Tuesday, 4 August 2009

16. காங்கிரஸில் இருந்து வெளியேறிய ஈ.வெ.ரா!

பலமான யோசனைக்குப் பின் பத்திரிக்கையைக் கொண்டு வந்தார் ஈ.வெ.ராமசாமி. 1925ம் ஆண்டு மே மாதம் இரண்டாம் நாள் ஈரோட்டில் இருந்து ’குடியரசு’ என்னும் வார இதழ் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் சுவாமிகளால் தொடங்கி வைக்கப்பட்டது. மனசாட்சிக்கு உண்மை என்று பட்டதை அஞ்சாது தெரிவிக்கவும், மக்களுக்கு சுயமரியாதை, சகோதரத்துவம், சமத்துவம் ஓங்கி வளர்த்தெடுக்கவும், உயர்வு தாழ்வு உணர்ச்சிகளால் ஏற்படும் சாதிச்சண்டைகளை கலையவும், தேசத்தை முன்னிருத்தாமல் ஒவ்வொரு வகுப்பினரும் முன்னேறவேண்டும் என்ற நோக்கத்தில் தாம் பத்திரிக்கை தொடங்கி இருப்பதாக முதழ் இதழிலேயே தம் கருத்தை வெளியிட்டார் ஈ.வெ.ரா.

குடியரசு வெளியான கொஞ்ச காலத்திலேயே தமிழக மக்களிடம் செல்வாக்குப் பெறத்தொடங்கியது. ஆண்டாண்டு காலமாய் சுமந்து வரும் அடிமைசங்கிலியை உடைத்து சுக்கு சுக்கலாக்கும் என்ற வேட்கை அதிகமானதால் மக்களிடம் விரைந்து பிரபலமானது.

தமிழக காங்கிரஸ் தலைவராக சில ஆண்டுகள் பதவி வகித்தார் ஈ.வெ.ரா. பின்னர் டாக்டர் வரதராஜலு நாயுடு என்பவர் தலைவராகவும், ஈ.வெ.ரா காரியதரிசியாகவும் பணியாற்றினார்கள். சென்னையில் இருந்த காங்கிரஸ் கமிட்டியை ஈரோட்டுக்கு மாற்றி, அங்கிருந்தே செயல்பட்டு வந்தார் ஈ.வெ.ரா. அந்த காலகட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் தான் தமிழக அரசியலில் புதிய திருப்பத்திற்கு அடித்தளமாக அமைந்தது. தமிழ்நாட்டுக் குருகுலம்- என்ற பெயரில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன்மாதேவி என்ற ஊரில் சிறுவர்களுக்கான விடுதி ஒன்றினை நடத்திவந்தார் வ.வே.சுப்பிரமணி அய்யர். இந்த குருகுலம் காங்கிரஸ் கட்சியின் பொருளுதவியில் நடந்து வந்தது. தொடர்ந்து பணம் கொடுக்க முடியாவிட்டாலும் கட்சியில் இருந்து அவ்வப்போது பணம் வந்துகொண்டிருந்தது. தவிரவும் காங்கிரஸ் கட்சியின் மீது பற்றுக்கொண்ட பலர் நிதி உதவு அளித்தும் வந்தனர். ஈ.வெ.ரா, திரு.வி.க, டாக்டர் வரதராஜலு நாயுடு போன்ற பலரும் வசூல் செய்தும் குருகுலத்தின் தேவைகளை பூர்த்தி செய்து வந்தார்கள்.

அதிகம் படித்த வ.வே.சு அய்யர் நடத்தி வந்த குருகுலத்தில் வருணாசிரம அடிப்படியில் நடத்தப்பட்டு வந்தது. பார்ப்பன சிறுவர்களுக்கு தனியிடம், தனித்தண்ணீர், தனி உணவு என்றும் பார்ப்பனர் அல்லாத குழந்தைகளுக்கு வேறு இடம், வேறு தண்ணீர், வேறு உணவு என்று வித்தியாசத்தை கடைப்பிடித்து வந்தார். பார்ப்பன சிறுவர்களுக்கு காலை உணவாக உப்புமா போன்றவை சூடாக பரிமாறப்பட்டது. பார்ப்பனர் அல்லாது குழந்தைகளுக்கு பழைய சேற்றையே கொடுத்து வந்தனர். இவ்விவகாரம் காங்கிரஸ் கட்சிக்கு தெரிய வந்ததும், போக்கை மாற்றிக்கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டது. ஆனால் வ.வே.சு அய்யர் காதில் போட்டுக்கொண்ட மாதிரித்தெரியவில்லை.காங்கிரஸ் மூலமும், கட்சிகாரர்கள் மூலமும் கிடைத்து வந்த பொருளுதவிகளை தர மறுத்தார் ஈ.வெ.ரா. ஆனால் வ.வே.சு அய்யரோ காங்கிரஸில் இன்னொரு காரியதரிசியாக இருந்த பார்ப்பனர் டி.எஸ்.எஸ்.ராஜன் என்பவர் மூலம் பொருளுதவிகளை பெற்றுக்கொள்லத்தொடங்கினார்.

காங்கிரஸ் கட்சியும், பல காங்கிரஸ் கட்சிக்காரர்களும் வ.வே.சு அய்யரின் செயலை கண்டித்தமாதிரித் தெரியவில்லை. உள்ளுக்குள் குமைந்துகொண்டிருந்தார் ஈ.வெ.ரா. பின்னாலில், 1948-ல் சென்னை மாகான முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓமந்தூரார் பி.ராமசாமி, தம் மகனை சேரன்மாதேவியில் இருக்கும் குருகுலத்திற்கு படிக்க அனுப்பினார். அங்கு அவரது மகன் பார்ப்பன சிறுவர்களுக்கு வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பானையில் இருந்து தண்ணீர் எடுத்து குடித்தமைக்காக தண்டிக்கப்பட்டான். சாதி தலைவிரித்தாடியதை மகனின் தழும்புகள் மூலம் அறிந்துகொண்ட ஓமந்தூரார் மகனை அழைந்த்து வந்து ஈ.வெ.ராவிடம் காட்டினார். அச்சிறுவனும் அங்கு நிகழ்ந்த அட்டூழியங்களை பட்டியல் போட்டிருக்கிறான்.

பார்ப்பனியத்தின் கொடுமைகளை இனியும் பொருத்துக்கொள்ள முடியாது என்ற முடிவுக்கு வந்தார் ஈ.வெ.ரா. காங்கிரஸ் கட்சியில் இருந்த பார்ப்பனர் அல்லாதவர்களான திரு.வி.க, டாக்டர்.வரதராஜலு நாயுடு, எஸ்.ராமநாதன், சண்முகம் செட்டியார், ஓமந்தூரார், தங்கப்பெருமாள் பிள்ளை, தண்டபாணிப் பிள்ளை போன்றோரின் உதவியோடு சாதிய அடக்குமுறைக்கு எதிரான தம் குரலை உயர்த்தினார் ஈ.வெ.ரா. ஆனால் அய்யர் அசைந்து கொடுப்பதாக இல்லை. காங்கிரஸ் மேலிடம் சொன்னால் அய்யர் கேட்பார் என்று எண்ணி காந்திக்கு கடிதம் எழுதினார்கள். காந்தியும் சமபந்தி போஜனமாவது செய்யுங்கள் என்று வ.வெ.சு அய்யருக்கு எழுதினார். இதற்கும் அய்யர் மறுத்துவிட்டார்.

இந்த காலகட்டத்தில் தான் ஈ.வெ.ராவுக்கு பளிச்சென்று ஒரு விசயம் புலப்பட்டது. பார்ப்பனர் பேசுகின்ற தேசியம் போலி; தீண்டாமை ஒழிப்பு வாய்ஜாலம்; ஒற்றுமை ஒருமைப்பாடு கொள்கையாவும் பித்தடாட்டம் என்று உணர்ந்துகொண்ட ஈ.வெ.ரா தமிழகம் முழுவதும் இதனை பிரச்சாரம் செய்தார். ஒரு முறை காங்கிரஸ்கட்சியின் பிரச்சாரத்திற்காக திண்டுக்கல் போய் இருந்த போது, ஒரு பார்ப்பனர் வீட்டில் சாப்பிட வேண்டி வந்தது, ஈ.வெ.ராவுக்கு திண்ணையிலும், உடன் வந்த சீனிவாச அய்யங்காருக்கு வீட்டிற்குள்லேயும் உணவு பரிமாறப்பட்டதும் கூட சாதிய துவேசம் தான் என்பதை உணர்ந்துகொண்டார். தமிழக மக்கள் விழித்துக்கொள்ளத் தொடங்கினார்கள். ஈ.வெ.ராமசாமியின் தொடர் பிரச்சாரத்தின் பயனாக சாதிய வேற்றுமையை வளர்த்து வந்த குருகுலத்திற்கு கிடைத்து வந்த பண உதவிகள் நின்று போனதால்.. குருகுலம் மூடப்பட்டது.

காங்கிரஸ் காரியக்கமிட்டியில் இருந்த சி.ராஜகோபாலாச்சாரியார், கிருஷ்ணமாச்சாரியார், கே.சந்தானம், என்.எஸ்.வரதாச்சாரியார், ஆலாசியம், டி.எஸ்.எஸ்.ராஜன் போன்ற பார்ப்பனர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பார்ப்பன துவேசப் பிரச்சாரம் செய்வதாகக்க்கூறி காங்கிரஸ் கமிட்டியைவிட்டு விலகிச்சென்றனர். இவர்களின் செயலை சில பார்ப்பனர்கள் பச்சையாக ஆதரித்து எழுதினார்கள் என்பது குறிப்பிடதக்கது.

பனகல் அரசர் முதலமைச்சராக இருந்த போது இந்து அறநிலை பாதுகாப்புச் சட்டம் கொண்டு வந்தார். இதனால் கோவில், மடாலயங்கள் சொத்துக்கள் மீது ஒருழுங்கு முறை புகுத்தப்பட்டது. பார்ப்பனிய சுரண்டல் பெருச்சாளிகளுக்கு இது இடையூராக பட்டது. அதனால்.. தங்களது எதிர்ப்பைக் காட்டி பொதுமக்களிடம் வெறுப்பை சம்பாதித்தார்கள். மடாதிபதிகளையும், அறங்காவலர்களையும் தூண்டி விட்டு, மதத்தில் அரசு தலையிடக்கூடாது என்று எதிர்ப்புக் காட்டினார்கள் பார்ப்பனர்கள். ஆனால்.. காங்கிரஸில் இருந்துகொண்ட நீதிக்கட்சியின் இச்சட்டத்தை வரவேற்றார் ஈ.வெ.ரா. அறநிலையங்களுக்கு ஆபத்தில்லை, சொத்துக்கள் தனிநபர்களிடம் கொள்ளை போகாமல் தடுக்கலாம், கள்வர்களுக்குத் தான் சுரண்ட முடியாது என்று அறிக்கை வெளியிட்டு வெளிப்படையாக ஆதரித்தார் ஈ.வெ.ரா.

ஈ.வெ.ராவின் செயல் பல பார்ப்பனர்களை எரிச்சலடையச்செய்தது. அடுத்ததாக அவர் கையில் எடுத்த ஆயுதம் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம். அதவாது வகுப்பு எண்ணிக்கைக்கு ஏற்றவாறு உத்தியோகங்களை வழங்கிடவேண்டும். அரசு பணிகளில் பார்ப்பனர் அல்லாதோருக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படல் வேண்டும். இவைதான் நீதிக்கட்சி தோன்றிய அடிப்படைக்கொள்கை. இதிலுள்ள நியாயத்தை உணர்ந்ததனாலேயே தொடக்கம் முதல் ஆதரித்து வந்தார் ஈ.வெ.ரா.

காஞ்சிபுரத்தில் 1925-ல் காங்கிரஸ் கட்சியின் மாநிலமாநாடு நடைபெற்றது. திரு.வி.க தான் தலைவர். இங்கேயும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற தீர்மனத்தை கொண்டுவரவேண்டும் என்று ஈ.வெ.ரா வேண்டிக்கொண்டார். ஆனால்.. தலைவர் நிராகரித்தார். எதிர்ப்புகள், வாதங்கள், சண்டைகள் என மாநாடு அமளியாகிப்போனது. கடைசிவரை காங்கிரஸ் ஒத்துக்கொள்ளவே இல்லை. துண்டை உதறி தேளில் போட்டபடி கிளம்பினார் ஈ.வெ.ரா.

‘கல்யாணசுந்தர முதலியார் அவர்களே! நான் வெளியேறுகிறேன். காங்கிரசால் பார்ப்பனரல்லாதவர்கள் நன்மை பெற முடியாது. பார்ப்பனர்களுக்கு அரணாக இருக்கும் காங்கிரஸை ஒழிப்பதே இனி எனது வேலை’ உரக்கச் சொல்லியபடி மாநாட்டு பந்தலை விட்டு வெளியேறினார் ஈ.வெ.ரா. அவர் பின்னாலேயே தன்மானமுள்ள கூட்டமும் வெளியேறியது.

------------------
(தொடரும்) *Download As PDF*

2 comments:

Uday G said...

http://www.jeyamohan.in/?p=21150

Uday G said...

Please read through Jeyamohan's article regarding this. http://www.jeyamohan.in/?p=21150

Your points are exaggeration.