Thursday, 30 July 2009

12. பதவிகளை தூக்கி எரிந்த ஈ.வெ.ரா

வெங்கட்டர் உடல் நலக்குறைவினால் பாதிக்கப் பட்டிருக்கும் போது அவர் பெயரில் தர்மங்கள் செய்வதற்கு ஒரு அறக்கட்டளை ஏற்படுத்தும் முயற்சியில் ஈ.வெ.ரா ஈடுபட்டார். ஆனால் இதற்கு ஈ.வெ.ராவின் அண்ணன் கிருஷ்ணசாமி கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தார். எல்லா எதிர்ப்புகளையும் மீறி தான் நினைத்ததைச் செய்து முடித்தார் ராமசாமி. ஆண்டொன்றுக்கு குடும்ப சொத்திலிருந்து ரூபாய் இருபதாயிரம் வரை வருமானம் வரும். அதில் இரண்டு மகன்களின் குடும்பச் செலவுக்கும் பணம் ஒதுக்கி மீதி வருமானம் தர்மத்திற்கு செலவிடப் படவேண்டுமென அறக்கட்டளை உருவாக்கி விட்டார்.

வெங்கட்ட நாயக்கர், 1911-ஆம் ஆண்டு காலமானார். வைஷ்ணவ சம்பிரதாயப்படி அவரது உடல் எரியூட்டப் பட்டிருக்க வேண்டும். ஆனால் ராமசாமி அவ்வாறு செய்யவில்லை. ஈரோடு புகைவண்டி நிலையம் அருகில், அந்தக் குடும்பத்திற்கு சொந்தமான இடம் இருந்தது. ரயில்வே நிர்வாகம் அந்த இடத்தை கையகப் படுத்தும் முயற்சியில் தீவிரமாக இருந்தது. எனவே அதைத் தடுப்பதற்காக ஒரு திட்டம் போட்டார். மரணப் படுக்கையில் இருந்த வெங்கட்டரை சந்நியாசம் வாங்கச் செய்தார். சந்நியாசிகளை எரியூட்டக் கூடாது என்ற மரபு இருப்பதால் தன் சொந்த நிலத்திலேயே மரணத்திற்குப் பின் வெங்கட்டரை புதைத்தார். மனிதர் புதைக்கப் பட்ட இடத்தை ரயில்வே நிர்வாகம் கையகப் படுத்த முடியாது என்பதால் இவ்வாறு செய்தார்.

ஈ.வெ.ரா வகித்து வந்த இருபத்தொன்பது பதவிகளில் முக்கியமானது ஈரோடு நகர்மன்றத் தலைவர் பதவி. அந்த சமயத்தில்தான் காவேரி ஆற்றிலிருந்து ஈரோட்டு நகருக்கு குடிநீர் கிடைக்க குழாய்களை அமைத்தார். காவிரியில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் வடிகட்டி, பாதுகாக்கப்பட்ட தண்ணீராக விநியோகிக்க ஏற்பாடு செய்திருந்தார். அநேகமாக இது தென்னிந்தியாவின் முதல் முயற்சி எனலாம். அதற்கும் கூட எதிர்ப்பு பலமாக இருந்தது. தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியின் வழியாக வரும் குடி நீர் குழாய் சேரிகளுக்கு முதலிலும், பின்னர் ஊருக்குள்ளும் தண்ணீர் வரும் படி ஏற்பாடு செய்யப்பட்டதே எதிர்ப்புக்கு காரணம்.

குழாய் வழியாக தீட்டு வந்துவிடும் என்று யாரோ கட்டிவிட்ட பொய்யை நம்பிய மக்கள் இதனை எதிர்த்தார்கள். ஈ.வெ.ரா-வின் தாயார் சின்னத்தாயம்மையார் கூட இதற்கு எதிர்ப்பு காட்டினார். எல்லோரின் எதிர்ப்பையும் புறங்கையால் தள்ளி விட்டு தம் திட்டத்தை நிறைவேற்றினார் ஈ.வெ.ரா. எல்லாவற்றிற்கும் பரிகாரம் சொல்லும் நம்மவர்கள் இதற்கும் ஒரு பரிகாரத்தை கண்டுபிடித்தார்கள். முதலில் ஒரு பிராமனர் வந்து பூஜை செய்து, குழாயில் கோமியம்(மாட்டின் சிறுநீர்) தெளித்து புனித்தப்படுத்துவார். பின்னர் கொஞ்சம் புளியை கொண்டு குழாயின் தலை சுத்தம் செய்வார். அதன் பின்னார் அவர் தண்ணீர் பிடித்துக்கொண்டு போன பின்பு யாரும் தண்ணீர் பிடிக்கலாம். ஒவ்வொரு பிரமணரும் இவ்வாறு செய்ய, பிராமணரல்லாதோரும் இதையே செய்யத்தொடங்கினார்கள்.

ஒரு நாள் ஒரு இஸ்லாமியப் பெண் இது போல செய்வதைகண்ட பெரியார் அவரிடம், ‘உங்கள் மதத்தில் இது போன்ற மூட பழக்கங்கள் கிடையாதே நீங்களுமா நம்புகிறீர்கள் தீட்டு சமாச்சாரத்தை’ என்று மற்றவர்கள் செய்வதற்காக காரணத்தை சொல்லிக் கேட்டார். அப்பெண்மணியோ, ’எங்களுக்கு அதிலெல்லாம் நம்பிக்கை கிடையாது. புளி போட்டு குழாய்யை தேய்த்தால் தான் தண்ணீர் வரும் என்று எங்களிடம் சொன்னார்கள் அதனால் செய்தோம்’ என்று அப்பவியாக சொன்னார்.

ஒரு சாரார். இதன் காரணமாக ஈரோட்டு நகர்மன்ற தலைவர் பதவியில் இருந்து ராமசாமியை நீக்குமாறு கடிதங்கள் எழுதினார்கள். கடிதத்திற்கு மதிப்பளித்து, உண்மையை அறிய வந்த குழு, பெரியார் ஏற்கனவே பல பதவிகளில் பொறுப்பு வகிப்பதையும், மக்களால் அதிகம் நேசிக்கப்படுவதையும் கண்டனர். இவரை விட்டால் வேறு சரியான நபர் இல்லை என்று சொல்லி திரும்பிச் சென்று விட்டனர். இது கடிதம் எழுதியவர்களில்
முகத்தில் கரியைப் பூசியது.

அதே போல ஈரோட்டு கடைவீதியை அகலப் படுத்தவும் செய்தார். அதற்கு முன்பு வரை கடைவீதியின் இருபுறமும் தாராளமாய் ஆக்ரமிப்புச் செய்து வைத்திருந்தார்கள் வணிகப் பெருமக்கள். இதனால் அந்தச் சாலையில் நடந்து போவது என்பது கூட சிரமமாக இருந்தது. பல பெரும் வணிகர்களின் எதிர்ப்புக்களையும் மீறி ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை ஒழுங்கு படுத்தினார். அந்தப் பெரும் வணிகர்களில் பலர் ஈ.வெ.ராவின் நண்பர்களாகவும் இருந்தார்கள். செல்வச் செழிப்பில் அவருக்கு நிகராகவும் இருந்தார்கள். இவை எதுவுமே ராமசாமியை தயங்க வைக்கவில்லை. இவரின் இந்த தைரியமான முடிவு ஈரோட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

வர்த்தகத்திலும் பொதுத் தொண்டிலும் ஈ.வெ.ரா முழுகவனம் செலுத்திய காலத்தில் நாட்டு நடப்பு குறித்தான செய்திகளையும் ஆழ்ந்து படித்தார். நாட்டு விடுதலைக்காக போராடி வந்த காங்கிரஸ் இயக்கம் குறித்து அவருக்கு அக்கறை இருந்தது. அவர்கள் அகிம்சை முறையில் படும் அல்லல்கள் குறித்தான அனுதாபம் இருந்தது. போக்குவரத்து மையப் பகுதியாக இருந்ததால் ஈரோடு வழியாகச் செல்லும் காங்கிரஸ் தலைவர்கள், பிரமுகர்கள் பலர் ஈரோட்டில் இறங்கி நாயக்கர் வீட்டில் தங்கி உணவருந்திவிட்டு பயணத்தைத் தொடர்வது வழக்கம். அந்தக் காலகட்டத்தில் பிரபலமாக இருந்த காங்கிரஸ் தலைவர்களான சேலம் டாக்டர் பி. வரதராஜுலு நாயுடு, சி. ராஜகோபாலாச்சாரியர் என்ற ராஜாஜி ஆகியோர் அவர்களில் முக்கியமானவர்கள்.
ராஜாஜி அப்போது சேலம் நகர்மன்ற தலைவராக இருந்தார்.

டாக்டர் வரதராஜுலு நாயுடு காங்கிரஸின் மிகப்பெரிய பேச்சாளர். மக்களுக்குச் சுலபமாக புரியும் விதத்தில் எளிமையாக அரசியல் நிலைமைகளை விளக்கிப்பேசுகிறவர். மாலை ஆறுமணிக்கு மேடையில் பேச ஆரம்பித்தால் இரவு ஒன்பது மணிக்கு தன் பேச்சை முடிப்பார். தொடர்ந்து நீண்ட நேரம் பேசக்கூடியவர் என்றாலும் கூட்டம் ஒரு போதும் கலையாது. இவர் எங்காவது பேசுகிறார் என்ற செய்தி அறிந்தால் மக்கள் கிராமங்களில் இருந்து எல்லாம் வண்டி கட்டிக்கொண்டு பொதுக்கூட்ட மேடைக்கு வந்து சேர்வார்கள். டாக்டர் வரதராஜுலு ‘தமிழ்நாடு’ என்ற பெயரில் ஒரு பத்திரிக்கையும் நடத்தி வந்தார். அக்காலகட்டத்தில் காங்கிரசாரின் முக்கியமான பிரச்சார கருவியாகவும் இப்பத்திரிக்கை பயன்பட்டது.

ஈ.வெ.ரா-வின் திறமையான நிர்வாகத்தால் ஈர்க்கட்டப்பட வரதராஜுலுவும், ராஜாஜியும் காங்கிரஸில் ராமசாமி இருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதினார்கள். தமது இயக்கத்தினை பரவலாக எல்லா தரப்பு மக்களிடமும் கொண்டு போய் சேர்க்க உகந்தவர்களை பிடித்துக்கொண்டிருந்தது காங்கிரஸ்.

அப்போது தான் வி.கல்யாணசுந்தரம், வ.உ.சிதம்பரம் போன்றவர்களையும் தம்முள் இணைத்திருந்தது காங்கிரஸ். ஈ.வெ.ராவையும் இணைத்துக்கொண்டால் இன்னும் பலம் சேரும் என்று நினைத்தனர். இவ்விருவரின் தொடர் வற்புறுத்தலால் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் ஈ.வெ.ராமசாமி.

கொஞ்ச நாட்களில் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கம் அறிவித்து, எல்லோரையும் அதில் ஈடுபடும் படி வேண்டுகோள் வைத்திருந்தார். அதில் ஈடுபட்டு முழுமூச்சாக செயலாற்றுவதற்கு தான் வகித்து வரும் பதவிகள் இடையூராக இருக்கும் என்று கருதிய ஈ.வெ.ராமசாமி, இருபத்தியென்பது பதவிகளையும் துறந்தார்.

(தொடரும்)

*Download As PDF*

1 comment:

பொன்ஸ்~~Poorna said...

எரிந்த = எறிந்த