லையா என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். உங்கள் மனைவிமார்களை நினைத்துக் ஒண்டே யோசிக்காதீர்கள். உங்களுடைய செல்வப் பெண் குழந்தைகளியும், அன்பு சகோதரிகளையும் மனதில் கொண்டு யோசித்துப் பாருங்கள்.

உங்கள் தாய்மார் சுதந்திரவாதிகளாய் இருந்தால் நீங்கள் எப்படி இருந்திருப்பீர்கள் என்பதையும் யோசித்துப் பாருங்கள். இன்று உலகில் கீழ்சாதியார் என்பவர்களுக்கு சம சுதந்திரம் வேண்டும் என்று போராடுகிறோம். அரசாங்கத்தின் இடமிருந்து விடுதலை பெற்று சுதந்திரமாய் வாழ வேண்டுமென்று போராடுகிறோம். அதே போராட்டத்தை நமது தாய்மார்கள் விஷயத்திலும், நமது சகோதரிகள் விஷயத்திலும் நம் பெண் குழந்தைகள் விஷயத்திலும் கவனிக்க வேண்டாமா?


(முற்றும்)

---------------------------
நன்றி :
தமிழும், தமிழரும் – தந்தை பெரியார்

வெளியீடு:-
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்
50, ஈ.வெ.கி. சம்பத் சாலை, சென்னை – 600 007. *Download As PDF*

No comments: