ஜார்ஜ் ஜோசப், கேசவமேனன் ஆகிய கேரள காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் எழுதிய ரகசியக் கடிதம் தான் ஈ.வெ.ராவின் கையில் கிடைத்தது. கேரள ராஜ்யத்தில் இருந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது வைக்கம் என்ற ஊர். சிறு கிராமமாகவும் இல்லாமல் பெரு நகரமாகவும் இல்லாமல் மத்திய தரமான ஊர் வைக்கம். அங்கே இருந்த கோவிலைச் சுற்றி இருந்த தெருக்களில் தாழ்த்தப்பட்டோர் நடக்கக்கூடாது என்ற தடையை நீண்ட நாட்களாக நம்பூதிரிகளால் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
இதனை எதிர்த்து போராட்டம் செய்தவர்களை பிடித்து உள்ளே போட்டது சமஸ்தானம். தெருவுக்குள் நுழையும் போராட்டத்தை கேரள காங்கிரஸ்காரர்கள் தொடர்ந்து நடத்தினார்கள். ஒவ்வொரு பிரிவாக தினம் போராட்டத்தில் ஈடுபடுவதும், கைது செய்யப்பட்டதும் உள்ளே போய் உட்கார்ந்து கொள்ளுவதுமாக காங்கிரஸ்காரர்களின் போராட்டம் பதினெட்டு நாட்கள் நடந்தது. பத்தொன்பதாம் நாள் போராட்டம் நடத்த ஆள் இல்லாமல் போய் விட்டது. அப்படி உள்ளே போனவர்களில் ஜார்ஜ் ஜோசப், கேசவமேனன் ஆகிய காங்கிரஸ் தலைவர்கள் முக்கியமானவர்கள். அவர் எழுதிய கடிதம் கண்டுதான் ஈ.வெ.ரா கிளம்பினார்.
திருவதாங்கூர் வந்து கிளர்ச்சியில் ஈ.வெ.ராமசாமி ஈடுபடப் போகிறார் என்ற செய்தி திருவிதாங்கூர் மன்னருக்கு எட்டியது. தமது உயரதிகாரிகளை அனுப்பி மன்னர் சில ஆணைகளை நிறைவேற்றச் சொன்னார். திருவிதாங்கூரிலிருந்து மன்னர் டில்லிக்குப் போகும் போதெல்லாம் தனது பரிவாரங்களுடன் ஈரோட்டில் இறங்குவார். அங்கிருக்கும் வெங்கட்ட நாயக்கரின் சத்திரத்தில் தங்கி இளைப்பாறி, அறுசுவை விருந்துகளையும் அன்பான உபசரிப்பையும் ஏற்றுக்கொண்டு பின் பயணத்தை தொடர்வார். இது அவரது வழக்கம். வெங்கட்டரின் மறைவுக்குப் பிறகும், ராமசாமி இந்த காரியங்களைத் தொடர்ந்து செய்து வந்ததால் அவருக்கு பதில் மரியாதையாக மிகப் பெரிய வரவேற்பு ஒன்றை கொடுக்கப் பிரியப் படுவதாகவும், போராட்டத்தில் ஏதும் கலந்து கொள்ளாமல் ராமசாமி திரும்பிச் செல்ல வேண்டுமென்றும் அதிகாரிகள் வைக்கம் வந்திருங்கிய ஈ.வெ.ராவிடம் கேட்டுக் கொண்டனர். ஆனால் முன் வைத்த காலை பின் வைத்து பழக்கப் பட்டிராத ராமசாமி மன்னரின் கோரிக்கைளை ஏற்க மறுத்து அதிகாரிகளை திருப்பி அனுப்பினார்.
ஈ.வெ.ராவின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு போராட்டம் மீண்டும் புத்துயிர் பெற்றது. பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வேடிக்கை பார்த்தனர். சில ஆயிரம் பேர் போராட்டத்தில் குதித்தனர். கோஷங்களும் பேரணிகளுமாய் வைக்கம் நகரமே குலுங்கியது. அரசின் தடையை மீறி தாழ்த்தப் பட்டவர்களுடன் அனுமதி மறுக்கப் பட்ட தெருவுக்குள் நுழைய முயன்ற ஈ.வெ.ராவை கைது செய்தது காவல் துறை. ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப் பட்டது. ஈ.வெ.ராவின் கைதை தொடர்ந்து கோவை அய்யாமுத்து, மயூரம் ராமநாதன் போன்றோரும் தனித்தனியாய் தலமையேற்று கைதானார்கள். நாகம்மையாரும் ஈ.வெ.ராவின் தங்கை கண்ணமாளும் தலைமையேற்று போராட்டத்தை தொடர்ந்தனர். பெண்களின் போராட்டம் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்விருவரும் திருவிதாங்கூர் முழுவது சுற்றுப் பயணம் செய்து தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தைப் பற்றி விளக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
சிறையில் அடைக்கப் பட்டிருந்த ஈ.வெ.ரா, அருவிக்குத்தி என்ற தீவிற்கு ஆறுமாத கடுங்காவல் விதிக்கப்பட்டு நாடு கடத்தப் பட்டார். அங்கு போகும் வழியில் புயலில் சிக்கி படகு வேறு பக்கம் ஒதுங்கியது. சட்டத்திற்கு கட்டுப் பட்ட ஈ.வெ.ரா தாமே முனைந்து படகில் வந்த காவலர்களுக்கும் பாதுகாப்பு தந்து படகை அருவிகுத்தி தீவுக்கு திருப்பி சிறைக்குள் அடைந்து கொண்டார்.
பெண்கள் தலைமையேற்ற தொடர் போராட்டத்தால் திருவிதாங்கூர் மகாராணி அனுமதி மறுக்கப்பட்ட தெருவுக்குள் தாழ்த்தப் பட்டவர்களை உள்ளே விட அனுமதி அளித்தார். இதனை காந்தியடிகளே நேரில் வந்து சிறைக்குள் இருந்த பெரியாரை சந்தித்து தெரிவித்தார். அவர் சொன்னால் மட்டுமே நாகம்மாளும், கண்ணம்மாளும் போராட்டத்தை கைவிடுவார்கள் என்பதால் அவ்வாறு வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
அதன் படி பெரியாரின் வேண்டுகோளை ஏற்று அவ்விருவரும் போராட்டத்தை முடிவுக் கொண்டு வந்தனர். அரசு பணிந்தது, தாழ்த்தப் பட்ட மக்கள் தெருவில் நடக்கும் உரிமையை பெற்றனர். ஆறுமாத சிறைத்தண்டனை விதிக்கப் பட்ட ஈ.வெ.ராவுக்கு நான்கு மாதத்திலேயே விடுதலை கிடைத்தது. திருவிதாங்கூர் மன்னரின் மறைவை ஒட்டி, அரசியல் கைதிகள் அத்தனை பேரும் விடுவிக்கப் பட்டனர். ஈ.வெ.ராவும் வெளியே வந்தார். நேரே ஈரோடு சென்று நோய்வாய்ப் பட்டிருந்த சின்னத்தாயம்மையாரை காண விழைந்தார். 1924, செப் 11ந்தேதி சென்னை மாகாண அரசால் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். எப்போதோ பேசிய அரசுக்கு எதிரான மேடைப் பேச்சின் காரணமாக கைது செய்யப்பட்டிருந்தார். போதிய ஆதாரமில்லையென நீதிமன்றம் கூறியது. அரசும் வழக்கை வாபஸ் வாங்கிக் கொண்டது.
1925, நவம்பர் 29ந்தேதி நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு போராட்ட வெற்றிவிழாக் கூட்டத்தில் ஈ.வெ.ராவும் கலந்து கொண்டார். அங்கு அவருக்கு வைக்கம் வீரர் என்று சிறப்பு பட்டம் சூடி மக்கள் மகிழ்ந்தனர். சாதாரண ஒரு வியாபாரியின் மகனான ஈ.வெ.ராமசாமி, கொண்ட கொள்கைப் பிடிப்பாலும் தமது உறுதியான முடிவினாலும் வைக்கம் வீரராக போற்றப்பட்டார்.
காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் நல்லவண்ணம் வெற்றி வாகை சூடியது. தென்னகத்தில் இத்திட்டம் பரவலாகவும், வெற்றியாகவும் அமைவதற்கு ஈ.வெ.ரா ஆற்றிய தொண்டு அளவிட முடியாதது. இந்த சூழ்நிலையில்தான் காங்கிரஸில் ஒரு கருத்து வேறுபாடு முளை விட்டது. சித்தரஞ்சன தாஸர் தலைமையில் சிலர் கூடி, இனி அரசுடன் ஒத்துழைத்து சட்ட மன்றங்களை கைப்பற்றி ஆட்சியமைக்க வேண்டுமென வாதிட்டனர். அதற்கென சுயராஜ்யக் கட்சி என்றொரு அரசியல் அமைப்பினையும் தொடங்கினர். இதன் கிளை தென்னகத்தில் தோற்றுவிக்கப் பட்டு அதனை பார்ப்பனர்களே முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டனர். அப்போதும் ராஜாஜியும், ஈ.வெ.ராவும் காந்தியடிகளின் பக்கமே நின்றனர்.
சுயராஜ்யக் கட்சியின் தோற்றத்தால் மிண்டோ-மார்லி சீர்திருத்தத்தின் விளைவால் இந்தியர்களையும் உயர் உத்தியோகங்களின் நியமிக்க வெள்ளை அரசு ஒத்துக் கொண்டது. அதன் படி அந்த உயர் பதவிகள் அத்தனையும் பார்ப்பனர்களே பெற்றுக் கொண்டனர். எடுத்துக் காட்டாக 1898 முதல் 1930 வரை நியமிக்கப் பட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகளில் ஒன்பது பேர் இந்தியர். இதில் 8 பேர் பார்ப்பனர், ஒருவர் நாயர்.
இப்படியாக எல்லா உயர் பதவிகளும் அவர்கள் வசம் ஆட்சி அதிகாரத்தில் நுழைந்துகொள்ள பார்ப்பனர்கள் தீட்டிய இந்த சதித்திட்டத்தினால் வெகுண்டெழுந்த டாக்டர் டி.எம்.நாயர், சர்.பி. தியாகராயர் இருவரும் சென்னையில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்னும் நீதிகட்சியைத் துவங்கினர். பனகல் அரசர் ராமராய நிங்கவார், டாக்டர் நடேசமுதலியார் ஆகியோர் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். ஆனால்.. காங்கிரஸின் போலி மாயை மூடுபனி போல இருந்ததால் தமிழகத்தலைவர்கள் பலர் காங்கிரஸ் கட்சியிலேயே இருந்தனர்.
பார்ப்பனர் அல்லாதோர் ஒன்றிணைந்து செயல்படுவதை பார்ப்பனர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. காங்கிரஸ் கட்சியில் பார்ப்பனர் அல்லாதோரின் உழைப்புக்கு கிடைக்கும் பெயரையும் புகழையும் பார்ப்பனர்களால் மறைக்கப்பட்டது. வைக்கம் போராட்டமாகட்டும், ஈரோட்டு சாலை மறியலாகட்டும் எதையுமே அவர்கள் வெளியிட வில்லை. நீதிகட்சியினர் நடத்திய ’திராவிடன்’ தமிழ் ஏடும்,’ஜஸ்டீஸ்’(இதன் காரணமாக நீதிகட்சி என்ற பெயரை விட ஜஸ்டீஸ் கட்சி என்ற பெயரை பார்ப்பனர்கள் திட்டமிட்டு பரப்புரைத்து பொதுமக்கள் அண்டவிடாமல் பார்த்துக்கொண்டார்கள்) என்ற ஆங்கில பத்திரிக்கையும் இச்செய்திகளை பெரியதாக வெளியிட்டிருந்தாலும்.. இவைகளுக்கு போதிய செல்வாக்கில்லை. ஆகையால் தாமே ஒரு பத்திரிக்கையை தொடங்குவது என தீர்மானத்திற்கு வந்தார் ஈ.வெ.ராமசாமி.
-------
(தொடரும்)
*Download As PDF*
Sunday, 2 August 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment