Tuesday 16 February 2010

19. சுயமரியாதை இயக்கத்தின் வளர்ச்சி

காங்கிரஸ் கட்சியின் மக்கள் விரோதப்போக்கை பறைசாற்றும் வேலையை ஈ.வெ.ராமசாமி திறம்படச்செய்து வந்தார். தனது குடியரசு பத்திரிக்கையில் தொடர்ந்து எழுதினார். வர்ணங்களை ஆதரிப்போரையும், அதை கடைபிடிக்கும் காங்கிரஸ் கட்சியையும் விமர்சனம் செய்து கட்டுரைகளும், தலையங்கமும் தொடர்ந்து எழுதப்பட்டு வந்தன.

1928ம் ஆண்டு தொடக்கத்தில் தமிழகத்தில் தென்னிந்திய ரயில்வே ஊழியர்களின் போராட்டம் வெடித்தது. நாகபட்டினம், போத்தனூர் பகுதிகளில் இருந்த ரயில்வே பணிமனைகளை இழுத்து மூடி, திருச்சி, பொன்மலையில் இருந்த ரயில்வே பணிமனையை விரிவு படுத்த திட்டமிட்டது ரயில்வே நிர்வாகம். இதனை எதிர்த்து ஆயிரக்கணக்கான ரயில்வே ஊழியர்கள் போராட்டங்களில் குதித்தானர்.

இதன் தொடக்க காலத்தில் இப்போராட்டம் தேவையற்றது என்பது போன்று எழுதினார் ஈ.வெ.ரா. சென்னையில் ஆட்சி நடத்தி வரும் நீதிகட்சிக்கு பார்ப்பனர்கள் தரும் தொல்லையாக இருக்குமோ என்று முதலில் கருதினார் ராமசாமி. அதனால் போராட்டத்தில் ஈடுபட வேண்டாமென்று அறிக்கை விடுத்தார். ஆனால் நாகபட்டினம் பணிமனையில் ஈ.வெ.ரா வின் சுயமரியாதை இயக்கத்தைச்சேர்ந்த பலர் இருந்தனர். அவர்களில் சிலர் ஈ.வெ.ராவை சந்தித்து, தங்களது போராட்டத்தின் காரணங்களை விளக்கிச்சொன்னவுடன் அதில் இருக்கும் உண்மையான சூழ்ச்சியை உணர்ந்து கொண்டார் ஈ.வெ.ராமசாமி.

உண்மைகளை உணர்ந்துகொண்ட பின் ரயில்வே தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக எழுதத்தொடங்கினார். பிரச்சாரங்களும் செய்யத்தொடங்கினார். அதே ஆண்டு ஜூலை 27ல் ரயில்வே தொழிலாளர்களின் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடு பட்டார்கள். அவர்களை ஆதரித்து, அரசாங்கம் விதித்த தடையை மீறி, நாகபட்டினம் சென்று தொழிலாளர்களுக்கு ஆதரவாக பேசினார். பொதுமக்கள் இப்போராட்டத்திற்கு நிதி உதவி அளித்து ஆதரவு தரவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார் ஈ.வெ.ரா.

ஈரோட்டிலும் ரயில்வே தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு ஆதரவாக கூட்டங்கள் நடத்தினார். நிதி வசூலித்து போராட்டக்காரர்களுக்கு கொடுத்துதவினார். இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகள் உண்மையில் சிக்கன நடவடிக்கையோ, போதுமான லாபம் இல்லாததால் ஏற்படுவதோ, பொது மக்களுக்கு கட்டணக் குறைப்பு போன்ற சலுகைகளைத் தருவதற்கானதோ நிச்சயம் இல்லை என்பதை தன் பிரச்சாரத்தில் விளக்கிச் சொன்னார் ராமசாமி. சிக்கனம் என்ற பெயரில் இந்தியர்களை ஆட்குறைப்புச் செய்து, வெள்ளையர்களுக்கு வேலை கொடுப்பது என்பதுதான் தென்னிந்திய ரயில்வேயின் உண்மையான நோக்கம் என்பதை பொதுமக்களுக்குப் புரிய வைத்தார்.

ஈ.வெ.ராவின் பிரச்சாரத்தை தாங்கிக் கொள்ள முடியாத அரசு அவரையும், போராட்டத்தில் முன்னணியிலிருந்த அவரது நண்பர்கள் சிலரையும் கைது செய்து வழக்குத் தொடுத்தது. ஒரு மாத காலம் சிறையிலிருந்த பின் ஜாமீனில் வெளிவந்தார் ராம்சாமி. பின்னர் விசாரணையின் போது எதிர் வழக்காடுவதில்லை என முடிவு செய்து அறிவித்தார். திடீரென அரசாங்கம் அவரது மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்ததால் அதிலிருந்து விடுதலையானார் ஈ.வெ.ராமசாமி.

அதே நேரத்தில் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மற்ற முக்கியத்தலைவர்களான மா.சிங்காரவேலர், முகுந்தலால் போன்றோருக்கு பத்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப் பட்டது. மேல் முறையீட்டின் பேரில் பின்னர் அது இரண்டு ஆண்டுகளாக் குறைக்கப் பட்டது. பெருமாள் என்பவருக்கு மட்டும் ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டது.

இதன் பின் தன்னுடைய குடியரசு பத்திரிக்கையை சுயமரியாதைப் பிரச்சாரத்திற்கு முழுமூச்சுடன் பயன் படுத்த ஆரம்பித்தார். விழிப்புணர்வூட்டும் பெட்டிச் செய்திகளை வெளியிடுவது, பார்ப்பன முறைகளை விடுத்து நடக்கும் திதி, புதுமனை புகுவிழா போன்றவற்றை பற்றிய செய்திகளை முக்கியத்துவம் தந்து வெளியிடுவது என பத்திரிக்கையின் எல்லா சாத்தியங்களையும் தனது பிரச்சாரத்திற்கு பயன்படுத்தினார்.

இத்தகைய செய்திகளின் விளைவாக மக்களுக்கு பார்ப்பன புரோகிதர்களின் தலையீடில்லாமலே விசேஷங்களை நடத்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை வளர்ந்தது. சுயமரியாதைக் கூட்டங்களில் மாலை மாற்றித் திருமணம் செய்து கொள்வது, தலைவர்களின் தலைமையில் திருமணம் செய்து கொள்வது என சுயமரியாதைத் திருமணம் என்கிற முறை மெல்ல மெல்ல உருவானது.

விழிப்புணர்வு பிரச்சாரத்தில் சொந்தப் பத்திரிக்கையின் பயன் பாட்டை உணர்ந்த ஈ.வெ.ரா, அடுத்த கட்டமாக கலகம் அல்லது கிளர்ச்சி என்று பொருள் படும் ரிவோல்ட்(Revolt) என்ற பெயரில் ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையொன்றையும் துவக்கினார்.

”ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரி போன்றவர்களுக்கும், மற்றும் சில சுயநலக்காரர்களும், கூலிகளும் நமது பிரச்சாரத்திற்கு விரோதமாக ஆங்கிலப் பத்திரிக்கைகள் மூலமாகவும், வியாசங்கள் மூலமாகவும் பிரச்சாரம் செய்கிறபடியாலும், நமது பிரச்சாரமும் பத்திரிக்கையும் தமிழிலேயே இருப்பதாலும், அது தமிழ்நாட்டை விட்டு வெளியே போக மார்க்கமில்லாதிருப்பதாலும் ஆங்கிலத்தில் ஒரு பத்திரிக்கையை குடி அரசுக் கொள்கையை ஆதாரமாகக் கொண்டு ஆரம்பிக்க வேண்டுமென்பதற்காக ஒரு யோசனை தோன்றியிருக்கிறது. அப்பத்திரிக்கைக்கு ரிவோல்ட் என்பதாக பேர் கொடுக்கத் தீர்மானித்திருக்கிறோம். ” என்று ப்பத்திரிக்கை தோன்றியதின் காரணங்களை ஈ.வெ.ரா. விளக்கமாக எழுதினார்.

சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாடு 1929ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17, 18 தேதிகளில் செங்கல்பட்டில் நடத்தப் பட்டது. டபிள்யூ.பி.ஏ. சௌந்தரபாண்டியன் தலைமையில் பி.டி ராஜன் கொடியேற்றித் துவக்கி வைத்த அந்த மாநாட்டில் பின்வரும் கருத்துக்களைக் கொண்ட 34 தீர்மானங்கள் இயற்றப்பட்டது.

  1. இந்தியாவுக்கு வரும் சைமன் குழுவை புறக்கணிப்பது நியாயம் இல்லை.அக்குழுவின் முன் சாட்சி சொல்ல மறுப்பது பொருத்தமற்றது.
  2. நால்வருண முறையை ஏற்றுக் கொள்ளக் கூடாது. மக்களிடையே பிறப்பால் ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் வேதம், சாஸ்திரம், புராணங்கள் போன்றவற்றை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
  3. தீண்டாமை ஒழிக்கப் பட்டு சாலைகள், குளங்கள், கிணறுகள், பள்ளிகள், சத்திரங்கள், தண்ணீர்ப் பந்தல்கள் முதலியவற்றில் சகலருக்கும் சம உரிமைகள் தரப்பட வேண்டும், இதை வலியுறுத்தி அரசு சட்டம் இயற்ற வேண்டும்.
  4. மக்கள் ஜாதிப் பட்டத்தையும், வகுப்புப் பட்டத்தையும், அடையாளக் குறிகளையும் பயன்படுத்தாது ஒழிக்க வேண்டும்.
  5. பெண்களுக்கு 16 வயதுக்கு மேல்தான் திருமணம் செய்யப்பட வேண்டும்.
  6. விவாகரத்து உரிமை, விதவைகள் மறுமணம், சொற்ப செலவில் திருமணம், ஒரு நாள் திருமணம் போன்றவை அமுலுக்கு வர வேண்டும்.
  7. கல்வி நிலையங்களில் தாய்மொழியிலேயே கல்வி தரப்பட வேண்டும். பிறமொழிப் பாடங்களுக்குப் பொதுப் பணத்தை உபயோகிக்கக் கூடாது.
  8. பள்ளிக்குச் செல்லத்தக்க சிறுமிகளுக்கு ஆரம்பக் கட்டாயக் கல்வி தரப் படவேண்டும்.
  9. தாழ்த்தப்பட்ட குடும்பத்துப் பிள்ளைகளுக்கு பள்ளியில் புத்தகம், உணவு, உடை போன்றவை இலவசமாக அளிக்கப் பட வேண்டும்.
  10. பெண்களுக்குச் சம சொத்துரிமை, வாரிசு பாத்யதை, ஆண்களைப் போலவே தொழில் நடத்த சம உரிமை, ஆசிரியர் பதவியில் அதிக இடம் முதலியவை வழங்கப்பட வேண்டும். ஆரம்பப் பள்ளி ஆசிரியர் பதவி முழுதும் பெண்களுக்கே வழங்கப்பட வேண்டும்.
  11. பள்ளிகளில் மூடநம்பிக்கையுள்ள புத்தகங்களைப் பாடமாக வைக்கக் கூடாது.
  12. ஜாதி வேறுபாடு காண்பிக்கும் ஹோட்டல்களுக்கு உரிமை தரக்கூடாது.

என்பவை தொடரும் பட்டியலில் மிகவும் முக்கியமானவை.தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் நடுநிலை வகிக்காத அரசை கண்டித்தும், அதனால் துன்பப்பட்ட தொழிலாளர்களுக்கு அனுதாபம் தெரிவித்தும் மேலும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

இத்தீர்மானங்களில் இருந்து சுயமரியாதை இயக்கம் அரசியலில் ஆங்கில அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதாக இருந்தாலும் சமூக சீர்திருத்தங்களைக் கோருவதில் சமரசமற்ற முறையில் இயங்குவதாக இருந்தது தெளிவாகத் தெரிகிறது.

1930ஆம் ஆண்டு இரண்டாவது சுயமரியாதை இயக்க மாநாடு ஈரோட்டிலும், 1931ஆம் ஆண்டு மூன்றாவது மாநாடு விருதுநகரிலும் நடைபெற்றது. இந்த இரண்டு மாநாட்டிலும் சுயமரியாதைப் பெண்கள் மாநாடு, சுயமரியாதை வாலிபர்கள் மாநாடு ஆகியவை தனியாக நடைபெற்றன. இவற்றில் முக்கியமான பல சீர்திருத்த கருத்துக்கள் தீர்மானங்களில் முன் மொழியப் பட்டன.

குழந்தைத் திருமணம், தேவதாசி முறை முதலியவற்றை இப்பெண்கள் மாநாடுகள் வன்மையாகக் கண்டித்த அதே நேரம் பெண்களின் திருமண வயதை முறைப்படுத்திய சாரதா சட்டத்தை மகிழ்வுடன் வரவேற்றன.

சொத்தில் சம உரிமை, கார்டியனாக இருப்பது, தத்து எடுத்துக் கொள்வது போன்றவற்றில் சம உரிமை, சட்டமன்றம் மற்றும் நகர்மன்றங்களுக்குப் பெண்கள் தேர்ந்தெடுக்கப் பட ஏற்பாடு செய்வது, பெண் கல்வியை 11 வயதோடு நிறுத்தாமல் 30 வயது வரை படிக்க வைத்தல், பெண்களை காவல் துறை மற்றும் ராணுவத்தில் சேர்த்தல், அனாதை விடுதிகள் திறப்பு, ரயில் நிலையங்களில் பெண்கள் தங்குவதற்கென்று தனியறை, பெண் ஊழியர்கள் நியமனம், கள்ளுக்கடை ஒழிப்பு போன்றவை குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றம் குறித்த அக்கறையுடன், அவர்களுக்கென தனி மாநாடு ஏற்படுத்தித் தந்த முதல் அமைப்பு சுயமரியாதை இயக்கமே ஆகும்.

(தொடரும்) *Download As PDF*

No comments: