Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Saturday, 29 August 2009

தமிழர்களின் முன்னேற்றத்திற்கு இந்து கோயில்களைத் தரைமட்டமாக்குக!

தமிழர்களின் முன்னேற்றத்திற்கு இந்து கோயில்களைத் தரைமட்டமாக்குக!

நம் திராவிட மக்கள் புத்தி இல்லாதவர்களாக, மடையர்களாக, காட்டுமிராண்டிகளாகவே இருக்கின்றனர். இன்னும் நாம், மதத்தின் பேரால், கடவுளின் பேரால் மட்ட சாதி ஆக்கப்பட்டு இழிநிலையில் இருப்பது பற்றிக் கவலைப்படுவதே இல்லை. இப்படி எதனால் காட்டுமிராண்டியோ, இழிமக்களோ ஆனோமோ அந்த மதத்தையும், கடவுளையும் பற்றிச் சிந்திப்பதே இல்லை. என்ன காரணம்? நம் மக்களுக்குப் புத்தியும் இல்லை மானம் இல்லை. இதன் காரணமாகவே ஏமாறுகின்றோம். பரம்பரை பரம்பரையாக நாம் ஏன் கீழ்ச்சாதி? பரம்பரை பரம்பரையாக அவன் ஏன் மேல்சாதி? என்று இந்த அதிசய அற்புதக் காலத்திலும் எவன் சிந்திக்கின்றான்? இந்த நிலைமைகளை மாற்ற வேண்டும் என்று எங்களைத் தவிர எந்தப் பொதுத் தொண்டுக்காரன் பாடுபட்டான்? எவன் சிந்தித்தான்?

பொதுத் தொண்டன் பொதுத்தொண்டு செய்கின்றேன் என்று கூறுகின்றானே, அவனும் சட்டப்படி சாத்திரப்படி இழிமகன்தானே! அவனும் பார்ப்பானுக்கு சூத்திரன் என்கிற வைப்பாட்டி மகன்தானே என்று நினைத்து, எவன் பொதுத்தொண்டு செய்கின்றான்? மக்களிடம் சென்று “நீங்கள் பக்திமான், மேலானவர், தர்ம புருஷன்'' என்று கூறினால் காசு கொடுப்பான். அதை விட்டுவிட்டு, “நீங்கள் மடையர்கள், கல்லைக் கும்பிடுகின்றீர்கள், சாணியைப் பிள்ளையார் என்கிறீர்கள்'' என்று கூறிக் கொண்டு “பசிக்குது கொஞ்சம் சோறு கொடுங்கள்'' என்றால் என்ன கூறுவான்? “உன்னுடைய லட்சணத்துக்குச் சோறு வேறா? போடா போடா'' என்றுதானே கூறுவான்?

இதுவரையில் இந்த நாட்டில் எவரும் செய்யாத தொண்டை நாங்கள்தான் செய்கின்றோம். இந்த நாட்டுக்குச் செய்ய வேண்டிய தொண்டு ஒன்று இருந்தால், இதுதான் என்று நினைத்தபோது வருகின்றோம். இந்த நாட்டு மக்களுக்கு உண்மையை எடுத்துச் சொல்ல, மடமையைத் திருத்த எந்தப் படித்தவன், புலவன் முன் வருகின்றான்? அவனவன் வயிற்றுப் பிழைப்புக்கே தாம் படித்ததைப் பயன்படுத்துகின்றான். மற்றபடி பணக்கார லட்சாதிபதிகள் இருக்கின்றார்கள். இவர்கள் எல்லாரும் இதுபற்றிப் பாடுபடுகின்றனரா? இப்படி மக்கள் மூடர்களாய் இருந்தால்தான் நாம் கொள்ளை அடிக்க வசதியாக இருக்கும் என்று கருதிக் கொண்டு இருக்கிறார்கள்.

இவற்றை எல்லாம் தட்டிப் பேச இங்கு ஆளே கிடையாது. மேல் நாட்டுக்காரன் அவற்றை எல்லாம் விரட்டி விட்டு அறிவுக்குப் பொருத்தமான முறையில் கடவுளையும் மதத்தையும் அமைத்துக் கொண்டான். அதன் காரணமாக, அறிவியலில் அதிசய அற்புதங்களை நாளுக்கு நாள் உண்டாக்கிய வண்ணம் இருக்கின்றான். அந்த நாட்டில் இப்படி எல்லாம் ஆக அங்குக் கடவுள் துறையில் மதத் துறையில் அறிவுத் துறையில், மாறுதல் உண்டாக்க அறிஞர்கள் கிளம்பிச் சீர்திருத்தினார்கள். நாம் இத்தனைக் கோயில் குட்டிச் சுவரினை வைத்துக் கொண்டு சாதித்தது என்ன? நம்மை சைனாக்காரனும் பாகிஸ்தானும் விரட்டுகின்றான். ஆண்டுக்கு 250 கோடி செலவில் பட்டாளத்தை வைத்துக்கொண்டு இருந்தாலும், நேரு (இந்தியாவின் தலைமை அமைச்சர்) நடுங்கிக் கொண்டு இருக்கின்றாரே?

தோழர்களே! ரயில் வந்து 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன. பஸ் வந்து 50 வருஷம் ஆகின்றன. இன்னும் தந்தி, ரேடியோ போன்ற வசதிகள் எல்லாம் ஏற்பட்டு இருக்கின்றன. இன்னும் இதைவிட அறிவியல் அதிசயம் நம் நாட்டிற்கும் வரப்போகின்றது. லண்டனில் நடக்கும் டான்சையோ சினிமாவையோ இங்கு இருந்து கொண்டே பார்த்துக் களிக்கும்படி "டெலிவிஷன்' வெகு சல்லிசாக வரப்போகின்றது. இந்த டெலிவிஷனால் லண்டனில் சினிமா, நாடகக்காரர்களுக்குப் பிழைப்புக் குறைந்து கொண்டே வருகின்றதாம். காரணம், பலர் டெலிவிஷன் வாங்கி வைத்துக்கொண்டு வீட்டில் இருந்தே பார்த்துக் கொள்கின்றனர்.

ரஷ்யாவிலும் அமெரிக்காவிலும் போட்டிப் போட்டுக் கொண்டு, சந்திர மண்டலத்திலும் குடியேற முயற்சி செய்கின்றான். நமக்கு மட்டும் அப்படிப்பட்ட அறிவு இல்லை என்றால், நாம்தான் கல்லைக் கடவுளாகக் கும்பிடுகின்றோமே! மாட்டுச் சாணியையும் மூத்திரத்தையும் பஞ்சகவ்வியம் என்று கலக்கிக் குடிக்கின்றோமே! சாம்பலும் சுண்ணாம்புப் பட்டையும், செம்மண் பட்டையும் அடித்துக் கொள்ளுகின்றோமே! நாம் என்றைக்கு ஈடேறுவது?

முன்னோர்கள் சொன்னார்கள் மதம் சொல்லுகிறது ரிஷிகள், மகான்கள் சொல்லுகின்றனர் என்ற கருதாமல், தாராளமாக அறிவுக்கு ஆராய்ச்சிக்கு வேலை கொடுத்து உன் புத்தி சொல்லுகின்றபடி நட என்றுதான் கூறுகின்றோம். ஆனால், புத்தர் ஒருவர்தான் “உன் புத்திக்கு ஏற்றபடி, அது சொல்லுகின்றபடி நட. முன்னோர்கள் பெரியவர்கள் சாஸ்திரம் சொல்லுகிறது என்று கேட்காதே! உன் புத்தி சொல்லுகின்றபடி நட'' என்றார். அதன் காரணமாகவே பார்ப்பனர்கள் புத்த நெறியினை ஒழித்துவிட்டார்கள். அந்தக் கொள்கை இன்று சீனா, ஜப்பான், சிலோன், திபெத் ஆகிய நாடுகளில் இருக்கின்றது. இன்று புத்தன் யார் என்று இங்கு பல பேர்களுக்குத் தெரியாது. இப்படிப் புத்தனுக்குப் பிறகு எவனுமே தோன்றவே இல்லையே! இந்த 2500 ஆண்டில் நாங்கள்தான் தோன்றி பாடுபட்டு வருகின்றோம்.
(10.10.1960 அன்று, தூத்துக்குடியில் ஆற்றிய சொற்பொழிவு) *Download As PDF*

Saturday, 15 August 2009

அவசியமான காரியங்கள்

இந்திய நாட்டில், பெரும்பாலும் உலகத்தின் வேறு எங்கும் இல்லாததும், மனிதத்தன்மைக்கும் நியாயத் துக்கும் பகுத்தறிவுக்கும் ஒவ்வாததுமான கொடுமைகள் பல இருந்து வந்தாலும் - அவற்றுள் அவசரமாய்த் தீர்க்கப்பட வேண்டியதும், இந்தியர்கள் காட்டுமிராண்டிகள் அல்லரென்பதையும், மனிதத் தன்மையும் நாகரிகமுடையவுமான சமூகம் எனவும் உலகத்தாரால் மதிக்கப்பட வேண்டியதற்குச் செய்ய வேண்டியதும் - மற்றும் உலகத்திலுள்ள பெரும் பான்மையான நாட்டார்களைப்போலவே அன்னிய நாட்டினர்களின் உதவியின்றித் தங்கள் நாட்டைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ளவும், ஆட்சி நிர்வாகம் செய்யவும் தகுதியுடையவர்கள் என்று சொல்லிக் கொள்ள வேண்டுமானாலும் - முதலாவதாய்ச் செய்யப் படவேண்டிய காரியம் இரண்டு உண்டு என்று உறுதியாய்க் கூறுவோம்.

அவைகளில் முதலாவது எது வென்றால், இந்திய மக்களிலேயே பலகோடி ஜனசங்கியை உள்ள பல சமூகங்களைப் பிறவியிலேயே தீண்டாதவர்கள் என்று கற்பித்து, அவர்களைப் பகுத்தறிவற்ற மிருகங்களிலும் கேவலமாகவும், உணர்ச்சியற்ற பூச்சி புழுக்களி லும் இழிவாகவும் நடத்துவதை ஒழிக்க வேண்டியதாகும்.

இரண்டாவதானது எதுவென்றால், பொதுவாக இந்தியப் பெண்கள் சமூகத்தையே அடியோடு, பிறவியில் சுதந்திரத்திற்கு அருகதையற்றவர்கள் என்றும், ஆண் களுக்கு அடிமையாக இருக்கக் கடவுளாலேயே சிருஷ்டிக்கப் பட்டவர்கள் என்றும் கற்பித்து, அவர்களை நகரும் பிணங்களாக நடத்துவதை ஒழிக்க வேண்டிய தாகும்.

ஆகவே, மேற்கண்ட இந்த இரண்டு காரியங்களும் - எந்தக் காரணத்தை முன்னிட்டும் - இந்தியாவில் இனி அரை நிமிடம்கூட இருக்கவிடக் கூடாதவைகளாகும். இந்தக் காரணத்தாலேதான், நாம் மேற்கண்ட இரண்டு கொடுமைகளும் அழிக்கப்படாமல் - இந்தியாவுக்குப் பூரண சுதந்திரம் கேட் பதோ, இந்தியாவின் பாதுகாப்பையும் ஆட்சி நிர்வாகத்தையும் இந்திய மக்கள் “நாங்களே பார்த்துக்கொள்ளுகிறோம்” என்று சொல்லுவதோ, மற்றும் இந்தி யாவுக்கு அன்னியருடைய சம்பந்தமே சிறிதும் வேண்டாம் என்று சொல்லுவதோ - ஆகிய காரியங்கள் முடியாதென்றும், அவை சுத்த அறியாமைத்தனமான தென்றும், இல்லாவிட்டால் - சுயநல சூழ்ச்சியே கொண்ட நாணயத்தவறான காரியமாகு மென்றும் சொல்லி வருகிறோம் என்பதோடு - இப்படிச் சொல்லும் விஷயத்தில் நமக்குப் பயமோ, சந்தேகமோ கிடையாது என்றும் சொல்லுவோம்.

ஆதலால்தான், இவ்வித முட்டாள்தனமானதும், சூழ்ச்சியானதுமான முயற்சிகளை நாம் எதிர்க்க வேண்டியவர்களாயிருக்கின்றோம்.தீண்டாமை என்னும் விஷயத்திலிருக்கும் கொடுமையும் மூடத் தனமும் மூர்க்கத்தனமும் யோசித்துப் பார்த்தால், அதை மன்னிக்கவோ, அலட்சியமாய்க் கருதவோ, ‘நாளை பார்த்துக் கொள்ளலாம்; இப்போது அதற்கென்ன அவசியம், அவசரம்’ என்று காலந் தள்ளவோ சிறிதும் மனம் இடம் தருவதில்லை.

ஒருவன், அதாவது பிறரைத் தீண்டாதார் எனக் கருதிக் கொடுமைப் படுத்துகின்றவர்களை அத்தீண்டாதார்களுக்கு இருக்கும் உண்மையான கஷ்டத்தை உணரச் செய்யவேண்டுமானால், இப்போதைய வெள்ளைக்கார அரசாங்கத்தின் கீழ் அனுபவிக்கும் கொடுமைகள் போதாது என்றும், சிறிதும் சுதந்திரமும் சமத்துவமும் அற்றதும், சதா இராணுவச் சட்டம் அமலில் இருப்பதுமான ஏதாவது ஒரு கொடுங்கோல் ஆட்சி இருந்தால் தான், இம்மாதிரி கொடுமைப் படுத்துகின்ற மக்களுக்கு உணர்ச்சி வந்து, புத்தி வருமென்றும் நமக்குச் சிற்சில சமயங்களில் தோன்றுவது முண்டு.

ஆனால், இந்தியாவை இம்மாதிரி மூர்க்கத்தனமும் நாணயக் குறைவும் மாத்திரம் சூழ்ந்து கொண்டிருக்காமல், மூடத்தனமும் சேர்ந்து கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பதால், இன்னமும் எவ்வளவு இழிவும், கொடுமையும் ஏற்பட் டாலும் இம்மாதிரியான மக்களுக்கு உண்மையான துன்பத்தை உணரத் தக்க நிலைமை வருவது கஷ்டமாக இருக்கும்.

என்றாலும், இந்நிலை மாறுதலடையக் கூடும் என்ற உறுதியை உண்டாக்கத் தக்க நம்பிக்கை கொள்வதற்கு இடமில்லாமல் போகவில்லை.இனி, பெண்கள் விஷயத்தில் அவர்களுடைய சுதந்திரத்தையும் உணர்ச்சியையும் கட்டிப்போட்டிருக்கும் கொடுமையானது - இது போலவே, இந்தியர்களுக்குச் சுதந்திர உணர்ச்சியே இல்லை என்பதைக் காட்டவும், அவர்கள் அடிமைகளின் குழந்தைகள் என்பதை ஒப்புக்கொள்ளவும் ஆதாரமான தென்றுதான் சொல்லவேண்டும்.

எப்படியெனில், இவ்விரண்டைப் பற்றி இந்திய விடுதலைவாதிகள், சுதந்திரவாதிகள், சுயேச்சைவாதிகள், தேசியவாதிகள், மக்கள் நல உரிமைவாதிகள் என்கின்ற கூட்டத்தார்களுக்குச் சிறிதும் உண்மையான கவலை இல்லாவிட்டாலும், மேற்கண்ட கூட்டத்தார்களில் 100-க்கு 90 பேர்களுக்கு மேற்பட்டவர்கள் சுயநலங் கொண்ட நாணயமற்றவர்களாகவே காணப்படினும் - இவர்களது முயற்சி இல்லாமலும் சிலசமயங்களில் மேற்கண்ட சுயநல சூழ்ச்சிவாதிகளின் எதிர்ப்பிற்கும், இடைஞ்சலுக்கும் இடையிலும் வேறு ஒரு வழியில் கொடுமைகள் அனுபவிக்கும் மேற்கண்ட இரு வகையாருக்கும் விமோசனம் ஏற்படுவதற்கு அறிகுறிகள் ஆங்காங்கு காணப்படுகின்றதைப் பார்க்கச் சிறிது மகிழ்ச்சி அடைகின்றோம். (‘பகுத்தறிவு’ - 1938) *Download As PDF*

Sunday, 9 August 2009

தமிழும், தமிழரும் – தந்தை பெரியார் - பாகம்-3

(தொடர்ச்சி..3)


கம்பனுக்கு சிலை வைத்தது மானம் கெடுவதா?

உலகில் ஒரு மாபெரும் மானம் கெட்ட சமுதாயம் என்றால் அது கம்பனுக்கு சிலை வைக்க வேண்டும் என்று கூறும் கூட்டமேயாகும்.

இன்று நம் நாட்டில் சமதர்மம் என்பது ஜாதியில், செல்வத்தில், பொருளில் என்பது மாத்திரம் அல்லாமல் குணத்திலும் சமதர்மம் என்பதாக கருதப்படுகிறது.

பார்ப்பானும், பறையனும் சமம்; முதலாளியும், பிச்சைக்காரனும் சமம் என்பதோடு யோக்கியனும், அயோக்கியனும் சமம். தமிழர் சமுதாயத்திற்கு நன்மை செய்தவனும், கேடு செய்து கூலிவாங்கி பிழைப்பவனும் சமம், சாணியும், சவ்வாதமும் சமம் என்ற அளவுக்கு இன்று நம் நாட்டில் சமதர்மம் தாண்டவமாடுகிறது.


மக்களிடம் சமத்துவம் ஏற்படுவதற்கு முட்டுக்கட்டை போடுவதா?

இது ஒருபுறம் இருந்தாலும் பல்லாயிரம் ஆண்டுகளாக கீழ்மைப்படுத்தப்பட்டு இழிநிலையில் இறுத்தப்பட்ட தமிழன் விடுதலை பெற்ற மனிதத் தன்மை அடைந்த மற்ற உலக மக்களுடன் சரிசமமாய் வாழவேண்டுமென்று உயிரைக் கொடுத்து சிலர் பாடுபடுகிற போது இந்த தமிழ்ப் புலவர் கூட்டமும், அவர்களால் முட்டாள்களாகப்பட்ட தமிழர் கூட்டமும், தமிழ், தமிழ் மொழி, தமிழர் சமுதாயம் என்னும் பேரால் முட்டுக்கட்டை போடுவது என்றால் இந்தக் கூட்டத்திற்கு என்றைக்குத் தான் தன்மான உணர்ச்சி வந்து மனிதத்தன்மை ஏற்படப் போகிறது?


பார்ப்பான் உன் தமிழை ஏற்கிறானா? ஏன்?

அட முட்டாள்களா! உங்கள் தமிழை பார்ப்பான் நீசமொழி என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சாஸ்திரங்களில் எழுதிவைத்து, சாமிகள் இருக்குமிடத்தில் புகாமல் விரட்டி அடித்ததோடு மாத்திரமில்லாமல் உன்னையும் உள்ளே புகவிடாமல் தீண்டத்தகாதவான வைத்திருக்கிறானே?

இதற்கு நீ என்றாவது வெட்கப்பட்டாயா? உங்களப்பன் வெட்கப்பட்டாரா? அவனை விட்டு விட்டு என்னிடம் வந்து மோதிக்கொள்கிறாயே? இதற்கு அறிவில்லை என்று பெயரா? மானமில்லை என்று பெயரா? “நீ யாருக்கு பிறந்தவன்?” என்று என்னைக் கேட்கிறாய்; நான் கேட்கிறேன், உன் தமிழையும், உன்னையும் உள்ளே விடாமல் இரண்டையும் வெளியில் நிறுத்தி கும்பிடு போடும்படி பார்ப்பான் செய்கிறான். நீயும் அதற்கேற்ப அடங்கி ஒடுங்கி நின்று குனிந்து கும்பிடுகிறாயே? மடையா! மானங்கெட்டவனே! நீ யாருக்குப் பிறந்தவன் என்று கேட்கிறேன்.


தமிழ்ப்படித்தான் பலன் இதுதான்!

புலவனே! நீ கெடுவதோடு தமிழ் மக்களை ஒவ்வொருவனையும் பார்த்து “நீ யாருக்கு பிறந்தவன்?” என்று கேட்கும்படி செய்கிறாயே? இதுதானே உன் தமிழின், தமிழ் சமுதாயத்தின் பெருமை?

தமிழ் உயர்மொழி எனில் தமிழன் கீழ்மகனானது எப்படி?

தமிழ் உயர்மொழியானால், தமிழன் கலப்படமற்ற சுத்தப் பிறவியானால், தமிழ் பேசுகிறவன் தமிழன் என்கிற காரணத்திற்கு ஆக உன்னை சூத்திரன், பார்ப்பானின் வைப்பாட்டி மகன் என்று கடவுள் சொன்னதாக சாஸ்திரம் எழுதிவைத்து, “கீதை” வெங்காயம் சொல்லுகிறது என்று சொல்லி உன்னை தீண்டாத ஜாதியாக பார்ப்பானும், அவன் பொண்டாட்டி, பிள்ளை, ஆத்தாள், அக்காளும் நடத்துகிறார்களே? நீ நாக்கைப் பிடுங்கிக் கொண்டாயா? நீ யாருக்கு பிறந்தாய் என்பது பற்றி சிறிதவது சிந்தித்து இருந்தால், என்னை நீ யாருக்குப் பிறந்தாய் என்று கேட்டு இருக்க மாட்டாய்.

எனக்கு நான் யாருக்குப் பிறந்தேன் என்பது பற்றி கவலை இல்லை. அது என் அம்மா சிந்திக்க வேண்டிய காரியம். நான் யாருக்குப் பிறந்தேன் என்று என்னாலும் சொல்ல முடியாது – தம்பீ! உன்னாலும், அதாவது நீ யாருக்கு பிறந்தாய் என்று (உன்னாலும்) சொல்ல முடியாது; அந்தப் பிரச்சினையே முட்டாளுக்கும், அயோக்கியனுக்கும் தான் தேவை.
மனிதனுக்கு மானம் தேவை!

யாருக்குப் பிறந்தாலும் மனிதனுக்கு மானம் தேவை; அது உன்னிடம் இருக்கிறதா? என்னிடம் இருக்கிறதா? என்பது தான் இப்போது சிந்திக்க வேண்டிய தேவை.

அதையும் விட தமிழ் மொழியிலும், தமிழ்ச் சமுதாயத்திலும் இருக்கிறதா? இருப்பதற்கு தமிழ் உதவியதா? உதவுகிறதா? என்பதுதான் முக்கியமான, முதலாவது கேள்வி.

ஈனசாதியாக்கிய முட்டாளை வணங்குவது ஈனமல்லவா?

தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பதால் உனக்கு பொத்துக் கொண்டது. ஆனால் தமிழன் ஈனஜாதிப்பயன் என்று கூறி உன்னை ஈனஜாதியாக நடத்துவது பற்றி உனக்கு எங்கும் பொத்துக் கொள்ளவில்லை! அது மாத்திரமல்ல; முட்டாள் பசங்கள் உன்னை ஈனஜாதியாய் நடத்துகின்றவர்கள் காலில் விழுகிறீர்கள். அவனை சாமி என்று கூறுகிறீர்கள், பிராமணர்கள் என்று ஒப்புக் கொள்ளுகிறீர்கள்.


சிந்தித்துப் பார்! நீ யார், நீங்கள் யாரென்று?

“வாழ்க்கை இன்ப துன்பங்களிலும் போக போக்கியங்களிலும் இருவருக்கும் சம உரிமை உண்டு என்றும் குறிப்பிட சமத்துவ சுபாவம் மிளிரும் மாறுதல் அவசியமா இல்லையா என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். உங்கள் மனைவிமார்களை நினைத்துக் ஒண்டே யோசிக்காதீர்கள். உங்களுடைய செல்வப் பெண் குழந்தைகளியும், அன்பு சகோதரிகளையும் மனதில் கொண்டு யோசித்துப் பாருங்கள்.

உங்கள் தாய்மார் சுதந்திரவாதிகளாய் இருந்தால் நீங்கள் எப்படி இருந்திருப்பீர்கள் என்பதையும் யோசித்துப் பாருங்கள். இன்று உலகில் கீழ்சாதியார் என்பவர்களுக்கு சம சுதந்திரம் வேண்டும் என்று போராடுகிறோம். அரசாங்கத்தின் இடமிருந்து விடுதலை பெற்று சுதந்திரமாய் வாழ வேண்டுமென்று போராடுகிறோம். அதே போராட்டத்தை நமது தாய்மார்கள் விஷயத்திலும், நமது சகோதரிகள் விஷயத்திலும் நம் பெண் குழந்தைகள் விஷயத்திலும் கவனிக்க வேண்டாமா?


(முற்றும்)

---------------------------
நன்றி :
தமிழும், தமிழரும் – தந்தை பெரியார்

வெளியீடு:-
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்
50, ஈ.வெ.கி. சம்பத் சாலை, சென்னை – 600 007. *Download As PDF*

Wednesday, 29 July 2009

நான் ஒரு தொண்டன்

நான் ஒரு பிறவித் தொண்டன்; தொண்டிலேயே தான் எனது உற்சாகமும் ஆசையும் இருந்து வருகிறது. தலைமைத் தன்மை எனக்குத் தெரியாது. தலைவனாக இருப்பது என்பது, எனக்கு இஷ்டமில்லாததும் எனக்குத் தொல்லையானதுமான காரியம். ஏதோ சில நெருக்கடியை உத்தேசித்தும், எனது உண்மைத் தோழரும் கூட்டுப் பொறுப்பாளருமான சிலரின் அபிப்பிராயத்தையும் வேண்டுகோளையும் மறுக்க முடியாமலும் தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்டிருக்கிறேனேயொழிய, இதில் எனக்கு மனச் சாந்தியோ, உற்சாகமோ இல்லை. இருந்தாலும் என் இயற்கைக்கும், சக்திக்கும் தக்கபடி நான் நடந்து வருகிறேன் என்றாலும் அதன் மூலம் எல்லோரையும் திருப்தி செய்ய முடியவில்லை.

(சென்னை கன்னிமரா ஓட்டலில், 6.10.1940இல் சொற்பொழிவு, குடிஅரசு, 13.10.1940)


*Download As PDF*

Sunday, 19 July 2009

நாம் இந்துக்கள் அல்லர் என்று விளம்பரப்படுத்திட வேண்டும்

பகுத்தறிவாளர் கழக மாநாடு என்ற பெயரில் இந்த மாநாடு நடைபெறுகின்றது. இதில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதை விளக்கிச் சிறிது கூறுகின்றேன். நடைபாதைக் கோயில்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்பது ஒன்று; அரசாங்கம் தீவிரமாக முயற்சி எடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். அடுத்து வடநாட்டில் ‘ராமநவமி' அன்று ‘ராமலீலா' என்ற பெயரில் தமிழ் மக்கள் - திராவிடர்களின் மனதைப் புண்படுத்தும்படி ராவணன், கும்பகர்ணன் முதலானோர் கொடும்பாவியை எரிக்கின்றார்கள். இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள், ஜனாதிபதி போன்றவர்கள் கலந்து கொள்கின்றார்கள். நாம் பல தடவை கண்டித்தாகி விட்டது. இனி, நாமும் பதில் நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

சூத்திரனான சம்புகன் தவம் பண்ணினான்; கடவுளைக் காண முயன்றான். இதன் காரணமாக வர்ணாசிரம தருமம் கெட்டு விட்டது என்றும், இதனால் ஒரு பார்ப்பனப் பையன் இறந்து விட்டான் என்றும் கூறி, ராமன் சம்புகனை வெட்டினான். துண்டு துண்டாக வெட்டிக் கொன்றான். எனவே, இப்படிப்பட்ட ராமனை நாமும் ராமநவமி தினத்தில் எரித்து, வடவருக்கு உணர்த்துவது பற்றி யோசிக்க வேண்டும். அடுத்து, இந்து மதத்தில் இருந்து விலக வேண்டும் என்பது. இந்து மதம் என்ற பெயரில் ஏராளமானவர்கள் உள்ளோம். அத்தனை பேரும் விலக ஒப்புக் கொள்வார்களா என்பது வேறு.

இன்றைக்கு நாம் சூத்திரர்கள் என்பதும், இழி ஜாதி என்பதும் சட்டப்படி, சாஸ்திரப்படி இருக்கின்றது. இன்றைக்குப் பார்ப்பான் யாரும் நம்மை சூத்திரர் என்று சொல்ல அஞ்சி, அடங்கி விட்டான். இன்றைக்கு ஜாதி இழிவை யாரும் பகிரங்கமாகக் கூறவும் முன்வரவில்லை. இப்படி இருந்தும் நமது சூத்திரப் பட்டமும், ஜாதி இழிவும் நீங்கவில்லையே! காரணம் என்ன? பார்ப்பானே அடங்கி விட்டான்; ஜாதி இழிவு பற்றி எவரும் கூறவும் முன்வரவில்லை என்று சொன்னேன். இந்த நிலையில் நம்மிடம் உள்ள இழிதன்மைக்கும், சூத்திரப் பட்டத்திற்கும் யார் மீது குற்றம் கூறுவது? நம்மை நாமேதான் தாழ்த்திக் கொண்டு இழிதன்மையில் உள்ளோம்.

தோழர்களே! இன்றைக்கு கடவுள் இருப்பது இடைவிடாத பிரச்சாரம் காரணமாக உலகில் இருக்கின்றதே ஒழிய, உண்மையில் எவரிடமும் கடவுள் நம்பிக்கை இல்லை. எனவே, நம்முடைய இழிவுக்கு இன்று கடவுள் நம்பிக்கை காரணமாகவும் இல்லை. இன்று நமக்கு உள்ள இழிவு நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்டதுதான் என்று மீண்டும் கூறுகின்றேன். இனி மதத்தையோ, கடவுளையோ, பார்ப்பான்களையோ திட்டுவது மூலம் ஒன்றும் பிரயோசனம் இல்லை. உங்கள் இழிவு நீக்கத்திற்கு இனி அது பயன்படாது. நாம் மனிதனாகணும். நாம் ஈன ஜாதியாகாமல் இருக்க வேண்டும். சூத்திரன் அல்லாதவனாக இருக்க வேண்டும் என்பதுதான் ஆகும்.

நமது இழிவும், சூத்திரப் பட்டமும் இன்று சட்டத்தில் இருக்கின்றதே! இப்படிச் சட்டத்தில் இருக்கும்போது கடவுளையும், பார்ப்பானையும் திட்டி என்ன பிரயோசனம்? அறிஞர்கள் சிந்திக்க வேண்டும். இனி நாம் சும்மா இருந்தால் பிரயோசனம் இல்லை. நாம் இன்று இந்து மதத்தின் பட்டியலில் உள்ளோம். நாம் இந்த இந்து மதப்படிதான் சூத்திரன். இது மாற வேண்டுமே! இது கடினமான பிரச்சினை. இதற்குப் பரிகாரம் தேடியாக வேண்டும். சட்டப்படி நீங்கள் சூத்திரன்கள். இந்தச் சட்டம் இந்தியா பூராவுக்கும் உள்ளது. இதனை மாற்றுவது எளிதல்ல. ஒருகால் தமிழகம் தனியாகப் பிரிந்தால் நாம் மாற்றலாம். இதற்குப் பிரிவினை பிரசாரம் செய்ய வேண்டும்.

உடனடியாக நமது ஜாதி இழிவு மாற, நாம் இந்து மதத்தில் இருந்து விலகிவிட வேண்டும். அதற்காக நாம் இந்துவல்ல என்று ஒவ்வொருவரும் விளம்பரப்படுத்திவிட வேண்டும். இந்து அல்ல என்று கூறி விட்டால் - இஸ்லாமாகவோ, கிறித்துவனாகவோ மாறினால், அப்போதும் மூடநம்பிக்கைக்கு ஆட்பட்டு விடுவோம். எனவே, அவைகளும் பயன்படாது. எனவே, அறிஞர்கள் சிந்திக்க வேண்டும். இது, இன்றைக்குப் பெரிய சிக்கல். மக்கள் சிந்திக்க வேண்டும். மதம் விலகத் துணிய வேண்டும். இதற்கு என்றே ஒரு மாநாடு போட்டு, மதம் விலக ஏற்பாடு செய்ய உத்தேசித்து உள்ளேன். அதற்கு என்று பாரம் அச்சடித்து, அதனைப் பூர்த்தி செய்து, கையொப்பம் வாங்கி, கெசட்டில் போடவும் ஏற்பாடு செய்ய வேண்டி வந்தாலும் வரும்.

எனவே, நமது இழி நிலை மாற, நாம் இந்து மதத்தில் இருந்து நீங்கிக் கொள்ள வேண்டும். அடுத்து நம் மக்களுக்கு இன்று இருந்து வரும் தீண்டாமை இழிவு, நாம் கோயிலுக்குப் போவது மூலம்தான் உள்ளது. குளித்து மூழ்கி கோயிலுக்குப் போனாலும் கர்ப்பக் கிரகத்துக்கு வெளியேயே நீங்கள் நிற்கின்றீர்கள். ஏன் இப்படி நிற்கின்றீர்கள்? நீங்கள் தாழ்ந்தவர்கள், தீண்டப்படாதவர்கள்; அதற்கு மேல் போனால் கோயிலின் புனிதத்தன்மை கெட்டு விடும் என்பதை ஒத்துக் கொண்டே நிற்கின்றீர்கள். எனவே, நம் மக்களின் இழிவும், தீண்டாமையும் நீங்கவும் மக்கள் கோயிலுக்குப் போவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

(22.7.73 அன்று பெரம்பலூர் வட்ட பகுத்தறிவாளர் கழக 2ஆம் ஆண்டு மாநாட்டில் ஆற்றிய உரை) *Download As PDF*