Saturday 20 June 2009

5. ஈரோட்டுக்கு குட்பை!

என்ன ஏது என்று அறிய முடிவதற்குள் குழந்தை இறந்து போனது. பத்துமாசம் சுமந்து பெற்ற சிசு.. ஆறு மாதகாலம் அதன் ஒவ்வொரு அசைவையும் கண்டு உணர்ந்து ரசித்து மகிழ்ந்த நிமிடங்கள்.. அச்சிசுவின் சிரிப்பு, அதன் கண்கள், முகச்சாயல் என எல்லாவற்றையும் ஒப்பிட்டுப் பார்த்து மகிழ்ந்த கணம்.. எல்லாம் சேர்ந்து மனதை பெரிதும் துயரத்தில் ஆழ்த்தியது. குழந்தையின் இழப்பை நினைத்து துவண்டு போய் இருக்கும் நாகம்மையின் முன்னால் தனது சோகத்தை காட்டிக்கொள்ளக்கூடாது என்று ராமசாமி முடிவுக்கு வருகிறார். தன் வருத்தங்களை மறைத்து துணைவியாருக்கு ஆறுதல் சொல்கிறார்.

எத்தனை ஆறுதல் சொன்னாலும் இழப்பின் வலி பெரியது இல்லையா..? தொலைந்து போன பொருளா திரும்ப கிடைத்து விடும் என்று நம்பிக்கை கொள்வதற்கு..? உயிர் ஆயிற்றே.. அதுவும் தன் வயிற்றில் சுமந்து, உள்ளிருக்கும் உயிருக்கு இது ஆகாது இது ஆகும்.. என்று பார்த்து பார்த்து உணவருந்தியதெல்லாம் வீணாகிப்போனதே.. பட்டுப்போன்ற பிஞ்சு உயிரை இதே கையில் தூக்கி எத்தனை முறை உச்சிமோந்திருப்பேன். இனி அந்த சுகம் எப்போது வாய்க்கும். வலி நோக பெற்றெடுத்தது மண்ணுக்கு தாரைவார்க்கத்தானா.. மனதில் தோன்றும் எண்ணங்களை கட்டுப்படுத்த முடியவில்லை. எதிலும் நாட்டமற்றுப் போனது. வெறித்த பார்வை. வீட்டின் கூடத்து தூணிலும், சமையலறையின் புகையேறிய சுவற்றிலும் சாய்ந்து உட்காந்துகொள்ளுதல் வாடிக்கையாகிப் போனது.

பிள்ளையை இழந்தவளை இப்படியே விட்டு விடுமா சொந்தங்கள். தொடர்ச்சியாக ஆறுதல் கூறினார்கள். மகவை இழந்த பல தாய்மார்களின் கதைகள், சிசுவிலேயே இறந்து பிறந்த குழந்தகைகள் பற்றிய செய்திகள் என்று நாகம்மையை தேற்றுவதற்கான பல வழிகள் கண்டுபிடிக்கப்பட்டு.. கதைகளாக அவருக்கு சொல்லப்பட்டது. ஆயினும் சில மாதங்கள் துக்கத்திலிருந்து மீள முடியாமல் இருந்தார் நாகம்மை.

இந்த சமயத்தில் வீட்டுக்கு வந்து சோகமா இருக்கும் மனைவியையும் மற்றவர்களையும் பார்த்துக்கொண்டு இருக்க பிடிக்காமல்.. ஆற்றுமணலில் நண்பர்களுடன் கூடி அரட்டைக்கச்சேரி, மது விருந்து என்று நேரத்தை செலவிட்டு விட்டு தாமதமாக வீடு வந்து சேரலானார் ராமசாமி. நண்பர்களுடனான விவாதத்தில் தனது பகுத்தறிவு கருத்துக்களை கூர்தீட்டிக்கொண்டார்.
குடும்பம் குழந்தை குட்டிகள் என்று இருந்ததால் தான் பலர் சமூக மாற்றத்திற்கான கருத்துக்களில்
தான் அறிந்த வரை எல்லா மனிதர்களும் தன்னைப்போல பல்வேறு கேள்விகளை கேட்டுக்கொண்டு இருந்து, திருமணம், குழந்தைகள் என்றான பிறகு தான் பின் வாங்கி இருக்கிறார்கள் என்பதும், இது மாதிரி உறவுச்சிறைக்குள் மாட்டிக்கொள்ளாத வரை தன் நண்பர்கள் எல்லோருமே மாற்றுச்சித்தனையுடன் தான் இருந்திருக்கிறார்கள், குடும்பம் குழந்தை குட்டி என்று ஆன பிறகு இச்சமூக சக்கரத்தை சுற்றும் செக்கு மாடுகள் போல மாறியிருக்கிறார்கள் என்பதையும் உணர்ந்து கொண்டார் ராமசாமி. நண்பர்களுக்கு மது வாங்கி கொடுத்தாலும் ராமசாமி குடிப்பதில்லை. அதற்கொரு காரணமும் இருந்தது. சாதாரணமான நிலையில் தன் கருத்துக்களை ஆமோதித்து பேச மறுத்தவர்கள் எல்லாம் குடிபோதையின் உண்மைகளை, தன் கருத்துக்கு வலுசேர்க்கும் விதமாக அவர்கள் பேசியதும், அவர்களுக்குள் இருந்த புராண புரட்டுகள் குறித்த கேள்விகளையும் தனது தேடலுக்கான துவக்கத்தை நண்பர்களிடத்திலேயே தொடங்கினார்.

கிருஷ்ணசாமியின் குழந்தைகளையும் அடுத்த பக்கத்து வீட்டு குழந்தைகளையும் கொஞ்சுவதில் சிறிது ஆறுதல் அடைந்தது நாகம்மையின் மனசு. நாட்கள ஆக ஆக பழைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலானார். ராமசாமி ஆற்றுமணலில் அடிக்கும் கூத்து வீட்டுக்கு செய்தியாக வந்து விடும். இரவு தாமதமாக வீட்டுக்கு வரும் கணவரை ஊதிக்காட்டச்சொல்லி வற்புறுத்துவார் நாகம்மை. ஆனால்.. ராமசாமியோ ஊதிக்காட்டாமல் வாயை மூடிக்கொண்டு முரண்டு பிடிப்பார். வேறு வழி இன்றி ராமசாமியின் மூக்கை இறுக்கப்பற்றிக்கொள்வார் நாகம்மை. சில நிமிடங்களிலேயே மூச்சு விடுவதற்காக வாயைத்திறந்து தானே ஆகவேண்டும். இப்படியே தினமும் சோதனை போட்டுவந்தார் நாகம்மை. பழைய குறும்புத்தனமான நாகம்மையாக அம்மையார் இயல்புக்கு மாறி வருவது ராமசாமிக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.

மாமியார் மற்றும் அடுத்தவர்களின் ஆலோசனையின் பேரில் அடுத்த குழந்தை குறித்து ராமசாமியிடம் பேசினார் நாகம்மை. ஆனால்.. இனி குழந்தையே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருந்தார் அவர். ஒரே ஒரு குழந்தையாவது பெற்றுக்கொள்ளுவோம் என்ற நாகம்மையின் ஆசையை மறுதலித்தார் ராமசாமி. பெற்றால் தான் பிள்ளையா.. நமக்கு இருக்கும் சொத்து பத்துக்கு நூறு குழந்தைகளை நாம் தத்து எடுத்து வளர்க்க முடியும் என்று கண்டிப்பாக சொல்லி விட்டார். கணவரின் பிடிவாத குணம் பற்றி அறிந்திருந்த நாகம்மை அதன் பின் குழந்தை பெற்றுக்கொள்ளுவது குறித்து அவரிடம் பேசவே இல்லை.

ராமசாமியின் கவனம் முழுவதும் வியாபரத்திலேயே இருந்தது. வியாபரமும் பெருக ஆரம்பித்தது. பணம் சேரச்சேர.. பெரும் செல்வந்தர்களின் சேர்க்கையும் அதிகரிக்கத்தொடங்கியது. மிராசுதார்கள், ஜமீந்தார்கள், அரசு உயர்பதவியில் இருப்பவர்கள் எல்லாம் ராமசாமியைத் தேடி வரலானார்கள். இவர்கள் எல்லாம் மதுபழக்கம் உள்ளவர்கள். குடிக்கும் பழக்கம் ராமசாமிக்கு இல்லாது போனாலும் தினம் நான்கைந்து பாட்டில் பிராந்திக்கு ஆடர் செய்வார். அந்தகாலத்தில் மாதம் இதற்கென குறைந்தது ஐம்பது ரூபாய் ஒதுக்கி வைத்து விடுவார்.

நிலவொளி காலம் வந்தால்.. இவர்களின் சந்தோசத்திற்காக விலைமாதர்களையும் ஆற்றுமணலுக்கு வரச்சொல்லி விடுவார் ராமசாமி. கடைச்சாவியை வீட்டிற்கு கொடுத்து விட்டு ஆற்றுமணலுக்கு வந்து விடுவார். ஆட்டம் பாட்டம் என்று இரவுப் பொழுது முழுவதும் கேளிக்கையாக ஆற்றுமணலிலேயே போகும். அந்த சமயங்களில் இரவு உணவு ராமசாமியில் வீட்டிலிருந்து தான் வரும். மாமனார்,மாமியாருக்குத் தெரியாமல்.. உணவு சமைத்து பின்வாசல் வழியாக வண்டியில் அனுப்பி வைப்பார் நாகம்மை. பல சமயங்களில் காலையில் வீட்டுக்கு வந்து கடைச்சாவியை வாங்கிக்கொண்டு கடைதிறக்கப் போய் விடுவார்.

நண்பர்களுக்காக இப்படி செலவு செய்தாலும் சிக்கனத்தை வீட்டில் கடை பிடிக்கச் சொல்லி வற்புறுத்துவார். காபியில் திக்காக இருக்கும் பாலுக்காகவும், சாப்பாட்டில் கூடுதலாக சமைக்கப்பட்ட பதார்த்தத்திற்காகவும் பல சமயங்களில் குறைபட்டுக்கொள்வார். காபி என்பது சூடாக குடிக்க ஒரு பாணம் அவ்வளவு தான். எடைகட்டாமல் பால் சேர்க்க வேண்டும் என்பதில்லை. நாம் குடிக்கத்தான் என்றாலும் இவ்வளவு கெட்டியான பாலாக இருக்கக்கூடாது. அதில் தண்ணீர் கலந்தால்.. கூடுதலாக கிடைக்குமே என்றும், சாதம், ஒரு குழம்பு, ஒரு கரி போதும் என்று அடிக்கடி தன் சிக்கனத்தை வெளிப்படுத்தி வந்தார்.

இந்த சமயத்தில் தான் தன் கருத்துக்களை வெறும் பேச்சுடன் நிறுத்திக்கொள்ளாமல்.. செயல்களிலும் காட்டலானார். பஜனை நடக்கும் வீடுகளுக்குள் அதிரடியாக நுழைந்து தம் கருத்துக்களை கேள்வியக வைப்பதும், அச்சமயத்தில் மிக உயர்ந்த குடிகளாக மதிக்கப்பட்ட பார்ப்பனர்களை கண்டு அஞ்சாமல் அவர்களை தொட்டு விடுவதும் என்று ஏகப்பட்ட செயல்களை செய்யலானார். ஒரு பக்கம் இவரோடு இது போன்ற காரியங்களில் ஈடுபடும் காலிக்கூட்டம்(இது தமிழர் தலைவர் நூலில் சாமி.சிதம்பரனார் பயன்படுத்திய சொல்லாடல் பக்கம்-48), இன்னொரு புறம் அரசாங்க அதிகாரிகள், மிராசு,ஜமீந்தார்கள் என்று செல்வந்தர்களின் கூட்டம். ராமசாமியின் சேட்டைகள் அதிகரிக்கத்தொடங்கி இருந்தது.

வெங்கட்டருக்கு தகவல் வந்தது. ராமசாமியை அழைத்து சத்தம் போட்டார். எப்போதும் மவுனமாக இருக்கின்ற ராமசாமி தந்தையை எதிர்த்து பேசினார். தன் சந்தேகங்களுக்கு விடை தெரியாதவரை தனது இப்போக்கை மாற்றிக்கொள்ள முடியாது என்று உறுதியாக கூறினார். எப்போதும் தன்னிடம் மட்டுமாவது அமைதியாக இருக்கும் மகன் இப்போது எதிர்த்து பேசும் அளவுக்கு வந்து விட்டானே.. மற்றவர்களை வேண்டுமானால் அவன் தன் வாதத்திறமையால் வெற்றி பெற முடியும். தன்னிடம் அது நடக்குமா.. வெங்கட்டரும் விடவில்லை. தொடர்ந்து எதிர்ந்து வந்த ராமசாமியின் போக்கு பிடிக்காமல் கடுமையான சண்டையாகிப்போனது இருவருக்குள்ளும். வார்த்தைகள் தடித்து விழுந்தது. வீட்டில் இருந்த எல்லா உறவுகளுக்கும் ராமசாமியை அடக்க.. வெறுத்துப்போய் அமைதியானர்.

தன் எண்ணங்களை.. தன் விருப்பப்படி சொல்லவோ, செயல்படவோ விடாத வாழ்க்கை மீது வெறுப்பு தோன்றியது. இங்கே இருந்து கொண்டு இப்படி தினம் தினம் எல்லாவற்றிற்கும் பதில் சொல்லிக்கொண்டிருப்பதை விட தேசாந்திரம் போய் விடலாம் என்ற எண்ணம் அதிகமானது. தன்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது. தனக்கு விருப்பமான படி வாழ்க்கையைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

தேசாந்திரம் என்பது குடும்பம் குட்டி போன்ற உறவுகளையும், பணம், பொன், போன்ற பொருள் உடைமைகளையும் உதறிவிட்டு துறவு வாழ்க்கையை மேற்கொள்ளுவது. அதுவும் அந்த காலகட்டத்தில்.. வடக்கு நோக்கி செல்லும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. தானும் வடக்கு நோக்கி போய் விடலாம் என்ற முடிவுக்கு வருகிறார் ராமசாமி. வடக்கு என்றால் எங்கே போவது என்ற குழப்பம் வந்தது. ஏன் குழம்ப வேண்டும் எல்லா சன்நியாசிகளும் காசி காசி என்று பாராயணம் செய்யும் வாரணாசிக்கே போய் விடுவது என்ற பதிலும் உடனே கிடைத்தது.

வாரணாசிக்கு போனதில்லையே தவிர அந்த நகரின் பெருமையைப் பற்றி, புரோகிதர்களும், பண்டாரங்களும் சொல்ல கேட்டிருந்தார். உலகில் பிறந்த எல்லா மனிதனின் பாவங்களை போக்கும் புனித கங்கை அங்கே தான் ஓடிக்கொண்டிருக்கிறது. மகிழ்ச்சியில் வாழும் மனிதர்கள் அங்கே தான் இருக்கிறார்கள். அந்நகரில் இறந்தால் நேரடியாக சொர்க்கத்துக்கு போகும் வாய்ப்பு கிடைக்கும். பாவங்கள் இல்லாத நகரம் அது. இப்படி எத்தனையோ பெருமைகளை சொல்லி கேட்டிருக்கிறார் ராமசாமி.

ஆனால்.. நிசத்தில்.. அந்த அனுபவமும், அந்த நகரும் எப்படி இருந்தது?
(தொடரும்-6) *Download As PDF*

No comments: