(தொடர்ச்சி..2)
பழமையில் பிடிப்பு இன்னும் நீங்கவில்லையே?
இன்று நமது வாழ்வு, மதம், கடவுள், மொழி, இலட்சியம் என்பன போன்றவை உண்மையான காட்டுமிராண்டித் தன்மை பொருந்தியவை தவிர வேறு எதில் பற்று கொண்டிருக்கிறோம்? எதை குரங்குப் பிடியாய் பிடித்துக் கொண்டிருக்கிறோம்?
நான் நாற்பதாண்டுகளுக்கு மேலாகவே சொல்லி வருகிறேன், எழுதி வருகிறேன் (குடிஅரசு பத்திரிகையை பார்)
“கடவுளை கற்பித்தவன் முட்டாள்,
பரப்பினவன் அயோக்கியன்,
வணங்குகிறவன் காட்டுமிராண்டி”
என்று! அதற்காக கோபப்படாத அரசியல்வாதிகள் தமிழை காட்டுமிராண்டி மொழி என்றால் இவனுக்கு என்ன பெயர் இடுவது என்றே நமக்கு புரியவில்லை.
தமிழை சீர்திருத்தி வளர்க்க எவனும் முன்வரவில்லையே?
தமிழை, தமிழ் எழுத்துக்களை திருத்த வேண்டும் என்று 1927 வாக்கில் கருத்து கொடுத்தேன்; வகை சொன்னேன். ஒருவனாவது சிந்திக்கவில்லை. பார்ப்பனர்கள் கூட ஏற்றுக் கொண்டார்கள்; நம் காட்டுமிராண்டிகள் சிறிது கூட சிந்திக்கவில்லை.
பிறகு தமிழ் மொழிக்கு (கமால் பாட்சா செய்தது போல) ஆங்கில எழுத்துக்களை எடுத்துக் கொண்டு காட்டுமிராண்டிக்கால எழுத்துக்களை தள்ளிவிடு என்றேன். இதையும் பார்ப்பனர் சிலர் ஏற்றுக் கொண்டனர். தமிழன் சட்டை செய்யவே இல்லை. இந்நிலையில் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று ஒரு இலட்சத்து ஒன்றாவது தடவையாக சொல்லுவதற்கு ஏன் ஆத்திரம் காட்டுகிறாய்? கூலிக்கு மாரடிக்கும் அழுகைத் தொழிலில் வாழ்பவர்கள் போல ஏன் அடித்துக் கொள்ளுகிறாய்?
வேறு மொழி ஏற்பதால் கேடு என்ன?
தமிழை ஒதுக்கிவிடுவதால் உனக்கு நட்டம் என்ன? வேறு மொழியை ஏற்றுக் கொள்ளுவதால் உனக்கு பாதகம் என்ன?
இங்கிலிஷினால் சிறுமை என்ன?
தமிழிலிருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன?
நமது நாட்டுக்கு கமால் பாட்சா ஆட்சி போன்ற ஒரு வீரனும், யோக்கியமானவனுமான ஒருவன் ஆட்சி இல்லை என்பதால் பல முண்டங்கள் பலவிதமாய் பேசி முடிக்கிறதே அல்லாமல், இன்று தமிழைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் யாருக்கு என்ன வந்தது? என்று கேட்கிறேன்.
நம் மக்கள் வளர்ச்சியில் நாட்டம் வேண்டும்?
நம் மக்கள் வளர்ச்சி அடையவேண்டிய நிலை இன்னும் வெகுதூரம் இருக்கிறது. அதனால் வேகமாய்ச் செல்லவேண்டிய அவசியம் இருக்கிறது.
தமிழ் காட்டுமிராண்டி மொழி – ஏன்? எப்படி?
புலவர்களுக்கு (தமிழ் படித்து தமிழால் பிழைப்பவர்களுக்கு) வயிற்று பிழைப்புக்கு வேறு வழியில்லையே என்கிற காரணம் ஒன்றே ஒன்று அல்லாமல் தமிழர்கள் நல்வாழ்விற்கு தமிழ் எதற்கு ஆகவேண்டி இருக்கிறது.
இத்தனைக் காலமும் தமிழ் தோன்றிய 3000, 4000 ஆண்டுகாலமாக இந்த நாட்டில் வாழ்ந்த தமிழினாலும், தமிழ் படித்த புலவனாலும் தமிழ் நாட்டிற்கு, தமிழ் சமுதாயத்திற்கு என்ன நன்மை? என்ன முற்போக்கு உண்டாக்கப்பட்டிருக்கிறது? இலக்கியங்களிலே, சரித்திரங்களிலே காணப்படும் எந்தப் புலவனால், எந்த வித்துவானால் எவன் உண்டாக்கிய இலக்கியங்களினால் இதுவரை தமிழனுக்கு ஏற்படுத்தப்பட்ட, ஏற்படுத்திய நன்மை என்ன என்று கேட்கிறேன்.
முக்கிய புலவர்களும், மத உணர்வுள்ள ஆரிய அடிமைகளே!
இன்று தமிழ் உலகில் தமிழ்ப் புலவர்களில் 2, 3 புலவர்களின் பெயர்கள் அடிப்படுகின்றன. அவர்கள் தொல்காப்பியன், திருவள்ளுவன், கம்பன்.
இம்மூவரில்
தொல்காப்பியன் ஆரியக்கூலி. ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாகச் செய்துவிட்ட மாபெரும் துரோகி.
திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்றவகையில் ஆரிய கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் வகையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச்சென்றார்.
கம்பன் இன்றைய அரசியல்வாதிகள், தேசபக்தர்கள் பலர் போல அவர் படித்த தமிழ் அறிவை தமிழ் எதிரியாகிய பார்ப்பனர்க்கு ஆதரவாய் பயன்படுத்தி தமிழரை இழிவுபடுத்தி கூலி வாங்கிப் பிழைக்கும் மாபெரும் தமிழர் துரோகியே ஆவான். முழுப்பொய்யன். முழு பித்தலாட்டக்காரன். தன்னை பார்ப்பானாகவே கருதிக்கொண்டு பார்ப்பான் கூட சொல்ல பயப்படும் கருத்துக்களையெல்லாம் கூறி தமிழர்களை நிரந்தர கீழ்மக்களாக்கிவிட்ட துரோகியாவான்!
சாதியை சாதித்தொழிலை ஆதரித்தவர்கள்
இம்மூவர்களும் சாதியையும், சாதித்தொழிலையும் ஏற்றுக் கொண்டவர்களே ஆவார்கள்.
சந்தர்ப்பம் நேரும் போது இக்கருத்தை நல்ல வண்ணம் விளக்க காத்திருக்கிறேன். இவர்களை விட்டு தமிழர்கள் இனி எந்த புலவனை, எந்த இலக்கியத்தை தமிழன் நன்மைக்கு ஆதாரமாக எடுத்துக்காட்ட தமிழபிமானிகள் என்பவர்கள் முன்வரப்போகிறீர்கள் என்று கேட்கிறேன்.
(தொடரும்)
*Download As PDF*
Saturday, 8 August 2009
Subscribe to:
Post Comments (Atom)
 
 
 Posts
Posts
 
 
No comments:
Post a Comment