Saturday 20 June 2009

“ஈரோடு ராமசாமி- வாழ்க்கை வரலாறு”

மிகுந்த தெய்வநம்பிக்கையும் பக்தியையும் உடையவர் ராமநாதன் அய்யர். திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சி சொந்த ஊராக இருந்தாலும் ஈரோட்டில் மளிகைகடை வைத்திருந்தார்.

வியாபாரத்துடன் சேர்த்து தனது பக்திமார்க்க விசயங்களையும் சேர்த்தே இலவசமாக கொடுப்பது அவரது வழக்கம். அதனாலேயே அவரது கடைக்கு வருவோரில் பலர் “சாமீ.. அந்த தெய்வத்துக்கு என்ன வச்சு கும்பிடனும், இந்த தெய்வத்துக்கு என்னவச்சு கும்பிடனும்”என்பது போன்ற சந்தேகங்களை கேட்டு, அவர் சொல்படியே கேட்டும் வந்தனர்.

எதற்கெடுத்தாலும் அவர் விதியை துணைக்கு இழுத்து தான் பேசுவார். யாருக்காவது உடம்பு சரி இல்லை என்றால்.. “அவனுக்கு விதி சரியில்லை” என்பார். எவராவது இறந்து போனாலும், “அவனுக்கு விதி முடிச்சு போச்சு. அவ்வளவுதான்” என்று சாதாரணமாக சொல்லி விடுவார்.

அவர் கடையின் வாசலில் நின்றுகொண்டிருக்கும் போது அந்த பன்னிரெண்டு வயதுச் சிறுவன் வந்தான். அவன் தொடர்ச்சியாக ராமநாதன் அய்யரை கவனித்து வருபவன். அய்யரின் கடையில் வெயில் படாமல் இருக்க.. முட்டுக்கட்டை கொடுத்து தட்டி வைக்கப்பட்டிருக்கும்.

அய்யர் அந்த சிறுவனை கவனிக்க வில்லை. “சாமீ” என்றழைத்தான் சிறுவன். அய்யர் திரும்பிப்பார்த்தார். என்னடா சொல்லு என்பது போலிருந்தது அவரின் பார்வை. “விதின்னு ஒன்னு நிசமாகவே இருக்கிறதா?”. ஆழாக்கு உயரத்திலிருக்கும் சிறுவன் அப்படி கேட்டது, அய்யருக்கு சிரிப்பு வரவழைத்து விட்டது.

“இருக்குடா.. நடக்குற எல்லா காரியங்களுமே விதியோடு தொடர்புடையது” என்று அய்யர் சொல்லி வாய் மூடுவதற்குள் சிறுவன் தட்டிக்கு கொடுத்திருந்த முட்டுக்கட்டையை தட்டி விட்டான். கட்டை விலகியதும், தட்டி சடாரென கிழிறங்கி அய்யரின் தலையை பதம் பார்த்தது.

“அடேய் சண்டாளா.. ஏண்டா இப்படி பண்ணினாய்?” என்று தலையை தடவியவாரே சிறுவனை விரட்டினார் அய்யர். சிறுவன் பத்தடி ஓடி, திரும்பி நின்று சொன்னான், “நான் ஒன்னுமே செய்யவில்லை சாமீ.. எல்லாம் விதியோட விளையாட்டு. கட்டை விலகி, தட்டி உங்க தலையில விழணும் என்று இன்னைக்கு உங்கள் விதி இருந்திருக்கிறது.” என்று சொல்லி விட்டு ஓடிவிட்டான். அய்யர் விக்கித்து நின்றார்.

அந்த சிறுவன் தான் பின்னாலில் பெரியார் என்றழைக்கப்பட்ட ஈ.வெ.ராமசாமி.

**

சிறுவயதிலேயே தாய் தந்தையரை இழந்து விட்ட வெங்கட்ட நாயக்கர் தம் பன்னிரெண்டாம் வயதிலேயே கல் தச்சர்களுக்கு எடுபிடியாக கூலி வேலைக்கு போகத்தொடங்கினார். அதில் கிடைத்து வந்த சொற்ப வருமாணத்தைக்கொண்டு தன் வயிற்றை கழுவி வந்தார். சில நாட்கள் பட்டினி கிடந்து கொஞ்சம் பணத்தை சேமித்து வைத்து வந்தார்.

தன் பதினெட்டாவது வயதில் தன்னைப்போலவே எழ்மை நிலையில் இருந்த குடும்பத்திலிருந்து முத்தம்மாள் என்ற சின்னத்தாயம்மையரை மணம் புரிந்து கொண்டார் வெங்கட்டர். அம்மையாரும் கணவனின் துன்பத்தில் பங்குகொள்ள வேலைக்கு போகத்துணிந்தார். இருவரும் வேலைக்குப் போயும் மூன்று வேலையும் வயிறு நிறைய சாப்பிட முடியாது. ஏதோ சாப்பிட்டோ ம் என்ற நிலையில் தான் வாழ்க்கை ஓடியது.

சில ஆண்டுகள் ஓடியது. சிறுகச்சிறுக சேமித்த பணத்தைக்கொண்டு வண்டி,மாடு வாங்கினார் வெங்கட்டர். அப்போது அதிகம் வாகணங்கள் இல்லாத சமயமானதால்.. வாடகைக்கு வண்டியோட்டி கொண்டிருந்த வெங்கட்டருக்கு வருமாணம் கூடியது. சில சமயங்களில் பக்கத்து ஊர்கள் வரைக்கும் போய் வர பயணிகள் அழைப்பார்கள். தவிர்க்க முடியாது. போய் வருவார். சில மாதங்கள் இப்படியே ஓடியது.

மாதத்தில் இரண்டொரு நாட்களாவது வெளியில் இரவு நேரங்களில் தங்கி விடும்படி ஆகியது. இது சின்னத்தாயம்மையாருக்கு பிடிக்கவில்லை. தனியே வீட்டில் இருக்கவேண்டி இருந்தது. இரவு நேரங்களில் அப்படி தனித்து இருப்பது பயத்தை உண்டு பண்ணியது. கணவனிடம் தன் எண்ணத்தை வெளிப்படுத்தினார். அம்மையாரின் கூற்றில் இருக்கும் உண்மையை உணர்ந்துகொண்ட அவரும்.. தீவிரமாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார்.

வண்டி,மாட்டை விற்றுவிட்டு ஈரோட்டிலேயே சின்னதாக ஒரு மளிகைக்கடை வைத்தார் வெங்கட்டர். சின்னத்தாய்யம்மாளும் வீட்டில் நெல்லை குத்தி அரிசியாக்கி அருகில் இருந்த சந்தையில் கொண்டுபோய் விற்று வருவார். கணவன் மனைவி இருவரின் உழைப்பிலும் குடும்பம் பொருளாதாரத்தில் உயரத்தொடங்கியது. சின்ன மளிகைக்கடை பெரியதாகி.. மொத்தப்பொருட்கள் விற்கும் மண்டியானது.

கடுமையான உழைப்பும் நேர்மையான வியாபாரத்திறமையும் ஊருக்குள் வெங்கட்டருக்கு நன்மதிப்பைக்கூட்டியது. மணமாகி பல ஆண்டுகளாக அந்த தம்பதியினருக்கு மகப்பேறுக்கு மட்டும் வழியிலாமல் இருந்தது. வைணவத்தில் பற்றுகொண்ட அவர்கள் தங்களின் வேண்டுதல்களை அதிகமாக்கினார்கள். ஆன்மிகத்தின் பெயரில் நிறைய செலவும் செய்யத் தொடங்கினார்கள்.

பண்டிதர்களையும், பாகவதர்களையும் தங்கள் வீட்டுக்கே அழைத்து வந்து பஜனையும், கதாகாலச்சேமமும் நடத்தினார்கள். பத்து வருடங்களுக்குப் பின் சின்னத்தாய்யம்மையார் கருவுற்றார். தங்கள் வழிபட்ட திருப்பதி ஏழுமலையானின் அருள் தான் குழந்தைவரம் கிடைக்க காரணமானது என்று நம்பினார்கள். முதலில் பிறந்த ஆண்குழந்தைக்கு கிருஷ்ணசாமி என்று பெயரிட்டு மகிழ்ந்தனர்.

அக்குடும்பத்தில் இரண்டாவதாக 1879ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் நாளில் பிறந்தார் ராமசாமி. அவருக்கு இளையசகோதரிகள் இருவர்.

நான்கு குழந்தைகளுடன் வெங்கட்டர் மகிழ்ச்சியாய் இருக்க, கணவனை இழந்த அவரின் சித்தி ஒருவருக்கு பிள்ளை இல்லாமல் தனியாளாய் அவதி பட்டுக்கொண்டிருந்தார். அவர் வெங்கட்டரிடம் இரண்டாவது பிள்ளையை தனக்கு தத்துகொடுத்து விடும்படி கேட்டார்.

பாவம் ஆதரவற்ற அவருக்கு தன் மகனை தத்து கொடுத்து விடலாம் என்ற முடிவுக்கு வெங்கட்டர் வந்தாலும், குழந்தையின் தாயாகிய சின்னத்தாயம்மாளுக்கு இதில் இஞ்சிதும் விருப்பமில்லை. சரி.. தத்தாக இல்லாமல்.. பாட்டி வீட்டில் கொஞ்ச காலம் வளரட்டும் என்று மனைவியை சமாதானப்படுத்தி, இரண்டாவது பையன் ராமசாமியை தூக்கி கொடுத்து விட்டார்.

குழந்தையை கையில் வாங்கிக்கொண்ட வெங்கட்டரின் சித்தி கண்ணீர் நிறைந்த விழிகளுடன் நன்றி சொல்லிச்சென்றார். குழந்தை பாலுக்கு அழும்போதெல்லாம்.. புட்டியில் நிரப்பப் பட்டிருந்த ஆட்டு பாலை ஊட்டி வளர்க்கத்தொடங்கினார் பாட்டி.

குழந்தையே இல்லாமல்.. கிடைத்த குழந்தை ராமசாமியை ஏகத்துக்கும் செல்லம் கொடுத்து வளர்க்கலானார் பாட்டி. அங்கே வெங்கட்டநாயக்கரின் வீட்டில் வளர்ந்த கிருஷ்ணசாமிக்கு வித விதமான உணவுகள் கிடைத்தது. ராமசாமிக்கோ.., பழைய சோறும், ஊறுகாயும் தான் தினம் கிடைத்தது.

எல்லாவற்ரையும் கேள்விகேட்டு தன் அறிவு பசியை ஆற்றி வந்த சிறுவன் ராமசாமிக்கு, பாட்டிகொடுக்கும் பழைய சோறு வயிற்றுப்பசிக்கு போதுமானதாக இல்லை. அதனால்.. தெரிவில் சிந்திக்கிடக்கும் பொட்டுக்கடலை போன்ற தாணியங்களை பொறுக்கித் திண்ணத்தொடங்கினான்.

பள்ளி சேர்க்கும் வயது ஆனதும் அவளை பள்ளியில் சேர்த்தார்கள். அது திண்ணைப் பள்ளிக்கூடம். ஈரோடு நகருக்கு சற்று தள்ளி இருந்தது.

பள்ளியைச்சுற்றி வாணிபச் செட்டியார்கள், இஸ்லாமியர்கள், மற்றும் கிருஸ்தவ மக்களின் வீடுகள் இருந்தன. அந்த காலகட்டத்தில் இவர்கள் எல்லாம் புழங்கக்கூடாத மக்களாக கருதப்பட்ட சமயம். அதனால் ராமசாமி தினம் பள்ளி போகும் போது, பள்ளியைச்சுற்றி இருக்கும் வீடுகளுக்கு போகக்கூடாது என்று சொல்லி அனுப்புவார் பாட்டி.

ஆனால், பாட்டியின் எந்த அறிவுறையையும் எப்படியே ஏற்றுக்கொள்ளும் நிலையில் ராமசாமி இல்லை. “ஏன்.. அவர்களோடு பழகக்கூடாது. அவர்களும் நம்மைப்போலத்தானே இருக்கிறார்கள்?” என்று எதிர் கேள்வி எழுப்புவான். பாட்டியிடம் அவனது இப்படியான கேள்விகளுக்கு பதில் இருக்காது. “அது எல்லாம் காலங்காலமாக நடந்துவர சம்ரதாயம். அதை நாமலும் கடைப்பிடிச்சுட்டு வாரோம். அவ்வளவு தான்” என்று ஏதாவது கூறி சமாளித்து விடுவார்.

எந்த சமாதானங்களும் ராமசாமியை திருப்தி படுத்த வில்லை. அதனாலேயே பாட்டி எதையெல்லாம் கூடாது என்கிறாளோ அதை செய்து பார்த்து விடுவது என்று முடிவெடுக்கிறான்.

பள்ளிக்கூடத்தில் தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்க வெளியே தான் போக வேண்டி இருந்தது. வாத்தியார் ராமசாமி போன்ற சில சிறுவர்களை மட்டும் பள்ளிக்கு பின் பக்கம் இருந்த தன்னுடைய வீட்டுக்கு மட்டும் தண்ணீர் குடித்து வர அனுப்புவார். அப்பகுதியைச்சேர்ந்த ஏனைய சிறுவர்கள் வீட்டுக்கு அவர்களை போகவிடாமல் பார்த்துக்கொண்டார்.

வாத்தியார் வீட்டில் கொடுக்கும் தண்ணீர் டம்ளரை உதட்டில் வைத்து குடிக்க முடியாது. அன்னாந்து தான் குடிக்கவேண்டி இருக்கும். உதட்டில் வைத்தே குடித்துப் பழக்கப்பட்ட ராமசாமியால் அன்னாந்து குடிக்க முடியாது. சட்டை, வேஸ்டி என எல்லா வற்றையும் நனைத்துக்கொண்டுதான் வகுப்பறைக்கு திரும்ப வேண்டி இருந்தது. அதனால் மற்ற மாணவர்களின் கேலிக்கு ஆளாக வேண்டி இருந்தது. வீட்டுக்கு வந்து தண்ணீர் குடிக்கலாம் என்றாலும் வீடு தொலைவில் இருந்தால் அதுவும் முடியாமல் போனது.

ஒரு முறை வாத்தியார் வீட்டுக்குச் செல்லாமல் தன்னுடன் படிக்கும் வேறு ஒரு பையனின் வீட்டுக்குச் சென்றான் ராமசாமி. அங்கே அன்னாந்து குடிக்கவேண்டிய கட்டாயமில்லை. அதனால் உதட்டில் வைத்தே தண்ணீர் குடித்தான். எளிமையாக உபசரித்த அம்மக்களின் அனுகு முறை இவன் கவனத்தை ஈர்த்தது.

ஒரு நாள் பழக்கம் தினம் தொடர்ந்தது. பள்ளியைச்சுற்றி இருந்த அனேகர் வீடுகளுக்கும் இவன் போய் வரத்தொடங்கினான். ஒரு வீட்டில் இவனை அடையாளம் கண்டுகொண்டு, நீ இன்னாரின் பிள்ளை தானே.. இங்கெல்லாம் வந்தால் உங்க வீட்டில் ஒன்றும் சொல்ல மாட்டார்களா.. என்று ஒர் அம்மாள் விசாரிக்க, ஒன்னும் சொல்ல மாட்டார்கள் என்று சொல்லிச் சமாளித்தான் ராமசாமி.

விசயம் வீட்டினர் காதுகளுக்கு எட்டியது. பாட்டியின் வளர்ப்பு சரியில்லாமல் போனதால் தான் பையன் இப்படி ஆகிவிட்டான் என்று புலம்பத்தொடங்கினார் சின்னத்தாயம்மாள். தத்துகொடுக்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டு ராமசாமியை தங்களுடனே அழைத்து வந்து விட்டார்கள். சின்னத்தாயம்மையார் வருத்தப்பட்ட அளவுக்கு வெங்கட்ட நாயக்கர் வருத்தப்படவில்லை. வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த காரணத்தால் பலதரப்பட்ட மக்களிடமும் பழகிய அனுபவம் வாய்ந்த அவர்,”அப்படியெல்லாம் பழகக்கூடாது. அது தவறு” என்பதோடு தனது கண்டிப்பை நிறுத்திக்கொண்டார்.

தன் வீட்டுக்கு அழைத்து வந்ததோடு திண்ணை பள்ளிக்கூடத்துக்கு முழுக்குப் போடப்பட்டது. ஆனாலும் ராமசாமியை மாற்ற முடியவில்லை. பழைய நண்பர்களை பார்க்க போய் விடுவார். அவர்களுடனே விளையாட்டு, அவர்கள் கொடுக்கும் திண்படங்களையும் வாங்கிச்சாப்பிடுவது என்று நாட்கள் நகரத்தொடங்கியது.

ஒருமுறை இஸ்லாமியர் வீட்டில் ஏதோ பண்டம் வாங்கி சாப்பிட்டது தெரிந்ததும், கொதித்துப் போனார் சின்னத்தாயம்மையார். பழகக்கூடாதவர்களுடன் பழகி பையன் கட்டுக்கடங்காத காவாலியாக மாறிக்கொண்டிருப்பதாக பெரிதும் துயரப்பட்டார். அடியாத மாடு படியாது என்று முடிவுகட்டிய அவர், ராமசாமியின் காலில் இரும்பு வளையத்தை மாட்டிவிடுவார்கள். அதனுடன் இணைக்கப்பட்ட சங்கலியின் மறு முனை சதுரமான மரக்கட்டையுடன் இணைக்கப்பட்டிருக்கும். அந்த கட்டையையும் கையில் கொடுத்து விடுவார்கள். இந்த தண்டனைக்கு முட்டி போடுதல் என்று பெயர்.

அதனை மாட்டிவிட்டால் நடக்கவே சிரமப்பட வேண்டி இருக்கும் போது எப்படி விளையாட முடியும். அடங்காப்பிடாரனாக அலையும் குழந்தைகளுக்குத்தான் இந்த முட்டி போடும் தண்டனை கொடுக்கப்படும். அப்படி தண்டனை அடையும் சிறுவர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி விடுவார்கள். வெளியில் வந்தால் மற்ற சிறுவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாக வேண்டி இருக்கும். இவை எதையும் இவன் பொருட்படுத்துவது கிடையாது. ராமசாமி அடங்குவதாக தெரியவில்லை. பலகையை தோளில் போட்டுக்கொண்டு, அப்படியே வீதிக்கு வந்து விளையாடும் மற்ற சிறுவர்களுடன் கலந்து விடுவான். என்ன செய்தும் வீட்டுக்குள் அடங்க மறுப்பவனை மீண்டும் பள்ளிக்கு அனுப்புவது என்று முடிவு செய்கிறார்கள் பெற்றோர்.

இம்முறை ஆங்கில வழிக்கல்வி கற்க அனுப்பப்பட்டான். அங்கும் அவனுக்கு படிப்பில் கவனம் போகவில்லை. ஏகத்துக்கும் குறும்பு செய்வதும், தனக்கான மாணவர்களை கோஷ்டி சேர்த்து வம்பு செய்வதுமாக கழிந்தது நாட்கள். இவனது தொல்லை பொருக்க மாட்டாமல் தான் பள்ளிக்கு அனுப்பினார்கள். அங்கேயும் இவது தொல்லைகள் தொடரவே செய்தது. சகமாணவர்களை அடிப்பது. அவர்களிடன் வம்பு செய்வது என்று ஏகப்பட்ட புகார்கள் வீட்டுக்கு போகத்தொடங்கியது.

ஒவ்வொரு முறையும் இவன் சேட்டை செய்து மாட்டியவுடன், “இனி இப்படி செய்ய மாட்டேன்” என்று ஆயிரம் முறை எழுதி வரும்படி தண்டனை தரப்பட்டது. நல்லபிள்ளையாக எழுதி விடுவான். மீண்டும் தன் சேட்டையை தொடர்வான். பள்ளியில் நடத்திய பாடத்தை விட, இவன் எழுதிய இம்போர்ஸிசன் நோட்டுகளின் எண்ணிக்கை அதிகம். ஒரு முறை வாத்தியாரையும் அடித்து விட்டான்.

செய்தி வீட்டுக்கு வந்ததும், ஏற்கனவே ஒரு முடிவுக்கு வந்திருந்த அவனது அப்பா வெங்கட்டர், ராமசாமியின் பள்ளிப்பை பரணில் ஏற்றினார். படிப்பு நிறுத்தப்பட்டது. ஒழுங்காக படித்து வரும் மூத்த மகன் கிருஷ்ண சாமி போல் இல்லாமல், இளைய மகனின் வாக்கை வீணாகி விட்டதே என்று புலம்பி, புலம்பியே ஓய்ந்து போனார் சின்னத்தாயம்மையார். மனைவின் புலம்பலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பையனை மண்டிக்கு அழைத்துப்போவதாக சொல்லி விட்டார் வெங்கட்டர்.

அப்படி கடைக்கு அழைத்து வந்த பின் தான் தொடக்கத்தில் படித்த சம்பவம் நடந்தது. தன் மண்டியில் இருந்து வெளி ஊர்களுக்கு போகும் மூட்டைகளில் விலாசம் எழுதும் வேலை தரப்பட்டது. கொடுத்த வேலையை ஒழுங்காக செய்து வந்தான். அப்படியே மஞ்சள், மிளகாய் போன்றவற்றை கடை வாசலில் நின்று கூவி ஏலம் போட வேண்டும். அதையும் சரியாக செய்யத்தொடங்கினான். தனது மண்டிக்குள் வந்துவிட்ட எவரையும் வெறும் கையுடன் வெளியே போக விடமாட்டான். எந்த வியாபாரியாக இருந்தாலும் பேச்சு சாதூரியத்தால் கவுத்தி விடுவான் ராமசாமி.

மகனின் வியாபாரத்திறமை கண்டு மகிழ்ந்து போனார் வெங்கட்டர். படிப்பு வராவிட்டாலும் வியாபரத்தில் மகன் திறமையாக நடந்துகொள்வது அறிந்து மகிழ்ந்து போனார் சின்னத்தாயம்மையார்.
(தொடரும்..)
——–000————- *Download As PDF*

No comments: