Tuesday 2 March 2010

21. ரஷ்யா மற்றும் மேலை நாட்டுப் பயணம்


1931ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் தேதியன்று சென்னையிலிருந்து பாண்டிச்சேரி வழியாக செல்லும் பிரெஞ்சுக் கப்பலில் நண்பர் ராமநாதன், ஈரோட்டு ராமு ஆகியோருடன் வசதி குறைந்த நான்காம் வகுப்பில் ரஷ்யாவுக்கு புறப்பட்டார் ஈ.வெ.ரா. பாண்டிச்சேரியில் பாரதிதாசன் வந்து பார்த்து அன்னியச் செலவாணி நாணயங்களை மாற்றித் தந்தார். டிசம்பர் 24ந்தேதி கப்பல் தென்னாப்பிரிக்காவை அடைந்தது. அங்கேயே ஒரு வாரம் தங்கி சுற்றிப் பார்த்துவிட்டு சூயஸ் கால்வாய் வழியாக எகிப்து சென்று அங்கே பத்து நாட்கள் தங்கினார்கள். அதன் பின்னர் கிரீஸ், துருக்கி ஆகிய நாடுகளில் சில வாரங்கள். கடைசியாக சோவியத் ரஷ்யாவை 1932 பிப்ரவரி 13 அன்று அடைந்தனர். அங்கு ஈ.வெ.ரா குழுவினருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. இளைஞர் சங்கங்கள், தொழிலாளர் சங்கங்கள், நாத்திகர் சங்கங்கள் ஆகியவை அவரை வரவேற்றன. மற்ற நாடுகளில் வேட்டி சட்டையுடன் வலம் வந்த ஈ.வெ.ரா ரஷ்யாவின் குளிர் பொறுக்காமல் கோட் போன்ற ஆடைகளுக்கு மாறிக் கொண்டார்.

அரசு விருந்தினராக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஈ.வெ.ராவுக்கு மொழிபெயர்ப்பாளர்கள் துணைக்கு ஏற்பாடு செய்யப் பட்டனர். அவர்களின் துணை கொண்டு பல்வேறு நகரங்களில் உள்ள இடங்களையும் சுற்றிப் பார்த்து, விரிவாக விளக்கம் பெற்றார் ஈ.வெ.ரா. மிகப் பெரிய தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள், நூலகங்கள், நாடக அரங்குகள், வேளாண்மைப் பண்ணைகள், அரசு பொது உணவு விடுதிகள், லெனின் அருங்காட்சியகம், லெனின் உடல் பாதுகாக்கப்பட்ட இடம் ஆகிய எல்லா இடங்களையும் நன்கு சுற்றிப் பார்த்து குறிப்பெடுத்துக் கொண்டார். சில இடங்களில் ஈ.வெ.ராவுக்குப் பேசவும் வாய்ப்புக் கிடைத்தது. தன் கரகர குரலில் கூட்டத்தினரை மயக்கி கைதட்டலையும் பெற்றார்.


இப்படியே சுமார் மூன்று மாதங்கள் ஓடியது. மே 1ந்தேதி மே தின அணிவகுப்பினையும் பார்வையிட்டார். அணிவகுப்பு மரியாதையைப் பார்வையிட வந்த அப்போதைய ரஷ்யத் தலைவர் ஸ்டாலினுக்கு இந்தியாவிலிருந்து வந்திருக்கக் கூடிய நாத்திகத் தலைவரென ஈ.வெ.ரா அறிமுகம் செய்து வைக்கப் பட்டார். எட்ட நின்றே இருவரும் வணக்கங்களைப் பரிமாறிக் கொண்டனர்.

அம்மாதம் 29ந்தேதி ஸ்டாலினுடன் கலந்துரையாடுவதற்கான நேரம் ஒதுக்கப் பட்டிருந்தது. கம்யூனிசத்தின் வளர்ச்சி, அந்த நாட்டிலிருந்த கட்டுக் கோப்பு ஆகியவற்றைக் கண்டு வியந்த ஈ.வெ.ராமசாமி மற்றும் குழுவினரும் கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினராகச் சேர்ந்து கொள்ள விண்ணப்பம் செய்தனர். ராமநாதனுடைய நடவடிக்கைகளில் ஸ்டாலின் அரசாங்கம் திருப்தியடையவில்லை(ஸ்டாலினுக்கு எதிராக இயங்கி வந்த ட்ராட்ஸ்கி போன்றோரை ராமநாதன் சந்தித்துவிட்டு வந்தது அரசுக்குத் தெரிய வந்தது). அதனால் மே 19ந்தேதியே ரஷ்யாவை விட்டுப் புறப்பட்டுச் செல்ல வேண்டும் என ரஷ்ய அரசு உத்தரவிட்டது. ஸ்டாலினுடைய சந்திப்பு நிகழாமலேயே ஈ.வெ.ரா அங்கிருந்து கிளம்பினார்.

அங்கிருந்து இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், போர்ச்சுக்கல், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்குப் பயணமானார். இங்கிலாந்தில் பல தொழிலாளர் தலைவர்களைச் சந்தித்து உரையாடினார். அங்கும் பல கூட்டங்களில் உரையாற்றினார் ஈ.வெ.ரா. இந்திய சுரங்கங்களில் பத்து மணி நேரத்துக்கும் குறையாமல் வேலை பார்த்து வரும் தொழிலாளர்களுக்கு ஆணாக இருந்தால் எட்டணாவும், பெண்ணாக இருந்தால் ஐந்தணாவும் கூலியாக வழங்கப்பட்டு வருவதை எடுத்துரைத்தார். உலகம் முழுவதிலும் இருக்கக் கூடிய தொழிலாளர்களும், தொழிலாளர் கட்சிகளும் ஒன்றிணைந்து வேலை நேரத்தை மாற்றியமைக்கவும், ஒரே மாதிரியான உழைப்புக்கேற்ற ஊதியத்தை வழங்கக் கோரியும் போராட்டங்கள் நடத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். அப்படி நிகழும் பட்சத்தில், தாம் எங்கிருந்தாலும் தொழிலாளர்களுக்காய் குரல் கொடுத்துப் போராடத் தயாராய் இருப்பதாய் பிரகடனப் படுத்தினார்.

அக்டோபர் மாதம் வரை மேற்கண்ட நாடுகளில் சுற்றி வந்த ஈ.வெ.ரா குழு, அம்மாதத்தின் நடுவில் அங்கிருந்து கிளம்பியது. ராமநாதன் சில நாட்கள் கழித்து வருவதாகக் கூறித் தனியே ஜெனிவாவுக்குச் சென்று விட்டார். 1932 அக்டோபர் 17ந் தேதி இலங்கை வந்தடைந்த ஈ.வெ.ரா நவம்பர் 6ந்தேதி வரை சுமார் 18 இடங்களில் பொதுக் கூட்டங்களில் பேசினார். கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், ஹட்டன், பருத்தித்துறை போன்ற இடங்களில் நிறையக் கூட்டமும், உற்சாகமான வரவேற்பும் அவருக்கு அளிக்கப் பட்டது.

தொழிலாளர் முன்னேற்றம், பொருளாதார சமத்துவம் போன்றவற்றைப் பற்றித் தான் மேலை நாடுகளில் கண்டவற்றைப் பற்றியும் இணைத்து தனது கோட்பாடுகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். இலங்கைத் தமிழரிடையே சுயமரியாதை இயக்கம் பற்றிய விழிப்புணர்வு பரவியது. 1932 நவம்பர் 11ந்தேதி தூத்துக்குடி வழியே ஈரோடு வந்து சேர்ந்தார் ஈ.வெ.ரா. சுமார் 12 மாதங்கள் உலகம் முழுவதையும் சுற்றி வந்த ஈ.வெ.ரா தான் கற்றறிந்த விஷயங்களையும், கண்டுணர்ந்த செய்திகளையும் கட்டுரைகளாக எழுதத் தொடங்கினார். இலங்கைச் சொற்பொழிவுகள் என்று அவர் எழுதிய இந்த நூல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. தொடர்ந்து குடிஅரசு இதழ்களில் கேள்வி பதில் வடிவிலும் மக்களின் ஐயம் போக்கி தெளிவுரைகளை எழுதி வந்தார்.

குடிஅரசு இதழில் கட்டம் கட்டி ஓர் அறிவிப்பை ஈ.வெ.ரா வெளியிடுகிறார். பெயருக்கு முன்னால் சேர்க்கப் படும் மரியாதை வார்த்தைகளான் ஸ்ரீலஸ்ரீ, மகாலஸ்ரீ, திரு, திருவாளர், தலைவர், திருமதி போன்ற வார்த்தைகளைச் சேர்த்துப் பேசவோ, எழுதவோ வேண்டாம் எனவும், எல்லோரையும் தோழர் என்ற வார்த்தையை மட்டும் வைத்து அழைத்தாலே போதும் எனவும் அந்தச் செய்திக் குறிப்பில் கேட்டுக் கொண்டார். இந்த அறிவிப்பு வெளியான ஒரு வார காலத்திற்குள் குடிஅரசில் அனைத்துப் பெயர்களுக்கும் முன்னால் தோழர் சேர்க்கப்பட்டது. தோழர் காந்தி, தோழர் ராஜகோபாலாச்சாரி, தோழர் ஈ.வெ.ரா, தோழர் நீலாம்பிகையார் என்றே எழுதப் பட்டது. இந்த சமயத்தில்தான் மிகச்சிறந்த ஒரு இளைஞர் ஒருவர் ஈ.வெ.ராவுக்குக் கிடைத்தார் - அவர்தான் ப. ஜீவானந்தம்.

மிகத் தீவிரமான காங்கிரஸ் ஊழியரான அவர் ஆங்கில அரசை எதிர்த்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தவர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கடுங்காவல் தண்டனை பெற்றார். ஜீவானந்தம் திருச்சி சிறையில் அடைக்கப் பட்டிருந்த சமயத்தில் வேறு மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட புரட்சியாளர்கள் மூலம் கம்யூனிசத் தத்துவம் குறித்து அறிந்து கொண்டார்.


சிறைச்சாலைக்குள்ளேயே கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை போன்ற மார்க்ஸிய நூல்களைப் படித்துமிருந்தார். ஜீவானந்தம் விடுதலையாகி வெளியே வந்தவுடன் ரஷ்யா குறித்தும், சோஷலிசம் குறித்தும் ஈ.வெ.ரா நிகழ்த்தி வந்த உரைகளாலும், எழுத்துக்களாலும் ஈர்க்கப்பட்டார். இயல்பிலேயே சுயமரியாதைச் சிந்தனை மேலோங்கியிருந்த ஜீவானந்தத்திற்கு பெரியாரின் மீது மிகுந்த மரியாதை ஏற்பட்டது. காங்கிரஸ்காரராக இருந்த போதும், சுயமரியாதை இயக்க வீரராகவும் விளங்க ஆரம்பித்தார். குடிஅரசு பத்திரிக்கையில் தொடர்ந்து கட்டுரைகளையும், கவிதைகளையும் எழுதலனார்.

மே தினத்தை இங்கே சமதர்மக் கொள்கை நாளாக கொண்டாட வேண்டுமென்றும், பேரணிகள் நடத்த வேண்டும் என்றும், ஈ.வெ.ரா அறிக்கை விடுத்தார். கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையை குடிஅரசில் தொடராக வெளியிட்டார் ஈ.வெ.ரா. அதோடு நில்லாமல் மதத்தைக் குறித்து லெனின் எழுதிய கட்டுரைகள், கம்யூனிசக் கோட்பாடுகள், ஒவ்வொரு தொழிலாளியும் பொதுவுடமைக் கட்சியில் ஏன் சேர வேண்டும் என்பது போன்ற தீவிர கம்யூனிசக் கருத்துக்களை குடியரசில் பரப்பலானார். ஈ.வெ.ராவின் சோஷலிசப் பிரச்சாரத்திற்கு மார்க்ஸிய சிந்தனையாளர் மா. சிங்காரவேலர் எழுதி வந்த கட்டுரைகள் பெரிதும் உதவின. தோழர் சிங்காரவேலரிடம் பேசி பல பொதுவுடமைக் கட்டுரைகளை குடிஅரசிலும் எழுதச் செய்தார்.

இப்படியாக பரபரப்பாக ஈ.வெ.ரா இயங்கிக் கொண்டிருந்த சமயத்தில், 1933 ஏப்ரல் மாதம் நாகம்மையார் நோய்வாய்ப்பட்டு வீழ்ந்தார். அப்போதும் நாகம்மையாருக்காக வருந்து முடங்கிப்போய், உடனிருந்து கவனித்துக்கொண்டிருக்கவில்லை ஈ.வெ.ரா.


பல ஊர்களுக்கு சுற்றுப்பயணம் போவதையும், பொதுக்கூட்டங்கள் பேசுவதையும் நிறுத்தினாரில்லை. சுயமரியாதையை ஒவ்வொரு மனிதனும் உணரவேண்டும் என்ற வேட்கையால் தன் பொதுக்கூட்டங்களுக்கு தடைபோடாமல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணங்களிலேயே இருந்தார். சமயம் கிடைக்கும் போது ஈரோட்டுக்கு வந்து நாகம்மையாரைப் பார்த்து, சில மணி நேரங்கள் உடனிருந்து விட்டு, அடுத்த கூட்டம் நடக்கும் ஊர் நோக்கி பயணமானார். திருப்பத்தூரில் பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும் போது அந்த தகவல் வந்து சேர்ந்தது.

அது என்ன தகவல்?


(தொடரும்)

*Download As PDF*

No comments: