Tuesday, 23 February 2010

20. பெரியார் தாடி வளர்த்த கதை

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாட்டிலும் கூட ஈ.வெ.ராமசாமியின் புகழ் பரவியிருந்தது. சுயமரியாதையை விரும்பிய தமிழர்கள் சிலர் மலேசியாவுக்கு ஈ.வெ.ராவை பலமுறை அழைத்தார்கள். வெளிநாட்டு வாழ் தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து பயணம் மேற்கொள்ளுவதென முடிவெடுத்தார் ஈ.வெ.ரா.

அதன்படி 1929ஆம் ஆண்டு, டிசம்பர் 15ஆம் தேதி ஈ.வெ.ரா, அவரது துணைவியார் நாகம்மையார், மற்றும் சாமி சிதம்பரனார், எஸ். ராமநாதன், பொன்னம்பலனார் போன்றோருடன் நாகப்பட்டிணம் துறைமுகத்திலிருந்து கப்பலேறினார். அந்தக் கப்பல் ஐந்து நாட்கள் கழித்து இருபதாந்தேதி பினாங்கில் போய் நின்றது. மலேசியா வாழ் தமிழர்கள் லட்சக் கணக்கில் திரண்டிருந்தார்கள். கூடியிருந்த மக்களின் உற்சாகம் கண்டு ஈ.வெ.ரா திகைத்துப் போனார். பல இந்தியத் தலைவர்கள் இதற்கு முன்பு பினாங்கிற்கு வந்திருந்த போதும் எவருக்கும் கிடைக்காத வரவேற்பு ஈ.வெ.ராவிற்கு வழங்கப் பட்டது. அவருக்கு குவிந்த மாலைகளும், பொன்னாடைகளும் கணக்கிலடங்கா. மலேயப் பத்திரிக்கைகள் கூடியிருந்த கூட்டத்தினரைப் பற்றியும், ஈ.வெ.ராவைப் பற்றியும் பிரமாதமாக செய்தி வெளியிட்டன.

டிசம்பர் 23ந்தேதி ஈப்போவில் தமிழர் சீர்திருத்த மாநாட்டை ஈ.வெ.ரா துவக்கி வைத்தார். தமிழ்நாட்டுத் தமிழர் மாத்திரமன்றி யாழ்ப்பாணத் தமிழர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள் என மொழி பேதமற்று மக்கள் கூடியிருந்தனர். 26ந்தேதி சிங்கப்பூர் சென்று மலேய-இந்திய சங்க மாநாட்டில் விரிவுரையாற்றினார்.

குழுமியிருந்த கூட்டத்தினரில் பலர் கல்வியறிவு குறைந்தவர்கள். எல்லோரும் கூடுகிறார்கள் என வேடிக்கை பார்க்க வந்தவர்கள். ஈ.வெ.ராவை பெரிய மகானாக நினைத்து அவர் காலில் விழுந்து ஆசி வாங்குவதற்கு பெரிய போட்டா போட்டியே நடந்தது. எந்த மனிதர்களுக்கு சுயமரியாதை வேண்டுமென கற்பிக்க விரும்பினாரோ, அந்த மனிதர்களே காலில் விழுவது கண்டு மனம் வருந்தினார். தொடர்ச்சியான சுயமரியாதை இயக்க பிரச்சாரம் மூலம் மட்டுமே இம்மக்களை அடிமைத் தனத்திலிருந்து விடுவிக்க முடியுமென்று முடிவு செய்தார்.

போகுமிடமெல்லாம் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் சலிக்காது பதில் சொல்லியபடியே இருந்தார். பெரியாரின் நேரடியான பதிலுரைகள் சிலரை பின்னங்கால் பிடறியில் பட ஓட வைத்தது. பலரை அவர்பால் ஈர்த்தது. பினாங்கு, ஈப்போ, கோலாலம்பூர், கோலாப்பிறை, மலாக்கா, தம்பின், பத்துபகாட், கம்மார், தெலுக்கான்சன், சுங்கை பட்டாணி, சுங்கை குரூட், தஞ்சைமாலிம், கோலாக்ங்சார், தைப்பிங்க், மூவார்,கோலக்குபு ஜோகூர்பாரு உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் சொற்பொழிவாற்றினார்.

மீண்டும் 1930, ஜனவரி 11ந்தேதி பினாங்கில் கப்பலேறி 16ந்தேதி நாகப்பட்டிணம் துறைமுகம் வந்திறங்கினார். இந்த இருபது நாள் பயணத்தில் ஓய்வின்றி தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ஈ.வெ.ராவிற்கு சவரம் செய்யக் கூட நேரம் வாய்க்கவில்லை. பெரிய மீசையோடு கப்பலேறிய ஈ.வெ.ரா தாடியோடு வந்திறங்கினார். தற்செயலாக நேரிட்ட இந்தக் கோலத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டார். சவரம் செய்ய செலவழிக்கும் நேரத்தில் தலையங்கம் எழுதவோ, தொண்டர்களிடம் பேசவோ நேரத்தை செலவிடலாமென முடிவுக்கு வந்தார். பொது வாழ்கையில் ஈடுபடுவோர் குளிக்கவோ, சவரம் செய்து கொள்ளவோ, சலவை உடுக்கவோ, தலை சீவவோ, அலங்காரம் மேற்கொள்ளவோ செலவழிக்கும் நேரத்தில் மக்களுக்கு ஏதேனும் பயன்படும் காரியங்களில் ஈடுபடலாம் என்றும் புதிய அர்த்தம் கற்பித்தார்.

ஈ.வெ.ரா நாட்டிலில்லாத சமயத்தில் சென்னைக்கு மாற்றப் பட்டிருந்த குடியரசு, ரிவோல்ட் பத்திரிக்கைகள் மீண்டும் ஈரோட்டிற்கே கொண்டு வரப்பட்டன. 1930ஆம் ஆண்டோடு ரிவோல்ட் ஆங்கில இதழுக்கு மூடுவிழா நடத்தி விட்டு குடியரசில் முன்னிலும் தீவிரமாய் ஈடுபடத் துவங்கினார். அதே வருடத்தில் இந்தியாவிலிருந்து வெள்ளையனை வெளியேற்றுவதற்கு காந்தியார் உப்பு சத்தியாகிரகம் என்னும் புதிய போராட்டத்தை துவங்கியிருந்தார். தேசம் முழுவதிலும் பெரிய அலையாய், உப்பு சத்தியாகிரகப் பிரச்சாரம் நடைபெற்று வந்தது. தென்னாட்டில் அவ்வியக்கத்தை நடத்த ராஜாஜியும், சர்தார் வேதரத்தினம் பிள்ளையும் காந்தியாரால் தேர்ந்தெடுக்கப் பட்டனர். சாதாரண அப்பாவி மக்கள் பலரும் இப்போராட்டத்தால் அடிமைத் தளையிலிருந்து விடுதலை கிடைத்துவிடுமென நம்பினர்.

இதனை மிகக் கடுமையாக எதிர்த்து ஈ.வெ.ரா முழக்கமிட்டார். மேடையில் மாத்திரமல்லாது, குடியரசிலும் தொடர்ந்து எழுதினார். இந்தக் கொள்கையிலும், இதனை நடத்துகின்ற தலைவர்களின் நாணயத்திலும் தனக்கு நம்பிக்கையில்லை என்று பகிரங்கமாக அறிவித்தார். இந்தியாவில் மத ஆதிக்கம், சாதீய இழிவு, குருட்டு நம்பிக்கை, தீண்டாமை, பெண்ணடிமை, பார்ப்பான மேலாதிக்கம் இவையாவும் அடியோடு ஒழிக்கப் பட்டால்தான் பூரண சுயராஜ்ஜியம் என்பது கிடைக்கும்; கிடைத்தாலும் நீடித்து நிற்கும் என்று தமது எண்ண ஓட்டத்தை எவருக்கும் அஞ்சாது பதிவு செய்தார்.

ஈ.வெ.ராவின் இதுபோன்ற வாதத்தை கடுமையாக எதிர்த்தார்கள் காங்கிரசார். ஒரு தேசிய எழுச்சியை வேண்டுமென்றே அவமானப் படுத்துகிறார் என்று திட்டித் தீர்த்தார்கள். மேடைகளில் பகிரங்கமாக கேவலமாகப் பேசினார்கள். மொட்டைக் கடிதங்களை குடியரசிற்கு அனுப்பி, தமது கோபத்தைத் தீர்த்துக் கொண்டார்கள். வெள்ளைக்காரனின் பாதந்தாங்கி எனப் பட்டம் சூட்டினார்கள். காங்கிரசாரின் இது மாதிரியான தொடர் மிரட்டல்களுக்கு கொஞ்சமும் அஞ்சவில்லை வெண்தாடி வேந்தர். உயிரிருக்கும் வரை எம்மக்களின் சுயமரியாதைக்கும், சுகமான வாழ்விற்காகவும் தொடர்ந்து உழைத்துக் கொண்டுதானிருப்பேன் என்றும், பேசிக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருப்பேன் என்றும் அறிவித்தார் ஈ.வெ.ரா.

1931ஆம் ஆண்டு மே பத்து, பதினொன்று ஆகிய தேதிகளில் இரண்டாவது மாகாண சுயமரியாதை மாநாட்டினை ஈரோட்டில் நடத்தினார். இதில் டாக்டர். முத்துலெட்சுமி ரெட்டி போன்றோரும் கலந்து கொண்டனர். மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர், தாழ்த்தப் பட்டோர் எல்லோரும் ஒன்றாக கலந்து கொண்டனர். மாநாட்டில் கலந்து கொண்ட ஆயிரக் கணக்கானோருக்கு உணவு சமைத்து பரிமாறியது, பல்லாயிரம் ஆண்டு காலமாக அடிமையாய், தீண்டத் தகாதவர்களாய், புறவாசல் வழியே வந்து செல்பவராய் இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள்தான். இந்த நிகழ்சியைக் கண்டு மாநாட்டில் கலந்து கொள்ள வடமாநிலத்திலிருந்து வந்திருந்த எம்.ஆர்.ஜெயக்கர் என்பவர் ஈ.வெ.ராவை பெரிதும் பாராட்டினார். சட்டமன்றம் செல்லவோ, அரசு பதவி பெறவோ விரும்பாமல் மக்களிடையே இது மாதிரியான விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டுத் தொண்டாற்றி வரும் ஈ.வெ.ராமசாமியைக் கண்டு தான் பெரிதும் வியப்பதாய் மாநாட்டு மேடையிலேயே கூறினார்.

அதே ஆண்டு, ஆகஸ்டு மாதம் மூன்றாவது மாகாண சுயமரியாதை மாநாடு விருதுநகரில் நடத்தப் பட்டது. ஈரோட்டில் போடப்பட்ட தீர்மானங்கள், அத்துணையையும் ஏற்றுக் கொள்வதோடு, கதர், கைத்தொழில் திட்டங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றவை அல்ல; எனவே இயந்திர சாதனங்களே தொழில் வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் உகந்தவை என்பதாக ஒரு தீர்மானம் இம்மாநாட்டில் இயற்றப் பட்டது குறிப்பிடத் தக்கது.

பொதுவுடைமை இயக்கத்தின் மூலவர்களான காரல் மார்க்ஸையும், லெனினையும் ஈ.வெ.ராமசாமி தனியாகப் படித்ததில்லை என்றபோதிலும், இருபத்தோராம் வயதில் தந்தையின் தொழிலை தான் கையிலெடுத்த போதிலிருந்தே தொழிலாளர்களுக்கு உகந்த, உற்ற தோழனாய் விளங்கி வந்திருக்கிறார். தொடர்ச்சியான தேடுதலின் பயனாய் பொதுவுடைமை சமதர்ம திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப் படுத்திய சோசலிச சோவியத் ரஷ்யாவை நேரில் கண்டுவர விரும்பினார். ஆனால், அவரின் உடல்நலம் அதற்கு ஒத்துழைக்கவில்லை. ஈ.வெ.ராவின் உடல்நலத்தினை கருத்தில் கொண்டு, அவரை எந்த நிகழ்சிக்கும் அழைக்க வேண்டாமென நாகம்மையார் அறிக்கை ஒன்றினை விடுத்தார். முழுமையான ஓய்வு ஈ.வெ.ராவை பழைய நிலைக்கு திரும்ப வைக்க உதவுமென திட்டமிட்டார்.

சூரியனை சும்மா இருக்கச் சொல்ல முடியுமா? பூமி சுழல்வதால் களைப்பாய் இருக்கிறதென ஓய்வெடுக்கச் சொல்ல முடியுமா? இதெல்லாம் முடியாத போது ஈ.வெ.ராமசாமி மட்டும் எப்படி முடங்கிக் கிடப்பார்? நாகம்மையாரின் எல்லா வேண்டுகோளையும் பொருட்படுத்தாமல் நண்பர் ராமநாதன், ஈரோட்டு ராமுவுடன் கப்பலில் வசதி குறைந்த நான்காம் வகுப்பில் புறப்பட்டார்.

(தொடரும்) *Download As PDF*

No comments: