Wednesday 29 July 2009

11. ஈ.வெ.ராமசாமி நிர்வகித்த கோவில் பணிகள்

வெங்கட்டரின் வரத்து குறைந்தது ஒரு வகையில் ஈ.வெ.ராவுக்கு நிம்மதியாக இருந்தது. சாதி, மத வேறுபாடுகளை கண்டுகொள்ளாமல் கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், இஸ்லாமியர்கள் என எல்லாப் பிரிவினருடனும் கலந்து பழகுவதற்கு ஏதுவாக இருந்தது. எப்பொழுதும் கடையில் பத்துக்கும் குறையாத நண்பர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருந்தது. அவர்களின் புகை, மது போன்ற மேலாதிக்க பழக்கங்களுக்கு ஈ.வெ.ராவே புரவலராக விளங்கி வந்தார்.

ஈரோட்டில் எவ்வகுப்பினர் வீட்டிலும் நன்மை தீமை நடைபெற்றாலும் முதலில் இவரை அங்கு காணலாம். எல்லோரும் இவருக்கு தகவல் தந்து விடுவார்கள். சில இடங்களில் அழைப்பு இல்லாமலேயே நண்பர்களுடன் அந்த மாதிரி இடங்களுக்குப் போவதும் உண்டு. இவரின் தாராள உதவும் குணம் ஊர் முழுக்க இவரது புகழைப் பரப்பியது. குடும்ப விவகாரங்கள், வியாபார தகராறுகள், சண்டை சச்சரவுகள் எல்லாவற்றையும் தீர்க்கும் பொறுப்பும் இவரிடம் வந்து சேர்ந்தது. சில சமயங்களில் கோர்ட் விவகாரங்களும் இவரது தீர்ப்புக்கு வருவதுண்டு. கௌவரவ நீதிபதியாக பன்னிரெண்டு ஆண்டுகள் பதவியில் இருந்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் பிளேக் நோய் பரவி பெரும் பீதியேற்பட்டிருந்த நேரம். மக்கள் நகரங்களை காலி செய்து தங்களின் வசதிக்கேற்ப வேறு இடம் மாறிக் கொண்டிருந்தார்கள். ஏழை மக்கள் போக வழியின்றி உள்ளூருக்குள்ளேயே பயத்துடன் சுற்றி வந்து கொண்டிருந்தார்கள். பிளேக் நோயினால் இறந்தவர் வீட்டில் எல்லோரும் சடலம் உட்பட மற்ற எதையும் தொடாமல் வீட்டையே கொளுத்தி தெருவில் நின்று கொண்டிருந்த அவலமும் நிகழ்ந்தது. இந்த சமயத்தில் தான் துளியும் அஞ்சாமல் இறந்தவரின் சடலத்தை தோளில் தூக்கி சுடுகாட்டிற்கு கொண்டு போய் எரியூட்டி, ஈமச்சடங்குகளை இவரே முன்னின்று செய்தார்.

இப்படி பிளேக் நோயினால் பாதிக்கப்பட்ட பலருக்கு இவர் செய்த உதவிகளினால் ஈ.வெ.ராவின் புகழ் மேலும் பரவியது. வாரம், பத்து நாட்களுக்கு மேலாக பிளேக் நோய் பாதிக்கப்பட்டவர்களோடு ஈ.வெ.ரா நேரம் செலவழிப்பதை கண்டு அஞ்சிய தேவையற்ற நண்பர்கள் எல்லோரும் விலகி ஓடினார்கள்.

ஈ.வெ.ராமசாமி, எத்தனையோ சமூகம் மறுத்த, தீய பழக்கமுடைய நண்பர்களோடு நெருக்கமாகத் தொடர்பிலிருந்த போதும், மது அருந்துதல் என்ற பழக்கத்திற்கு மட்டும் அடிமையாகவே இல்லை. எப்போதாவது வெற்றிலை பாக்கு போடுவதுண்டு. புகைபிடிக்கும் பழக்கமும் இருந்திருக்கிறது. இவற்றையும் கூட தனது நாற்பதாவது வயதில், அறவே நிறுத்தினார். நல்ல பண்பாளர்கள் அறிவாளிகளின் உறவுகள் வந்து சேரத் தொடங்கியது இச்சமயத்தில்தான். பா.வே.மாணிக்கனார், கரூர் பெரும்புலவர் மருதையா, கைவல்ய சாமியார் ஆகியோரின் நட்புகள் வளரத் தொடங்கியது.

புலவர் மருதையா புராண புரட்டுக்களை பிரித்து மேய்வதில் வல்லவர். எதிர்காலத்தில் ஈ.வெ.ராவின் திடமான கொள்கைக்கு அடித்தளமாக அமைந்தது இவரது நட்பு. கைவல்யம் என்னும் வேதாந்த நூலை நன்கு கற்றுத் தேறியவர் என்பதால் கைவல்ய சாமியார் என்று பெயர் பெற்றவர், பார்ப்பனீயத்துக்கு பரம விரோதியாய் இருந்தார். ஈ.வெ.ரா காங்கிரஸ்காரராய் இருந்த போது அவரை கடுமையாகக் கண்டித்தவர்களில், இவரும் முக்கியமானவர். பார்ப்பனர் அல்லாதவர்களை ஒன்று திரட்ட வேண்டும் என்ற கைவல்ய சாமியாரின் எண்ணமும் பெரியாருக்கு பிற்காலத்தில் உறுதுணையாக இருந்தது.

தேடிச் சென்று காவாலித்தனம் செய்து கொண்டிருந்த ஈ.வெ.ரா தன் அரிசி மண்டியை விட்டு அதிகம் வெளியே போவதை குறைத்துக் கொண்டார். அப்படியே எங்காவது போவதாக இருந்தாலும் கடை அடைத்தபின் போய்விட்டு, காலையில் கடை திறக்க வந்துவிடுவார். பொது காரியங்களில் இவரின் ஈடுபாடு, தொழிலில் இவரது பக்தியை ஆகியவற்றைக் கண்டு மெய்சிலிர்த்துப் போயிருந்த வெங்கட்டர் ஊர்ப் பொதுக் கோவில்கள், சர்க்கார் தேவஸ்தான தொடர்பான காரியங்கள், உற்சவங்கள் முதலிவற்றில் தாம் விலகிக் கொண்டு இவரை முன்னிறுத்தினார். ஊர் பெருமை சேர்க்கும் விஷயங்களான இவற்றில் பெரும் புகழ் பெற்ற வெங்கட்டர்

தாமிருக்கும் போதே ஈ.வெ.ராவை முன்னிறுத்தியதால் இவரின் பெயரும் கோவில் காரியங்களிலும் வல்லவர் என்று பரவத் தொடங்கியது. தமக்கு கொடுக்கப்பட்ட பதவிகளை பொறுப்புக்களாய் உணர்ந்து சரிவர கடமையாற்றினார். அநேகக் காரியங்களில் இவரின் ஈடுபாடு இப்படியே இருந்தது. அதனாலேயே நம்பிக்கையில்லா காரியங்களில் கூட அதிக கவனமாகவும், நாணயமாகவும் நடந்து கொண்டார்.

ஈரோடு மாவட்ட தேவஸ்தான கமிட்டியின் தலைவராகவும் பொறுப்பேற்றார் ஈ.வெ.ரா. உருவ வழிபாட்டு எதிர்ப்பாளர், கோவில்களில் நம்பிக்கையில்லாதவர், திருவிழாக்கள் வீண் செலவு என்பவர், இவை எல்லாம் மக்களிடையே மூடநம்பிக்கையை வளர்க்கவே செய்கின்றன என்பதை உறுதியுடன் நம்பியவர் – தேவஸ்தான கமிட்டியின் தலைவரானதும், தமது பொறுப்புணர்ந்து கமிட்டிக்குட்பட்ட பல கோவில்களை புணரமைத்தார். மகனின் செயல்பாடுகளினால் உள்ளம் குளிந்தார் வெங்கட்டர். காலியாகிவிடுவானோ என்று பயந்த மகன் இவ்வளைவு பொறுப்பானவனாக மாறியதைப் பார்த்தால் எந்த தந்தைக்குத்தான் மகிழ்ச்சி ஏற்படாது.

கோவில் செல்வங்கள் கொள்ளை போகாமல் பாதுகாக்கப் பட்டன. கோவில் நிலங்களின் குத்தகைத் தொகையை ஏற்றினார். கோவிலுக்குப் பழுது வராமல் புதுப்பித்தல், கும்பாபிஷேகம் செய்வது போன்ற திருப்பணிகளை தொய்வின்றி செய்து வந்தார். இவர் பொறுப்பேற்கும் போது கடனிலிருந்த கமிட்டியை தலை நிமிரச் செய்தார். பல ஆண்டுகள் தலைவராக இருந்துவிட்டு அப்பதவிகளில் இருந்து நீங்கும் போது சுமார் நாற்பத்தியையாயிரம் ரூபாய் தேவஸ்தான கமிட்டிக்கு என சேர்த்து வைத்திருந்தார். அந்த காலகட்டத்தில் நாற்பத்தியையாரம் ரூபாயெனில் இன்றைய மதிப்புக்கு கற்பனை செய்து கொள்ளவும்.

இந்த சமயத்தில்தான் ஈரோடு நகர பாதுகாப்புக் கழகத் தலைவராகவும் ஆனார். 1919ல் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கும் வரையிலும் சேர்மன் பதவியில் இருந்தார். அதற்கு முன் கௌரவ நீதிபதி, தாலுக்கா போர்டு உபதலைவர், வியாபாரிகள் சங்கத் தலைவர், ஜில்லா போர்டு மெம்பர் என பல பதவிகளை வகித்தாலும் ஈ.வெ.ரா ஈரோடு நகராட்சித்தலைவராக இருந்து ஆற்றியுள்ள சேவையே நேரடி அரசியலில் இறங்குவதற்கு முன்பான அவரது வாழ்வில் அதிகபட்ச புகழை பெற்றுத்தந்தது.

(தொடரும்)

*Download As PDF*

1 comment:

பொன்ஸ்~~Poorna said...

புணரமைத்தார் - புரமைத்தான்